Published:Updated:

`யாரைக் கேட்டு இப்படிச் செய்தாய்’ - ஷூ காலால் கழுத்தில் மிதித்த ஓனர்; வழக்கு பதிவுசெய்த போலீஸ்

பெங்களூரில் தன் ஊழியர்களை சரமாரியாகத் தாக்கும் ஒரு நிறுவனத்தின் ஓனர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வைரல் வீடியோ
வைரல் வீடியோ

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஹெச்.எஸ்.ஆர் லே அவுட் (HSR lay out) என்ற பகுதியில் செயல்பட்டு வருகிறது பெங்களூரு செக்யூரிட்டி ஃபோர்ஸ் என்ற தனியார் நிறுவனம். கடந்த திங்கள் கிழமை இந்த நிறுவன அலுவலகத்தில் நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகிப் பார்ப்பவர்களைப் பதறவைத்துள்ளது.

பெங்களூரு செக்யூரிட்டி ஃபோர்ஸ்
பெங்களூரு செக்யூரிட்டி ஃபோர்ஸ்

பெங்களூரு செக்யூரிட்டி ஃபோர்ஸின் நிர்வாக இயக்குநராக இருக்கும் சலீம் கான் என்பவர், தனக்குக் கீழ் வேலை செய்யும் இரண்டு ஊழியர்களை சரமாரியாகத் தாக்குகிறார். அவர்களைத் தரையில் போட்டு தன் ஷூ காலால் மிதிக்கிறார். பிறகு, கீழே இருக்கும் ஊழியரின் கழுத்தில் ஏறி பலமாக மிதிக்கிறார். எதுவும் செய்யமுடியாத அந்த ஊழியர் அப்படியே தரையில் படுத்துத் துடிக்கிறார். அடுத்த வீடியோவில், மற்றொரு ஊழியரின் கழுத்திலும், முகத்திலும் ஷூ காலால் மிதித்து ஏறிக் குதிக்கிறார் ஓனர் சலீம் கான்.

கடனுக்காக விவசாயியைத் தாக்கி மிளகாய்ப் பொடி தூவிய நபர்! - வைரல் வீடியோவால் கைது

அப்போது, ``யாரைக் கேட்டு இப்படிச் செய்தாய், இதைச் செய்யச் சொல்லி உனக்கு யார் கட்டளையிட்டது” என சலீம் இந்தியில் கேட்டதற்கு, ``இனி என் வாழ்நாளில் இப்படி ஒரு தவற்றை செய்யவே மாட்டேன் சார். என்னை விட்டுவிடுங்கள் சார்” என அந்த ஊழியர் கெஞ்சுகிறார். அப்போதும் விடாத சலீம் ஊழியரைத் தொடர்ந்து துன்புறுத்துகிறார். மற்றொரு ஊழியர், `எனக்கு எதுவும் தெரியாது, என்னை எவ்வளவு வேண்டுமானாலும் அடித்துக்கொள்ளுங்கள் ஆனால், எனக்கு எதுவும் தெரியாது சார்’ எனக் கூறுகிறார்.

வைரல் வீடியோ
வைரல் வீடியோ

சலீம் கானின் இந்தக் கொடூரச் செயல் கடந்த இரண்டு நாள்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பெங்களூருவைச் சேர்ந்த `நியூஸ் 9' என்ற ஊடகம் வெளியிட்டுள்ளது. வீடியோவை யார் எடுத்தது, பாதிக்கப்பட்ட ஊழியர்களின் தற்போதைய நிலை என்ன போன்ற எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக சலீம் கான் மற்றும் அவருடன் சேர்ந்த ஐந்து பேர் மீது பெங்களூரு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், வீடியோ வைரலான பிறகு சலீம் கான் தலைமறைவாகியுள்ளார். சலீமும், பாதிக்கப்பட்ட ஊழியர்களும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பெங்களூரு வந்து பணிபுரிந்து வந்துள்ளனர்.

ஓனர் சலீம் கான்
ஓனர் சலீம் கான்

இந்த நிலையில், மாயமான சலீம் கானை தேடும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது பெங்களூரு போலீஸ். ``வைரலான வீடியோவை அடிப்படையாகக் கொண்டு நாங்களாகவே முன்வந்து, சலீம் உட்பட 6 பேர் மீது ஹெச்.எஸ்.ஆர் காவல்நிலையத்தில் சட்டப்பிரிவு 307-ன் (கொலை முயற்சி) கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம்’ என பெங்களூரு கமிஷனர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.