தெலங்கானாவின் சைபராபாத் காவல்துறைக்கு, ஆன்லைன் மூலம் பாலியல் தொழில் நடைபெறுவதாகப் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து சைபராபாத் காவல்துறை, சிறப்பு அதிரடிக்குழு மற்றும் உள்ளூர் காவல்துறையுடன் இணைந்து நடத்திய சோதனை வேட்டையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியிருக்கினறன. அதில், செல்போன் அடிப்படையிலான அப்ளிகேஷன்கள் மற்றும் சமூக ஊடக தளங்கள் மூலம் வாடிக்கையாளர்களை அணுகியுள்ளனர்.
அவர்களிடம், ஆன்லைன் மூலமே பணத்தைப் பெற்று, குறிப்பிட்ட பெண்ணிடம் நிர்வாண வீடியோ கால் செய்யத் தொடங்கியுள்ளனர். வாடிக்கையாளர்களின் விருப்பத்தின் அடிப்படையில், OYO அறைகளிலும், இன்னும் சில பிரபல ஹோட்டல்களிலும் அவர்களுக்கான ஏற்பாடுகள் செய்து, ஆயிரக்கணக்கில் பணம் பெற்றிருப்பது தெரியவந்திருக்கிறது.

மேலும், இந்தப் பாலியல் தொழிலுக்குப் பல மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டுப் பெண்கள் என 14,190 பெண்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது 39 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, பிரபல ஹோட்டல் மேலாளர் உட்பட 17 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். கைதுசெய்யப்பட்டவர்களின் வாகனங்கள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து பாதிக்கப்பட்ட 14,190 பெண்களும் மீட்கப்பட்டிருக்கின்றனர்.
இது தொடர்பாக சைபராபாத் போலீஸ் கமிஷனர், ஸ்டீபன் ரவீந்திரன் கூறுகையில்,"நகரத்திலுள்ள சுமார் 20 ஹோட்டல்களிலும், எண்ணற்ற OYO அறைகளிலும் இந்த பாலியல் தொழில் நடந்திருக்கிறது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் ஒருவருக்கொருவர் தொடர்புகொண்டு, வாடிக்கையாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடையே பாலமாகச் செயல்பட்டிருக்கிறார்கள். மேலும், அவர்களுக்கான பயணம் மற்றும் தங்குமிடத்தை ஏற்பாடு செய்திருப்பதும் தெரியவந்திருக்கிறது. இது குறித்து மேலும் தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.