Published:Updated:

`ரயிலில் கொல்கத்தா; சொந்த ஊரில் தலைமறைவு!' - அம்பத்தூர் கொலையில் கைதான பீகார் இளைஞர்

`மாலிக் பிரபாகரன் மர்கையா' என்று பீகார் இளைஞர் சென்னை போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

பீகார் வாலிபரால் கொல்லப்பட்ட பிரபாகரன்
பீகார் வாலிபரால் கொல்லப்பட்ட பிரபாகரன்

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை அத்திப்பட்டு, ஏ.எஸ்.ஆர் நகரில் கம்பெனி நடத்திவந்தவர் பிரபாகரன். இவர், கடந்த 22-ம் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இவரைக் கொலை செய்த குற்றத்துக்காக பீகாரைச் சேர்ந்த ரோசன், 17 வயது சிறுவன் ஆகியோரை அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். போலீஸாரிடம் ரோசன் அளித்த வாக்குமூலத்தில், `என்னுடைய சொந்த ஊர் பீகாரில் உள்ள நாளந்தா மாவட்டம் கெவாளி கிராமம். நான் பள்ளிக்கு சென்றதில்லை. ஊரில் கிடைத்த வேலைகளைச் செய்துவந்தேன். போதிய வருமானம் கிடைக்கவில்லை.

ரோசன்
ரோசன்

இதனால் வேலை தேடி சென்னை வந்தேன். சென்னையில் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த சிலர் வேலை செய்துவருகின்றனர். அவர்களுடன் தங்கியிருந்தேன். கடந்த 5 நாள்களுக்கு முன்தான் பிரபாகரன் என்பவரிடம் நானும் 17 வயது சிறுவனும் வேலைக்குச் சேர்ந்தோம். துருப்பிடித்த இரும்புக் குழாய்களை கிளீன் செய்து பெயின்டிங் அடிப்பதுதான் எங்களுக்கு வேலை. தினமும் 150 ரூபாய் சம்பளம் என்று பிரபாகரன் கூறியிருந்தார்.

வேலைக்குச் சேர்ந்த 2வது நாளில் 17 வயது சிறுவனுக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது. இதனால் அவனை அழைத்துக் கொண்டு பிரபாகரன் மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது டாக்டருக்கு பீஸ் கொடுக்க பணத்தை எடுத்துள்ளார் பிரபாகரன். அதை அந்தச் சிறுவன் பார்த்துள்ளார். பிறகு கம்பெனிக்கு வந்ததும் என்னிடம் அவன் தகவலைச் சொன்னான். உடனே, நான் சம்பளப் பணம் கேட்டேன். அதற்கு 15 நாள்களுக்கு ஒருமுறைதான் சம்பளம் தருவேன் என்று பிரபாகரன் கூறினார். மேலும், தன்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்தார்.

இன்ஸ்பெக்டர் விஜயராகவனுடன் போலீஸ் டீம்
இன்ஸ்பெக்டர் விஜயராகவனுடன் போலீஸ் டீம்

அதன்பிறகு அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். நானும் 17 வயது சிறுவனும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போதுதான் பிரபாகரனிடம் அதிகளவில் பணம் இருக்கிறது. அதை எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்குச் சென்றுவிடலாம் என்று முடிவு செய்தோம். உடனே பிரபாகரனிடம் மீண்டும் நான் சம்பளம் கேட்டு தகராறு செய்தேன். எங்களுக்குள் தகராறு நடந்த சமயத்தில் இரும்பு ராடை எடுத்து பிரபாகரனின் பின்தலையில் அடித்தோம். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி விழுந்தார். உடனே நான், `மார்கே மாலிக் மர்கையா' என்று சிறுவனிடம் கூறினேன்.

அதன்பிறகு அவரிடமிருந்த 4,500 ரூபாயையும் விலை உயர்ந்த செல்போனை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தோம். ஊருக்குச் சென்றுவிட்டால் பிடிக்க முடியாது என்று கருதி சென்னையிலிருந்து ரயிலில் கொல்கத்தா சென்றோம். அப்போது பிரபாகரனின் செல்போன் மூலம் எங்களைப் பிடித்துவிடலாம் என்று கருதி அதை ஆற்றில் வீசினோம். பிறகு ஹவுராவில் எங்களின் செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டோம்.

வேலைக்கு சேர்ந்த 5வது நாளில் முதலாளியைக் கொன்ற வடஇந்திய இளைஞர்கள்! - அம்பத்தூர் அதிர்ச்சி

நாங்கள் இருவரும் கொல்கத்தாவில் இறங்கி சொந்த ஊருக்குச் செல்ல திட்டமிட்டோம். அப்போது சிறுவனின் உறவினர் மூலம் போலீஸார் பீகாருக்கு வந்திருக்கும் தகவல் எங்களுக்கு கிடைத்தது. உடனே ரயிலில் ஊருக்குச் செல்லாமல் பஸ்ஸில் சென்றோம். அதையும் போலீஸார் கண்டுபிடித்துவிட்டனர். இதனால் ஊருக்குச் செல்லாமல் பாதி வழியிலேயே இறங்கி பைக் மூலம் குறுக்குப் பாதையில் வீட்டுக்குச் சென்றோம். அங்கேயும் எங்களைத் தேடி போலீஸார் வந்துவிட்டார்கள்.

இதனால் அங்கிருந்து வேறு கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று தலைமறைவாக இருந்தோம். பகலில் சொந்த கிராமத்திலும் இரவில் உறவினர் வீட்டிலும் இருந்தோம். அதையும், சிறுவனின் உறவினர் மூலம் நாங்கள் பதுங்கியிருக்கும் இடத்தை போலீஸார் கண்டுபிடித்துவிட்டனர். இதனால், வேறு இடத்துக்குப் புறப்பட்டுச் செல்லும் வழியில் போலீஸார் எங்களை பிடித்துவிட்டனர்' என்று கூறியுள்ளார்.

பிரபாகரனின் செல்போன் மூலம் எங்களைப் பிடித்துவிடலாம் என்று கருதி, அதை ஆற்றில் வீசினோம். பிறகு ஹவுராவில் எங்களின் செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டோம்.
ரோசன்

பிரபாகரனைக் கொலை செய்யும்போது அவரின் ரத்தம் ரோசன், சிறுவன் அணிந்திருந்த உடையின் மீது விழுந்தது. அதையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், பிரபாகரனிடமிருந்து எடுத்த பணத்தை செலவழித்துவிட்டதாக ரோசனும் சிறுவனும் கூறியுள்ளனர். இவர்கள் இருவரையும் பீகார் வரை சென்று கைது செய்த இன்ஸ்பெக்டர் விஜயராகவன், சப் இன்ஸ்பெக்டர் முபராக் டீம்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.