Published:Updated:

பூனை ஸ்டைலில் திருட்டு! - மாட்டிக்கொண்ட ‘புல்லட்’ பாண்டிகள்!

ஒரு நாள் இரவு நிறைய வீடுகள் இருந்த பகுதி ஒன்றில் கன்னாபின்னாவென்று நிறுத்தப்பட்டிருந்த பைக்குகளுக்கு இடையே திருட்டுப்போன கறுப்பு நிற புல்லட் நிறுத்தப் பட்டிருப்பதைக் கண்டுபிடித்தார் சரவணகுமார்.

பிரீமியம் ஸ்டோரி
பூனை குட்டி போட்டதும், குட்டிகளைத் தூக்கிக்கொண்டு ஒவ்வோர் இடமாகச் செல்வதைப்போல சமீபத்தில் சென்னையில் புத்தம் புதிய புல்லட் பைக்குகளைத் திருடி, இடம் மாற்றி இடம் மாற்றி பதுக்கிவைத்து விற்பனை செய்துவந்த நூதன கும்பல் ஒன்றை போலீஸ் சுற்றிவளைத்துள்ளது! திருடன் - போலீஸ் நிஜக்கதை இதோ...

சென்னை ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தின் தலைமைக் காவலர் குமார் ஆகஸ்ட் மாதம், 6-ம் தேதி தனது புல்லட்டை எழும்பூர் அரசுப் பள்ளி அருகே நிறுத்தியிருந்தபோது அது காணாமல் போனது. இது குறித்து எழும்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார் குமார். அடுத்தடுத்த வாரங்களில் திருவல்லிக்கேணியில் ஒரு காவலர், சைதாப்பேட்டையில் ஒரு காவலர், தனிப்பிரிவில் ஓர் உதவி ஆய்வாளர் என காவல்துறையைச் சேர்ந்த நான்கு பேரின் புல்லட் பைக்குகள் திருடு போயின. அத்தனையும் கறுப்பு மற்றும் மெட்டாலிக் நிற பைக்குகள்.

முகம்மது சஃபி - சிபி
முகம்மது சஃபி - சிபி

68 புல்லட்கள் மாயம்!

அதிர்ச்சியடைந்த போலீஸார் இது குறித்த புள்ளிவிவரங்களை ஆராய்ந்தபோது, அவர்களுக்கு மேலும் ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், சென்னை கிழக்கு காவல் மண்டலத்தில் மட்டும் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் 68 புல்லட் பைக்குகள் திருட்டுப் போயிருந்தன. இவற்றின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய்! சுறுசுறுப்பானது போலீஸ் படை. நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி தலைமையில் எஸ்.ஐ-க்கள் சேவியர் கென்னடி, சுதாகர், தலைமைக் காவலர் சரவணகுமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. திருட்டு நடந்த இடங்களில் கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வுசெய்யப் பட்டன. துளியும் கிடைக்கவில்லை துப்பு. இதற்கிடையே காவலர் சரவணகுமாருக்கு, எழும்பூரில் திருடப்பட்ட காவலர் குமாரின் புல்லட் தொடர்பான கண்காணிப்பு கேமரா வீடியோ ஒன்று கிடைத்தது. அதில், பல்சர் பைக்கில் வரும் இளைஞர்கள் இருவர், புல்லட்டின் லாக்கைச் சில நொடிகளில் லாகவமாக உடைப்பதும், தொடர்ந்து மற்றோர் இளைஞர் அதை ஓட்டிச் செல்வதும் பதிவாகியிருந்தன. ‘சிக்கிவிட்டார்கள் திருடர்கள்...’ என்று ஆர்வத்துடன் அடுத்தடுத்த காட்சிகளை அவர் ஃபார்வேர்டு செய்ய... ஒன்றில்கூட புல்லட்டைக் காணோம்.

மாறாக, இரண்டு தெருக்கள் தாண்டியிருக்கும் கண்காணிப்பு கேமரா பதிவில் பார்த்தபோது அதே இளைஞர்கள் மீண்டும் பல்சரில் சென்றுகொண்டிருந்தார்கள். இடைப்பட்ட தூரத்தில் மாயமாகியிருந்தது புல்லட். பல்சரில் வந்த இளைஞர்கள் மாஸ்க், ஹெல்மெட் அணிந்திருந்தனர். பல்சர் பைக்கின் பதிவு எண்ணை ஆய்வுசெய்தபோது அந்த வண்டி கும்மிடிப்பூண்டியில் திருடப்பட்டது தெரிந்தது. இதைத் தவிர வேறு எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.

பூனை ஸ்டைலில் திருட்டு! - மாட்டிக்கொண்ட ‘புல்லட்’ பாண்டிகள்!

தொடர்ந்து வா... தொட்டுவிடாதே!

தொடர்ந்து தனிப்படை காவலர்களுக்கான வாட்ஸ்அப் குழு ஒன்றுக்கு இந்த புல்லட் திருட்டுகள் குறித்த தகவல்கள், சிசிடிவி பதிவுகள் ஆகியவற்றை அனுப்பினார் சரவணகுமார். பிற இடங்களில் நடந்த புல்லட் திருட்டுகள் குறித்தும் அதில் விவாதிக்கப்பட்டது. அப்போது திருடப்படும் புல்லட்கள், திருடப்பட்ட இடத்திலிருந்து ஓரிரு கண்காணிப்பு கேமராக்களில் பதிவாவதும், பிறகு அடுத்தடுத்த தெருக்களின் கண்காணிப்பு கேமராக்களில் புல்லட் இல்லாமல், திருடர்கள் வேறு பைக்கில் பயணிப்பதும் தெரியவந்தது. அப்போதுதான் காவலர்களுக்கு ஒரு விஷயம் பொறிதட்டியது. திருடப்பட்ட புல்லட்கள், அடுத்தடுத்த சில தெருக்கள் தள்ளி எங்கேயோ பதுக்கிவைக்கப்படுகின்றன என்பதை யூகித்தார்கள். அதாவது, போலீஸைக் குழப்பி, திசைதிருப்பவே இந்த ஏற்பாடு!

இந்தநிலையில்தான், ஒரு நாள் இரவு நிறைய வீடுகள் இருந்த பகுதி ஒன்றில் கன்னாபின்னாவென்று நிறுத்தப்பட்டிருந்த பைக்குகளுக்கு இடையே திருட்டுப்போன கறுப்பு நிற புல்லட் நிறுத்தப் பட்டிருப்பதைக் கண்டுபிடித்தார் சரவணகுமார். உடனடியாக அதைக் கைப்பற்றினால், திருடர்களைப் பிடிக்க முடியாது; அந்த புல்லட்டை எடுக்க வருபவர்களைவைத்து, மொத்த நெட்வொர்க்கையும் பிடித்துவிடலாம் என்று திட்டமிட்டார் அவர். மணியைப் பார்த்தார்... நேரம் நள்ளிரவு கடந்துவிட்டிருந்தது. அதற்குள் ஓர் அவசர அழைப்பு. உடனே அங்கிருந்து கிளம்பினார் சரவணகுமார்.

ஓரிரு மணி நேரம்தான். மீண்டும் அதிகாலையில் வந்து பார்த்தால், அந்த புல்லட் மாயமாகியிருந்தது. ஆக, புல்லட்டை காவலர் கண்காணிப்பதைப் போலவே காவலரையும் நோட்டம்விட்டிருக்கிறது திருட்டு புல்லட் நெட்வொர்க். கடுப்பானவர், உடனே அந்தப் பகுதிகளிலிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை பிரித்துமேய்ந்தார். அதில், அந்த புல்லட் எழும்பூர் வழியாக புதுப்பேட்டைக்குள் நுழைந்திருந்தது. ஆனால், அடுத்தடுத்த சில காட்சிகளில் வழக்கம்போல புல்லட் மிஸ்ஸிங்.

புல்லட்டில் சென்ற இளைஞர், இன்னொருவருடன் பல்சர் பைக்கில் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அப்போது, ‘குட்டிபோட்ட பூனை... எட்டு வீடு மாத்தும்’ என்ற பழமொழி சரவணகுமாருக்கு நினைவுக்கு வர, திருடர்கள் பூனையின் பாணியைப் பின்பற்றுகிறார்கள் என்பதை யூகித்தார் அவர்.

தொடர்ந்து கண்காணித்ததில் செப்டம்பர் இறுதி வாரம், அதிகாலையில் பல்சர் பைக்கில் வந்த அதே இளைஞர்கள், புதுப்பேட்டையிலிருந்து புல்லட்டை எடுத்துக்கொண்டு கலங்கரை விளக்கம் வழியாக நொச்சிக்குப்பம் சர்வீஸ் சாலையில் செல்லும் காட்சிகள் கிடைத்தன. இரண்டு நாள்கள் கழித்து அதே கறுப்பு புல்லட் கிழக்குக் கடற்கரை சாலையில் பூஞ்சேரி என்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருப்பதையும், அதில் வந்த இளைஞர் செல்போனில் பேசிக் கொண்டிருப்பதையும் கேமரா காட்சிகளில் பார்த்தார்.

தனிப்படைக்குத் தகவல் பறக்க... உடனே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அந்த டவர் லொகேஷனில் பதிவான செல்போன் சிக்னல்கள் ஆய்வு செய்யப்பட்டன. பூஞ்சேரியில் அந்த புல்லட் நிறுத்தப்பட்டிருந்த நேரத்தில் பதிவான சிக்னல்களைவைத்து விசாரணை நடந்தது. அதில் பைக் நிறுத்தப்பட்டிருந்த லொகேஷனில் துல்லியமாகச் சிக்கியது இளைஞர் ஒருவரின் செல்போன் எண். அதன் ஜி.பி.எஸ் லொகேஷனைப் பின்தொடர்ந்த போலீஸார், கோயம்பேட்டில் வைத்து அந்த இளைஞரை வளைத்தனர். அதற்குள் புல்லட் கைமாறியிருந்தது.

அந்த இளைஞர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சிபி என்பது தெரியவந்தது. அவரிடம் விசாரித்தபோதுதான் புல்லட் திருடர்களின் நெட்வொர்க்கும் தெரியவந்தது. காவலர் குமாரின் கறுப்பு நிற புல்லட் தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் அரசியல் பிரமுகர் ஒருவருக்கு விற்கப்பட்டிருந்தது. 45,000 ரூபாய் கொடுத்து அதை வாங்கியிருந்தார் அந்தக் கரை வேட்டி. ஆரம்பத்தில் பிடிகொடுக்காத அவரிடம், போலீஸ் தனது வழக்கமான பாணியில் பேசவே... ஒருவழியாக பறிமுதல் செய்யப்பட்டது அந்தக் பைக்!

ஜாக்கிரதை! - கறுப்பு, மெட்டாலிக் புல்லட்

இது குறித்து நம்மிடம் பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், ``சென்னையில் புல்லட் திருடர்களைப் பிடிப்பது கடும் சவாலாகவே இருந்தது. ஆனால், புல்லட் திருட்டுப் புகார்கள் குவிந்தவண்ணம் இருந்தன. சிபியைப் பிடித்ததும் அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தஞ்சாவூர் மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த முகமது சஃபி என்பவரைப் பிடித்தோம். டிப்ளோமா இன்ஜினீயரிங் படித்திருக்கும் சஃபி மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருக்கின்றன. கொரோனா ஊரடங்கு காலத்தில் வெளிநாடுகளுக்குத் தங்கம் கடத்தும் ‘குருவி’களின் வாட்ஸ்அப் குழு ஒன்றில் இணைந்திருக்கிறார். அந்தக் குழுவில் மாதத் தவணை செலுத்த முடியாமல் பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகளை வாங்கி, விற்கலாம் என்று விவாதிக்கப்பட்டிருக்கிறது. அப்போதுதான் சஃபிக்கு புல்லட்களைத் திருடும் ஐடியா உண்டானது. கூட்டாளியாக சிபியையும் சேர்த்துக்கொண்டார்.

பூனை ஸ்டைலில் திருட்டு! - மாட்டிக்கொண்ட ‘புல்லட்’ பாண்டிகள்!

கறுப்பு மற்றும் மெட்டாலிக் நிற புல்லட்களுக்கு மார்க்கெட்டில் மவுசு அதிகம் என்பதால், அவற்றைக் குறிவைத்து திருடியிருக்கிறார்கள். திருட்டு புல்லட்டை வாங்குபவர், சஃபியின் கூட்டாளியான விருதுநகர் மாவட்டம், வீரசோழன் கிராமத்தைச் சேர்ந்த அமீர்ஜான் என்பவரின் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்புவார். பிறகே புல்லட் கைமாறும். குறிப்பிட்ட முகவரியில் தங்கினால் போலீஸ் தன்னைப் பிடித்துவிடும் என்று சிபி சென்னையில் பிளாட்பாரங்களில் மட்டுமே தங்கிவந்திருக்கிறார். இவர்மீதும் குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

ஒரு புல்லட்டை விற்றால் சிபிக்கு, சஃபி 10,000 ரூபாய் கொடுப்பார். அதை சஃபி 25,000 ரூபாய் வரை விற்றிருக்கிறார். சஃபியிடம் திருட்டு புல்லட்டை வாங்கும் புரோக்கர்கள் அவற்றை 50,000 ரூபாய் வரை விற்றிருக்கிறார்கள். போலியாக ஆர்.சி புக்கையும் தயாரித்திருக்கிறார்கள். கட்சிக்காரர்களின் பைக்குகளை போலீஸார் சோதனையிட மாட்டார்கள் என்று நினைத்த இந்தக் கும்பல், கட்சியினருக்கே திருட்டு புல்லட்களை விற்றிருக்கிறது” என்றவர், கடைசியாக ஒரு சஸ்பென்ஸ்வைத்து முடித்தார்.

“இப்போது சிக்கியிருப்பது சிறு நரிகளே... இவர்களுக்குத் தலைவன் ஒருவன் இருக்கிறான். அவனை நெருங்கிவிட்டோம். அவன் பிடிபட்டால்தான் புல்லட் நெட்வொர்க்கின் முழுப் பின்னணியும் தெரியவரும். விரைவில் நல்ல தகவல் சொல்கிறோம்” என்றார்!

`விர்ர்ர்ரூம்...’ என வேகமெடுக்கட்டும், காவல்துறையின் நடவடிக்கை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு