Published:Updated:

ஊரடங்கு நேரத்தில் உலா.. போனுக்கு வந்த எஸ்.எம்.எஸ்! - இ-சலான் மூலம் சிக்கிய திருடர்கள்

போலீஸாரிடம் சிக்கிய டூவீலர்கள்
போலீஸாரிடம் சிக்கிய டூவீலர்கள் ( விகடன் )

அபராதம் தொடர்பான எஸ்.எம்.எஸ் தகவல் திண்டுக்கல்லைச் சேர்ந்த தியாகு என்பவரின் மொபைல் போனுக்கு வந்துள்ளது. இவரது டூவீலர் கடந்த பிப்ரவரி மாதம் 4-ம் தேதி திருடு போன நிலையில் இது குறித்து அப்போதே திண்டுக்கல் போலீஸாரிடம் தியாகு புகார் அளித்துள்ளார்.

ஊரடங்கின்போது திருட்டு பைக்கிள் உலா வந்த பைக் திருடர்கள் இருவரை பாம்பன் போலீஸார் கைது செய்தனர். அபராதம் விதிக்கப்பட்ட தகவல் பைக்கின் உரிமையாளருக்குச் சென்றதால் சிக்கிக்கொண்ட இவர்களிடம் இருந்து 8 பைக்குகளைப் பறிமுதல் செய்தனர்.

மீட்கப்பட்ட  திருட்டு பைக்குகள்.
மீட்கப்பட்ட திருட்டு பைக்குகள்.
விகடன்

கொரானோ வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. ஊரடங்கை மீறி டூவீலர்களில் அவசியமின்றி ஊர் சுற்றுபவர்களைப் பிடிக்கும் போலீஸார் அவர்களுக்கு கொரானோ விழிப்புணர்வு, உடற்பயிற்சி செய்ய வைத்தல், இம்போஷிஷன் எழுத வைத்தல் என பல்வேறு வகையான விசித்திர தண்டனைகள் வழங்கி வருகின்றனர் என்ற போதிலும் ஊர் சுற்றுபவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. தமிழகத்தில் மட்டும் நேற்றுவரை இதுபோன்ற நபர்களிடம் இருந்து சுமார் 2.68 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

ஹமீது சுல்தான்
ஹமீது சுல்தான்
விகடன்

இந்த நிலையில், பாம்பன் காவல் எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் டூவீலரில் சுற்றித் திரிந்த இளைஞர்கள் சிலரை சார்பு ஆய்வாளர் கார்த்திக் ராஜா பிடித்து இ-சலான் மூலம் அபராதம் விதித்தார். இது தொடர்பான எஸ்.எம்.எஸ் தகவல் திண்டுக்கல்லைச் சேர்ந்த தியாகு என்பவரின் மொபைல் போனுக்கு வந்துள்ளது. இவரது டூவீலர் கடந்த பிப்ரவரி மாதம் 4-ம் தேதி திருடு போன நிலையில் இது குறித்து அப்போதே திண்டுக்கல் போலீஸாரிடம் தியாகு புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில், தனது டூவீலர் பாம்பன் போலீஸாரிடம் பிடிபட்டு, அதற்கான அபராதம் செலுத்துவதற்கான தகவல் வந்ததைக் கண்ட தியாகு அதிர்ச்சிக்குள்ளானார். பின்னர் இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முறையிட்டுள்ளார். இதையடுத்து, எஸ்.பி வருண்குமார் இது தொடர்பாக விசாரணை நடத்த பாம்பன் போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

ரஞ்சித்கான்
ரஞ்சித்கான்
விகடன்

போலீஸாரின் விசாரணையில் தியாகுவின் டூவீலரை பாம்பன் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்கான், ஹமீது சுல்தான் ஆகியோர் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையின் மூலம் கீழக்கரையைச் சேர்ந்த ஹமீது ரியாஸ் என்பவர் மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் இருந்து டூவீலர்களைத் திருடி இவர்களிடம் விற்றதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, இவர்களிடம் இருந்து 8 டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இந்தத் திருட்டில் ஈடுபட்ட முக்கியக் குற்றவாளியான ஹமீது ரியாஸை போலீஸார் தேடி வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு