Published:Updated:

பிறழ்சாட்சியம் கொடுக்கும் பிரபலங்கள்... திசைமாறுகிறதா திலீப் வழக்கு?!

திலீப்
திலீப்

நேற்றைய விசாரணையில், நடிகர் குஞ்சாக்கோ போபன் மற்றும் நடிகை பிந்து பணிக்கர் ஆகிய இருவரும் சாட்சியம் அளிக்க நீதிமன்றம் வந்துள்ளனர்.

தமிழ், மலையாளம் உள்ளிட்ட சினிமாக்களில் நடித்த முன்னணி நடிகை ஒருவரை காரில் கடத்தி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கிய சம்பவத்தில், மலையாள நடிகர் திலீப் கைதுசெய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார். இந்த வழக்கு, தற்போது கொச்சி கலூர் சிறப்பு நீதிமன்றத்தில் பெண் நீதிபதி முன் தினமும் விசாரணை செய்யப்பட்டுவருகிறது.

6 மாத காலத்துக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்பதால், மொத்தம் உள்ள 385 சாட்சிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு விடுமுறை இல்லாமல் விசாரணை நடைபெற்று வருகிறது. 14 பேர் குற்றம் சாட்டப்பட்ட இந்த வழக்கில், நடிகர் திலீப் 8-ம் பிரதியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

திலீப்
திலீப்

பூட்டிய அறையில் நடந்துவரும் விசாரணையில், மலையாளத் திரையுலகின் முக்கிய நடிகர்கள் தினமும் ஆஜராகி விளக்கம் அளித்துவருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் திலீப்பின் முன்னாள் மனைவியும் நடிகையுமான மஞ்சு வாரியர் ஆஜராகி விளக்கம் கொடுத்தார். எந்த இடைவேளையும் எடுக்காமல், உணவுகூட அருந்தாமல் தனது சாட்சியத்தை நீதிபதியிடம் மஞ்சு தெரிவித்தார். சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த விசாரணையில், திலீப்புக்கு எதிராக 2017-ல் சம்பவம் நடந்தபோது போலீஸில் என்ன வாக்குமூலம் அளித்தாரோ, அதையேதான் தற்போதும் தெரிவித்துள்ளார் என்கின்றன ஊடகங்கள்.

8ம் பிரதி.. 11வது சாட்சி.. பூட்டிய அறையில் விசாரணை.. மஞ்சு வாரியரின் வைலன்ட் மோடால் டென்ஷனான திலீப்!

இது இப்படியிருக்க, நேற்றைய விசாரணையில் நடிகர் குஞ்சாக்கோ போபன் மற்றும் நடிகை பிந்து பணிக்கர் ஆகிய இருவரும் சாட்சியம் அளிக்க நீதிமன்றம் வந்துள்ளனர். அதன்படி, முதலில் குஞ்சாக்கோ போபன் விசாரிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு, இரண்டு முறை ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் கூறியும், ஷூட்டிங்கின் காரணமாக அவர் ஆஜராகவில்லை. இன்று ஆஜரானவர், முன்பு போலீஸில் என்ன வாக்குமூலம் கொடுத்தாரோ, அதையே தற்போதும் சாட்சியாகக் கூறியுள்ளார். ``நான் 20 வருடங்களாக மலையாளத் திரையுலகில் நடிகராக இருக்கிறேன். எனக்கு திலீப் நெருங்கிய நண்பர். மஞ்சு வாரியர் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்த படம் `how old are you'.

குஞ்சாக்கோ போபன்
குஞ்சாக்கோ போபன்

இந்தப் படத்தின் கதாநாயகனாக நடிக்க நான் ஒப்பந்தம் ஆகியிருந்தேன். ஒருநாள், திலீப் என்னிடம் வந்து, `மஞ்சு வாரியரை அந்தப் படத்தில் நடிக்கவைக்கக் கூடாது; நீக்க வேண்டும்' எனக் கூறினார். ஆனால், `நடிகை யார் என்று தீர்மானிக்கவேண்டியது இயக்குநர்தான். அதனால் என்னால் அது முடியாது' என்று மறுத்துவிட்டேன். அதேபோல், cousins படத்தில், பாதிக்கப்பட்ட நடிகையும் நடித்திருந்தார். அவரையும் நீக்க வேண்டும் என திலீப் வலியுறுத்தினார். ஆனால், அதையும் நான் மறுத்ததால், மலையாள நடிகர் சங்கமான 'அம்மா'வில் பொருளாளராக இருந்த என்னை மாற்றிவிட்டு, திலீப்பே பொருளாளராக இருந்தார்" என்று முன்பு போலீஸிடம் கூறியிருந்தார் குஞ்சாக்கோ போபன்.

Vikatan

தற்போதும் அதை நீதிமன்றத்தில் கூறியுள்ளார். இவரது சாட்சியம் திலீப்புக்கு எதிராக இருந்தாலும், இந்த வழக்கில் இரண்டாவது சாட்சியாக இருக்கும் நடிகை பிந்து பணிக்கர், நேற்று நடந்த விசாரணையில், தனது சாட்சியத்தை மாற்றிக் கூறியுள்ளார் என்று மலையாள ஊடகங்கள் கூறிவருகின்றன. இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான பல்சர் சுனியை திலீப் 2013ல் கொச்சியில் உள்ள ஹோட்டல் அபாத் பிளாசாவில் சந்தித்தார் எனக் கூறப்படுகிறது.

போலீஸ் குற்றப்பத்திரிக்கையின்படி, பாதிக்கப்பட்ட நடிகையை பல்சர் சுனி, பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவில் பிடிக்க வேண்டும் என்று திலீப் விரும்பினார் என்பதே போலீஸின் பிரதான குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டுக்கான பிளானை திலீப்பும், பல்சர் சுனியும் அந்த ஹோட்டலில் வைத்துதான் தீட்டியுள்ளனர். இவர்கள் இருவரும் சந்திப்பு நடத்துவதை அறிந்த நபர்தான் இந்த பிந்து பணிக்கர். மேலும், திலீப் - காவ்யா மாதவன் இடையிலான உறவை ஏற்கெனவே அறிந்த நபரும்கூட.

பிந்து பணிக்கர்
பிந்து பணிக்கர்

முன்பு போலீஸ் நடத்திய விசாரணையில், பிந்து பணிக்கர் இதை போலீஸிடம் தெளிவாக எடுத்துக் கூறியிருந்தார். ஆனால் நேற்றைய விசாரணையின்போது, பிறழ்சாட்சியம் அளித்துள்ளார். நீதிமன்றத்தில், பெண் நீதிபதி எழுப்பிய கேள்விகளுக்கு, `தனக்கு எதுவும் தெரியாது' என்பதைத் தவிர வேறு எதையும் பிந்து கூறவில்லை என்று வழக்கறிஞர் ஒருவர் ஊடகங்களிடம் பேசியுள்ளார்.

பிந்து மட்டுமல்ல, அவருக்கு முன்பாக சாட்சியம் கொடுத்த அம்மாவின் பொதுச் செயலாளராக இருக்கும் நடிகர் இடைவேலா பாபுவும் பிறழ்சாட்சியம் அளித்துள்ளார். இன்னும் சிலரும் தங்களது சாட்சியத்தை மாற்றிக் கூறிவருகின்றனர் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வழக்கின் முக்கிய சாட்சிகளாகக் கருதப்படும் இவர்கள், திலீப்புக்கு ஆதரவாகச் செயல்படுவதற்காக இப்படி பிறழ்சாட்சியம் அளித்து வருகின்றனர் எனக் கூறப்படுகிறது. இதனால் இந்த வழக்கு தற்போது திசைமாறி வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு