Published:Updated:

`சஸ்பெண்டு செய்தும் பயமில்லை!'- துப்பாக்கியுடன் நடனமாடும் சர்ச்சை பா.ஜ.க எம்.எல்.ஏ

பத்திரிகையாளரை மிரட்டிய புகாரில் ஏற்கெனவே ப்ரணவ் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுத்தது.

பாஜக எம்.எல்.ஏ
பாஜக எம்.எல்.ஏ

உத்தரகாண்டைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ ப்ரணவ் சிங் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்த ப்ரணவ் சிங் கடந்த 2016-ல் தனது ஆதரவாளர்களுடன் பா.ஜ.க-வில் இணைந்தார். பா.ஜ.க-வுக்கு வந்ததும் இவருக்கு தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டது. தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். இந்த நிலையில்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பத்திரிகையாளரை மிரட்டிய புகாரில் அவர் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்தது. மூன்று மாத சஸ்பெண்ட்டில் உள்ளார். பா.ஜ.க அவருக்கு ஷோ - கேஸ் நோட்டீஸும் அனுப்பியுள்ளது.

துப்பாக்கியுடன் ப்ரணவ் சிங்
துப்பாக்கியுடன் ப்ரணவ் சிங்

இந்நிலையில்தான் ப்ரணவ் சிங் துப்பாக்கியைக் கொண்டு நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டு நடனமாடும் ப்ரணவ் மிஷின் கன் போன்ற பெரிய துப்பாக்கியைக் கையில் வைத்திருக்கிறார். சிறிது நேரத்தில் அந்தத் துப்பாக்கியை அருகில் இருப்பவரிடம் கொடுத்து விடுகிறார். பின்னர் 3 ரிவால்வர்களைக் கையில் வைத்துக்கொண்டு நடனமாடுகிறார்.

இந்த விவகாரம் தொடர்பாகப் பேசியுள்ள பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் அனில் பலுனி, ``நாங்கள் இன்னும் அந்த வீடியோவைப் பார்க்கவில்லை. ப்ரணவ் சிங் மீது இதுபோன்ற புகார்கள் ஏற்கெனவே உள்ளது. அதனால்தான் அவரை மூன்று மாதங்கள் சஸ்பெண்டு செய்துள்ளோம். இதுதொடர்பாக மாநில நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

ப்ரணவ் சிங்
ப்ரணவ் சிங்

இதுகுறித்து பேசிய காவல்துறையினர், ``ப்ரணவ் சிங் துப்பாக்கிகளுடன் நடனமாடியது எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும். அவரிடம் இருந்த துப்பாக்கிகளுக்கு உரிய உரிமை பெற்றுள்ளார் என்பதை விசாரிப்போம்'' என்றனர்.