டெல்லி மயூர் விஹார் பகுதியைச் சேர்ந்தவர் ஜித்து சௌத்ரி (42). இவர் பா.ஜ.க பிரமுகர். சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற அனுமன் ஜயந்தி ஊர்வலத்தில் இரண்டு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக மாறியது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு டெல்லியின் சில பகுதிகளில் பதற்றமான சூழல் நீடித்துவருகிறது.
இந்த நிலையில், நேற்றிரவு 8 மணியளவில் ஜித்து சௌத்ரி தனது வீட்டுக்கு வெளியே நின்றுகொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சிலர் அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டுத் தப்பித்தனர். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தகவலறிந்து வந்த போலீஸார், அவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்தக் கொலை தொடர்பாக அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துவருகிறார்கள். சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடமும் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். மேலும், கொலை நடந்த இடத்தில் சிதறிக்கிடந்த தோட்டாக்களையும், சில முக்கியத் தடயங்களையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்தச் சம்பவத்துக்கு பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், கொலைக் குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது. டெல்லியில் ஏற்கெனவே பதற்றமான சூழல் நீடிக்கும் நிலையில், பா.ஜ.க பிரமுகர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பது நிலைமையை மேலும் பதற்றமடையச் செய்துள்ளது.