Published:Updated:

திருவாரூர்: இளைஞர் கொலை; சிக்கிய ஆதாரங்கள்; பாஜக பிரமுகர் உட்பட 5 பேர் கோர்ட்டில் சரண்!

இருசக்கர வாகனத்தில் வந்த ஐந்து பேர்கொண்ட கும்பல் குமரேசனை வழிமறித்திருக்கிறது. எதற்காக வழிமறிக்கிறார்கள் எனச் சுதாரிப்பதற்குள், அந்தக் கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் குமரேசனை சரமாரியாக வெட்டிச் சாய்த்தது.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் பகுதியைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் நடேச தமிழார்வன் கடந்த சில நாள்களுக்கு முன்பு மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் படுபயங்கரமாக வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார். அந்தக் கொலைச் சம்பவம் திருவாரூர் மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் ஒரு கொலைச் சம்பவம் திருவாரூர் கிடாராங்கொண்டான் பகுதியில் நடந்திருக்கிறது. ஒரே வாரத்துக்குள் திருவாரூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து இரண்டு கொலைச் சம்பவங்கள் நடந்திருப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் காவல்துறையினர், குற்றவாளிகளைப் பிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டை நடத்திவந்தார்கள்.

குமரேசன்
குமரேசன்

திருவாரூர் மாவட்டம், அகரதிருநல்லூர் பகுதியிலுள்ள காமராஜ் நகரைச் சேர்ந்தவர் செல்வமணி. இவருடைய மகன் குமரேசன். இவர் மனைவி பெயர் சுதா. இந்தத் தம்பதிக்கு இரணியன் என்ற குழந்தை இருக்கிறது. இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு, குமரேசன் தன் உறவினர் சுசீலா என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் காணூரில் இருக்கும் மாமனார் வீட்டுக்கு அரிசி மூட்டையுடன் சென்றுகொண்டிருந்தார். அப்போது கிடாரங்கொண்டான் என்ற இடத்தில் சென்றபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் குமரேசனை வழிமறித்திருக்கிறது. எதற்காக வழிமறிக்கிறார்கள் எனச் சுதாரிப்பதற்குள், அந்தக் கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாளால் குமரேசனின் தலையில் வெட்டி தாக்குதல் நடத்தியிருக்கிறது. ரத்த வெள்ளத்தில் கிடந்த குமரேசன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அங்கு கூட்டம் கூடுவதற்குள், அந்தக் கொலைக் கும்பல், இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்று, தலைமறைவானது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த திருவாரூர் நகர காவல்துறையினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த குமரேசனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகத் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக, திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.

சி.சி.டி.வி பதிவு
சி.சி.டி.வி பதிவு

இதற்கிடையே, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்பு கொலை செய்யப்பட்ட குமரேசனின் உறவினர்கள், நண்பர்கள் திரண்டனர். அப்போது கடும் ஆத்திரத்திலிருந்த சிலர் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்தனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த்ப் பகுதியில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக, திருவாரூர் நகரக் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொலைசெய்யப்பட்ட குமரேசன் மீது சில குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. மேலும் முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. கொலையை நேரில் பார்த்த குமரேசனின் உறவினர் சுசீலாவிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டார்கள். கொலை செய்யப்பட்ட இடத்தில் ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், கொலைச் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த சிசிடிவி-யில் பதிவான காட்சிகளின் அடிப்படையிலும் கொலையாளிகளை காவல்துறையினர் தேடிவந்தனர்.

மாவட்ட காவல் அலுவலகம்
மாவட்ட காவல் அலுவலகம்

இந்த நிலையில், இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக, நேற்று கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கலைச்செல்வன், கோபாலகிருஷ்ணன், பிரேம்குமார், சுரேஷ், வாஞ்சிநாதன் ஆகிய ஐந்து பேர் சரணடைந்திருக்கிறார்கள். இதற்கிடையில், குமரேசன் கொலை வழக்கில் தொடர்புடைய அம்மாப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ் என்பவரையும் போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு