Published:Updated:

ஹரியானாவில் காதலி; ஜெய்ப்பூர் ஹைவேஸில் ஓட்டுநர்!- இரட்டைக் கொலையில் சிக்கிய பாடிபில்டர்

காதலியைக் கொலை செய்த வழக்கில் பாடிபில்டரும் தொழிலதிபருமான ஹேமந்த் லம்பா கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹேமந்த் லம்பா
ஹேமந்த் லம்பா

டெல்லியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஹரியானாவில் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவருடைய உடலில் நான்கு குண்டுகள் பாய்ந்திருந்தன. பெண்ணின் அடையாளம் தெரிந்த பிறகு டெல்லியில் உள்ள அவரின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இளம்பெண் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் டெல்லியில் உள்ள தந்தையின் வீட்டில் தங்கி படித்துவருகிறார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இளம்பெண் சுட்டுக்கொல்லப்பட்டதால் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது.

கொலை
கொலை

பிரேதப் பரிசோதனை அறிக்கையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான எந்தத் தடயங்களும் இல்லை. இதை கொலை வழக்காக பதிவுசெய்த காவல்துறையினர் விசாரணை நடத்திவந்தனர். கடைசியாக டிசம்பர் 7-ம் தேதி அந்தப் பெண்ணை காதலர் ஹேமந்த் அழைத்துச் சென்றுள்ளார். பெண்ணின் உறவினர்கள் கொடுத்த தகவலின் பேரில் அவரின் காதலர் ஹேமந்த் லம்பாவை போலீஸார் தேடிவந்தனர்.

ஹேமந்த் லம்பா பாடிபில்டர். இந்திய அளவில் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார். சொந்தமாக ஜிம் நடத்தி வருகிறார். இதையடுத்து, அவரிடம் நடத்திய விசாரணையில் காதலியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். எதற்காக கொலை செய்தார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Representation Image
Representation Image

இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், ``ஹேமந்த் லம்பா டெல்லியைச் சேர்ந்தவர். தன் காதலியுடன் காரில் ஓலா வாடகை காரில் பயணம் செய்துள்ளார். அந்தப் பெண்ணின் மொபைல் நம்பரில் கார் புக் செய்யப்பட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த தேவேந்திரா என்பவர்தான் காரை ஓட்டியுள்ளார். டிராவல்ஸ் வைத்துள்ள தேவேந்திரா நிறைய கார்களை வாடகைக்கு விட்டுள்ளார். காரில் சென்றுகொண்டிருந்தபோது இளம்பெண்ணுக்கும் ஹேமந்த்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஹேமந்த் அந்தப் பெண்ணை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். இதைப் பார்த்த தேவேந்திரா அதிர்ச்சி அடைந்தார்.

கொலை செய்ததை தேவேந்திரா பார்த்துவிட்டதால், ஹேமந்த் பதற்றத்தில் இருந்துள்ளார். துப்பாக்கி முனையில் தேவேந்திராவை மிரட்டியுள்ளார். காரை டெல்லி நோக்கி செலுத்தக் கூறியுள்ளார். ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் பயணித்துக்கொண்டிருந்தபோது ஹேமந்த் தேவேந்திராவையும் சுட்டுக்கொலை செய்துள்ளார். ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உடலைத் தூக்கி வீசிவிட்டு காருடன் தப்பிச்சென்றுள்ளார்.

துப்பாக்கி சூடு!
துப்பாக்கி சூடு!

இதைத் தொடர்ந்து காரை விற்க முடிவு செய்து டீலரை அணுகியுள்ளார். ஹேமந்த் லம்பா பதற்றத்துடன் இருந்ததை கண்ட டீலருக்கு இவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. காரில் இருந்த வாகனத்தின் உரிமையாளர் எண்ணுக்கு தொடர்புகொண்டு விசாரித்துள்ளார்.

அப்போது பேசிய தேவேந்திராவின் மனைவி அந்த நபர் இரண்டு கொலைகளைச் செய்துவிட்டு தலைமறைவாக உள்ள விஷயத்தைத் தெரிவித்துள்ளார். அவரை தப்பிக்க விட்டுவிடாதீர்கள் உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவியுங்கள் எனக் கூறியுள்ளார். அந்த நபர் போலீஸுக்கு அளித்த தகவலின்படி ஹேமந்த் லம்பா கைது செய்யப்பட்டுள்ளார்” என்றனர்.

கைது
கைது
மாதிரி புகைப்படம்

போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் நீதிமன்றத்தில் முறையிடவுள்ளனர். இந்தக் கொலை சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து ஹேமந்த் லம்பாவிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.