சென்னை: ஒரே நாளில் நடந்த வெடிகுண்டு வீச்சு சம்பவங்கள்! - அதிர்ச்சியில் திமுக, தேமுதிக பிரமுகர்கள்
சென்னையில் தி.மு.க, தே.மு.தி.க பிரமுகர்கள் வீடுகளில் அடுத்தடுத்து நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பள்ளிக்காரணையை அடுத்த வேங்கைவாசல், மாம்பாக்கம் மெயின் சாலை, வீரபத்திராநகரைச் சேர்ந்தவர் வனஜா தனசேகரன் (54). இவர் நேற்று வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த கும்பல், வீட்டுக்குள் நாட்டு வெடிகுண்டுகளை சர்வசாதாரணமாக வீசி விட்டு தப்பிச் செல்லும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து வனஜா தனசேகரன், பள்ளிக்காரணை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதில் ``நான் வேங்கைவாசல் ஊராட்சி மன்றத்தில் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை தலைவராக இருந்தேன். தி.மு.க.வைச் சேர்ந்த என்னுடைய அரசியல் வளர்ச்சியைப் பிடிக்காமல் என்னைக் கொலை செய்யும் நோக்கத்தில் வீட்டுக்குள் வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன. வெடிகுண்டுகளை வீசிய கும்பல் காரில் வருகின்றனர். அதிலிருந்து இறங்கிய ஒருவர் சர்வசாதாரணமாக வெடிகுண்டுகளை வீசி விட்டு காரில் ஏறி செல்லும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர்(37). பரங்கிமலை ஒன்றிய தே.மு.தி.க கட்சியின் துணை செயலாளராக உள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அருள் என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் வாகனத்தை பார்க்கிங் செய்வதில் தகராறு ஏற்பட்டது. இதில் அருளை ராஜசேகர் வெட்டிவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பழிவாங்க அருள் காத்திருந்தார்.
நேற்றிரவு வீட்டின் அருகே ராஜசேகர் நின்றுக்கொண்டிருந்தார். அப்போது 10க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் அங்கு வந்து நாட்டு வெடிகுண்டை முதலில் வீசினர். பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் ராஜசேகரை சராமாரியாக வெட்டினர். நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியதால் சத்தம் கேட்டு அப்பகுதியில் உள்ளவர்கள் வெளியில் வந்தனர். அதைப்பார்த்த மர்மகும்பல் அங்கிருந்து தப்பி ஒடிவிட்டது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ராஜசேகரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து பள்ளிக்காரணை போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில் வெடிகுண்டுகள் வீசப்பட்ட பின்னணியில் பிரபல ரவுடி ஒருவரின் டீம் இருப்பது தெரியவந்துள்ளது.
ஒரே நாளில் இரண்டு இடங்களில் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.