Published:Updated:

`5 அடி ஆழம், மணல் மூட்டைகள், சிதறிய பாகங்கள்!'- மானாமதி ஏரியில் 2.5 கிலோ வெடிகுண்டு செயலிழப்பு

JAYAVEL B

திருப்போரூர் அருகே வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சலரின் பாகம் வெடிக்கவைக்கப்பட்டு செயலிழக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த பாகங்கள் சேகரிக்கப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளன.

திருப்போரூர் வெடிகுண்டு
திருப்போரூர் வெடிகுண்டு

திருப்போரூர் மானாமதி கிராமத்தில், கங்கையம்மன் கோயில் குளம் அருகே, கடந்த 25-ம் தேதி, மர்மப் பொருள் ஒன்றை அப்பகுதி இளைஞர்கள் குளத்தில் கண்டெடுத்தனர். அதை உடைக்க முயன்றபோது, அந்தப் பொருள் வெடித்துச் சிதறியிருக்கிறது. இதில் சூர்யா, ஜெயராமன் ஆகிய இரண்டு இளைஞர்கள் இறந்தனர். இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் காவல்துறை அதிகாரிகள் தலைமையில், வெடிகுண்டுச் சோதனை நிபுணர்கள், மோப்ப நாய்களைக்கொண்டு தீவிர சோதனை செய்யப்பட்டது. அடுத்த நாளே, வெடிக்காத நிலையில் ராக்கெட் ராஞ்சலர் ஒன்றின் வெடிகுண்டு பாகம் குளத்தில் கண்டெடுக்கப்பட்டது.

`5 அடி ஆழம், மணல் மூட்டைகள், சிதறிய பாகங்கள்!'- மானாமதி ஏரியில் 2.5 கிலோ வெடிகுண்டு செயலிழப்பு

இதைத் தொடர்ந்து, இன்று காலை மானாமதிக்கு 3 கி.மீ தொலைவில் உள்ள ஏரிக்கு அந்த வெடிகுண்டு கொண்டு செல்லப்பட்டது. இன்று காலை முதலே பொதுமக்கள் அந்தப் பகுதியில் அனுமதிக்கப்படவில்லை. காவல்துறையினர், வெடிகுண்டை செயலிழக்கவைக்கும் நிபுணர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில், 5 அடி ஆழம்கொண்ட குழி தோண்டி மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டன. அதில், முதலில் டம்மி வெடிகுண்டு ஒன்றை வைத்து வெடிக்கச்செய்தனர். அதன் பின்பு வெடிக்காமல் கைப்பற்றப்பட்ட 2.5 கிலோ எடை கொண்ட குண்டை வைத்து வெடிக்கச்செய்தனர். ஆனால், அதில் பாதி பகுதி மட்டுமே வெடித்தது. அடுத்து, வெடிக்காத நிலையில் இருந்த மீதி பாகத்தையும் வெடிக்கவைத்தனர். சுமார் 600 பால்ஸ் (இரும்புக் குண்டுகள்) சிதறின. வெடிக்கப்பட்ட வெடிகுண்டின் பாகங்கள் சேகரிக்கப்பட்டு, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளன.