குஜராத் மாநிலம், வல்சாரி மாவட்டத்திலிருக்கும் மிந்தாபெரி கிராமத்தைச் சேர்ந்தவர் லதேஷ் காவித். இவருக்கும், அருகிலிருக்கும் கங்காபூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது உறவினர்களும் நண்பர்களும் ஏராளமான பரிசுப் பொருள்களை திருமண ஜோடிக்குக் கொடுத்தனர். அவற்றை ஒவ்வொன்றாக லதேஷ், தன் உறவினர் ஜியான் என்பவருடன் சேர்ந்து உறவினர்கள் முன்னிலையில் பிரித்து பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது, அதில் சார்ஜ் செய்யக்கூடிய பொம்மை ஒன்றும் இருந்தது. உடனே இரண்டு பேரும் அந்த பொம்மைக்கு சார்ஜ் செய்ய ஆரம்பித்தனர். உடனே அந்த பொம்மை திடீரென வெடித்துச் சிதறியது.

இதில் மாப்பிள்ளை லதேஷின் தலை, கண், கையில் படுகாயம் ஏற்பட்டது. ஜியானுக்கும் கை, தலையில் காயம் ஏற்பட்டது. அதையடுத்து, இருவரும் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இது குறித்து மாப்பிள்ளை வீட்டார் போலீஸில் புகார் செய்திருக்கின்றனர்.
வெடிகுண்டு பொம்மையைப் பரிசாக வழங்கியது யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்ததில் ராஜு படேல் என்று தெரியவந்தது. ராஜு படேலும் மணப்பெண்ணின் மூத்த சகோதரியும் காதலித்துவந்திருக்கின்றனர். இருவரும் சேர்ந்து திருமணம் செய்யாமல் வாழ்ந்துவிட்டு சமீபத்தில் பிரிந்திருக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்த ஆத்திரத்தில் காதலியைப் பழிவாங்க இது போன்று வெடிகுண்டு பொம்மையைக் காதலியின் சகோதரிக்கு திருமணப் பரிசாகக் கொடுத்திருக்கிறார். போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.