Published:Updated:

தஞ்சாவூர்: குப்பையில் கிடந்த மனித மண்டை ஓடு, எலும்புகள்! - அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்

அட்டைப்பெட்டிக்குள் மனித மண்டை ஓடுகள்
அட்டைப்பெட்டிக்குள் மனித மண்டை ஓடுகள்

``எப்படி இங்கு மண்டை ஓடுகள் வந்தது... யார் இவ்வளவு தைரியா பொதுவெளியில் வந்து போட்டிருக்கிறார்கள்... சமூக விரோதிகளின் செயலாக இருக்குமா?” எனப் பலவிதமாகப் பொதுமக்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தஞ்சாவூர் அருகே ஆற்றின் ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள குப்பைக்கிடங்கில் அட்டைப்பெட்டிக்குள் வைக்கப்பட்ட மனித மண்டை ஓடுகளும் எலும்புகளும் கிடந்துள்ளன. நாய்கள், மனித மண்டை ஓட்டை, பொதுமக்கள் நடமாடும் சாலைக்கு இழுத்துச் சென்றன. மண்டை ஓட்டைப் பார்த்த பொதுமக்கள் அலறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குப்பையில் மனித மண்டை ஓடு
குப்பையில் மனித மண்டை ஓடு

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள ஒன்பத்துவேலி கிராமத்தில் குடமுருட்டி ஆற்றங்கரை ஓரத்தில் திருக்காட்டுப்பள்ளிப் பேரூராட்சிக்குச் சொந்தமான குப்பைக்கிடங்கு இருக்கிறது. இதில் ஐந்துக்கும் மேற்பட்ட அட்டைபெட்டிகள் கிடந்துள்ளன. அதற்குள் மனித மண்டை ஓடுகளும் மனித எலும்புகளும் இருந்துள்ளன. ஆற்றுக்குக் குளிக்க வந்தவர்கள் அட்டைப்பெட்டிக்குள் மண்டை ஓடு தெரிவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

எப்படி இங்கு மண்டை ஓடுகள் வந்தன... யார் இவ்வளவு தைரியமாக இவற்றை பொதுவெளியில் வந்து போட்டது... இது சமூக விரோதிகளின் செயலாக இருக்குமா எனப் பலவிதமாகப் பேசிக்கொண்டிருந்தனர். அதற்குள் அங்கிருந்த தெரு நாய்கள் அட்டைப்பெட்டியை கடித்து இழுக்க, உள்ளே இருந்த மண்டை ஓடுகள் வெளியே விழுந்தன. இதைப் பார்த்த சிலர் அச்சம் காரணமாக அங்கிருந்து சென்றுவிட்டனர். நாய்கள் மண்டை ஓட்டை இழுத்துக்கொண்டு மக்கள் நடமாடும் சாலைப் பகுதிக்கும் சென்றன.

பொதுமக்கள்
பொதுமக்கள்

கிட்டத்தட்ட ஐந்துக்கும் மேற்பட்ட மனித மண்டை ஓடுகளும் எலும்புகளும் கிடந்ததால் அந்த இடமே பெரும் பரபரப்புடன் காணப்பட்டது. இந்தத் தகவல் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றிருக்கிறது. இதையடுத்து அவர்கள் வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக் கூடத்திலுள்ள மனித எலும்புகள் அவை எனத் தெரியவந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தஞ்சாவூர் : ` போலீஸ் தாக்கியதாகப் புகார் '-   விசாரணைக் கைதி மரணத்தில் மாஜிஸ்திரேட் விசாரணை!

அரசு மருத்துவமனை நிர்வாகத்தில் பிரேத பரிசோதனைப் கூடத்தை தூய்மைப் பணியாளர்கள் தூய்மைப் பணி செய்தனர். அதில் அடையாளம் தெரியாத நபர்களின் சடலங்களை பிரேத பரிசோதனை செய்த பிறகு மண்டை ஓடு மற்றும் எலும்புகளை அட்டைப்பெட்டி மற்றும் பாட்டிலில் பாதுகாத்து வைத்திருப்பார்கள். அப்படி வைத்திருந்த மண்டை ஓடுகளை தூய்மைப் பணியாளர்கள் தவறுதலாகக் குப்பைக்கிடங்கில் போட்டுவிட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்தனர்.

மனித எலும்புகள்
மனித எலும்புகள்

அதன் பின்னர் மீண்டும் தூய்மைப் பணியாளர்கள் குப்பைக்கிடங்குக்குச் சென்று மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகளை எடுத்து சுடுகாட்டில் குழிதோண்டிப் புதைத்தனர். அதன் பிறகே பரபரப்பு அடங்கியது. அரசு மருத்துவமனை அலட்சியமாக செயல்பட்டதன் விளைவே மண்டை ஓடுகள் குப்பைக்கு வந்துள்ளன. இதனால், பொதுமக்கள் பெரும் அச்சமடைந்தனர் இனிமேலாவது பணிகளில் மெத்தனம் காட்டாமல் இருக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு