Published:Updated:

`இளைஞர்களை மீட்கும் பாய்ஸ் க்ளப்!’ - காஞ்சிபுரம் காவல்துறையின் புதிய திட்டம்

காஞ்சிபுரம் எஸ்பி சாமுண்டீஸ்வரி
காஞ்சிபுரம் எஸ்பி சாமுண்டீஸ்வரி

சுமார் 75-க்கும் மேற்பட்ட முக்கிய ரவுடிகளின் கூட்டாளிகள், கடந்த சில நாள்களில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருக்கும் தணிகாவை காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.

காஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதர் ஆதரவாளர்களுக்கிடையே நடைபெறும் ‘கேங் வார்’, காவல்துறையினரின் கெடுபிடியால் கட்டுப்படுத்தப்பட்டுவருகிறது. ரவுடிகள் கைது, காவல்துறையில் மாற்றம், மக்களிடம் விழிப்புணர்வு என காஞ்சிபுரம் காவல்துறை சார்பில் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளால் காஞ்சிபுரத்தில் பதற்றம் சற்று குறைந்திருக்கிறது.

தினேஷ் மற்றும் தியாகு
தினேஷ் மற்றும் தியாகு

ஸ்ரீதர் மறைவுக்குப் பிறகு, அவரின் கார் ஓட்டுநர் தினேஷுக்கும் ஸ்ரீதரின் மைத்துனர் தணிகாவுக்கும் இடையே ஏற்பட்ட பகையால், கடந்த சில மாதங்களாக இரு தரப்பிலும் கொலைகள் நடந்துகொண்டிருந்தன. ரவுடிகளின் ரத்தவெறி, காஞ்சிபுரம் மக்களை அச்சுறுத்திவந்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு முக்கிய ரவுடிகளான ‘பொய்யாகுளம்’ தியாகு மற்றும் தினேஷ் ஆகியோரை காவல்துறையினர் கைதுசெய்தனர். ஆனாலும் கொலைகள் குறைவதாய் இல்லை. ரவுடிகள் சிறையிலிருந்தாலும், வெளியில் கொலைச் சம்பவங்கள் நடந்து கொண்டே இருந்தன.

காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகு, புதிய எஸ்பி-யாகப் பொறுப்பேற்ற சாமுண்டீஸ்வரி, அதிரடியாகச் சில நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். இதனால் சுமார் 75-க்கும் மேற்பட்ட முக்கிய ரவுடிகளின் கூட்டாளிகள், கடந்த சில நாள்களில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருக்கும் தணிகாவை காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.

ஸ்ரீதர்
ஸ்ரீதர்

ரவுடிகளுக்குத் துணைபோகும் ஒரு சில காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் ரவுடிகளிடம் தொடர்பு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களை எச்சரித்து அனுப்பி இருக்கிறார்கள். மேலும், வழிதவறிச் செல்லும் மாணவர்களைச் சீர்படுத்தும் நோக்கில், ‘பாய்ஸ் க்ளப்’ என்ற குழுவை ஆரப்பிக்க இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

``பள்ளிகளுக்குச் செல்ல முடியாத சிறுவர்களை ரவுடிகள் தங்கள் கேங்கில் இணைத்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு மது, கஞ்சா, பணம் உள்ளிட்டவற்றைக் கொடுத்து, சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடச் செய்கிறார்கள். இதனால் புதிய ரவுடிகள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள். சிறுவர்கள் ரவுடிகளாக மாறாமல் தடுப்பதற்காகவும், காவல்துறையினருக்கு உதவுவதற்காகவும் ‘பாய்ஸ் க்ளப்’ தொடங்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம், அவர்களுக்கு விளையாட்டுப் போட்டி, திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் பள்ளிக்குச் செல்ல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது“ எனக் காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு