பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவருடன் கடந்த வாரம் கோவாவுக்குச் சுற்றுலா வந்திருக்கிறார். இந்த நிலையில், ஜூன் 2-ம் தேதி வடக்கு கோவாவிலுள்ள அரம்போல் ஸ்வீட் வாட்டர் பீச்சில் அந்த பிரிட்டன் பெண் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அந்தப் பெண்ணின் கணவர் அவருடன் இல்லை எனக் கூறப்படுகிறது.
அந்தச் சமயத்தில், அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த பிரிட்டன் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் அந்தப் பெண் நடந்ததைத் தன் கணவரிடம் தெரிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றவர், நேற்று தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலீஸில் புகாரளித்திருக்கிறார்.

அவரின் புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார், வழக்கு பதிவுசெய்து இந்தச் சம்பவம் தொடர்பாக அந்தப் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் அளித்த தகவல்களின் அடிப்படையில், அரம்போல் ஸ்வீட் வாட்டர் பீச் பகுதியைச் சேர்ந்த 33 வயது நபர் ஒருவரைக் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சுற்றுலா வந்த வெளிநாட்டுப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
