Published:Updated:

`அண்ணன் இறந்த பிறகு விபரீத முடிவெடுத்த தங்கை?' -சின்னத்திரை நடிகர், நடிகைக்கு நேர்ந்த சோகம் #Chennai

நடிகர் ஸ்ரீதர்
நடிகர் ஸ்ரீதர்

சென்னை கொடுங்கையூரில் பூட்டிய வீட்டுக்குள் சின்னத்திரையைச் சேர்ந்த நடிகர், நடிகை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சென்னை கொடுங்கையூர், முத்தமிழ் நகர், 5-வது பிளாக் 115-வது தெருவில் உள்ள ஒரு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் உதவி கமிஷனர் கோ.அரிக்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அப்போது அந்த வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்ற போலீஸார், வீட்டுக்குள் ஆண், பெண் என 2 சடலங்களை அழுகிய நிலையில் மீட்டனர்.

ஆம்புலன்ஸில் ஏற்றப்படும் உடல்கள்
ஆம்புலன்ஸில் ஏற்றப்படும் உடல்கள்
`மார்ச் 3-ல் மனைவி மரணம்; 2 மாதங்களாக 6 வயது மகளிடம் தவறாக நடந்த தந்தை' - ஆன்லைன் புகாரில் அதிரடி

அப்போது வீடு முழுவதும் தூர்நாற்றம் வீசியது. இதையடுத்து 2 சடலங்களையும் போலீஸார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அந்த வீட்டிலிருந்து சின்னத்திரை நடிகர் சங்கத்தின் அடையாள அட்டை ஒன்றை போலீஸார் கைப்பற்றினர். அந்த அடையாள அட்டையில் ஜி. ஸ்ரீதர், மெம்பர்ஷிப் நம்பர் 1719 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் இறந்தது ஸ்ரீதர் என்பதை போலீஸார் உறுதிப்படுத்தினர். மற்றொருவர் ஸ்ரீதரின் தங்கை ஜெயகல்யாணி எனத் தெரியவந்தது.

இதுகுறித்து கொடுங்கையூர் போலீஸார் கூறுகையில், ``தகவல் கிடைத்ததும் அந்த வீட்டுக்குச் சென்றோம். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப்பார்த்தபோது படுக்கையறையில் ஆணும் பெண்ணும் இறந்து கிடந்தனர். விசாரணையில் இறந்தது சின்னத்திரை நடிகர் ஸ்ரீதர், நடிகை ஜெயகல்யாணி எனத் தெரியவந்தது. இதையடுத்து, கதவை உடைத்து உள்ளே சென்றோம். அப்போது ஸ்ரீதரின் சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டது. ஜெயகல்யாணி சமீபத்தில்தான் இறந்துள்ளார். அதனால் ஸ்ரீதர் இறந்த பிறகுதான் அவரின் தங்கை ஜெயகல்யாணி இறந்திருக்க வேண்டும் என்று கருதுகிறோம்.

நடிகர், நடிகையின் வீடு
நடிகர், நடிகையின் வீடு
தந்தையின் உடல்நிலை; வேலை இழப்பு; மன அழுத்தம்! - மும்பையில் சீரியல் நடிகை தற்கொலை

இரண்டு பேரின் சடலங்களின் அருகில் கிடந்த இரண்டு செல்போன்களைப் பறிமுதல் செய்துள்ளோம். அதன்மூலம் விசாரணை நடந்துவருகிறது. ஸ்ரீதர், ஜெய கல்யாணி ஆகிய இருவருக்கும் திருமணமாகவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது. ஸ்ரீதரும் ஜெயகல்யாணியும் பக்கத்து வீட்டில் குடியிருப்பவர்களிடம்கூட சரியாகப் பேசாமல் இருந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் சொந்த வீட்டில் குடியிருந்து வந்துள்ளனர். ஸ்ரீதரும் ஜெயகல்யாணியும் சின்னத்திரை மற்றும் சினிமாவில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. அதுதொடர்பாகவும் விசாரணை நடத்திவருகிறோம். கொரோனா ஊரடங்கு சமயத்தில் இவர்களின் வீடு பூட்டியே இருந்ததாக அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் கூறினர். சினிமா வாய்ப்புகள் இல்லாமல் வருமானமின்றி இவர்கள் சிரமப்பட்டதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.

சம்பவம் நடந்த இடம்
சம்பவம் நடந்த இடம்

ஸ்ரீதர், ஜெயகல்யாணி குறித்து மேலும் தகவலறிய சின்னத்திரை நடிகர் சங்கத்தில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம். இவர்கள் இருவரும் எதற்காக தற்கொலை செய்துகொண்டார்கள் என்ற காரணம் தெரியவில்லை. மேலும், இவர்கள் இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்களா என்பது பிரேதப் பரிசோதனை முடிவில் தெரியவரும்" என்றனர்.

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் வருமானமின்றி தவிப்பவர்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்துவருகிறது. கொடுங்கையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடிகர் ஸ்ரீதர், நடிகை ஜெயகல்யாணி ஆகியோர் பூட்டிய வீட்டுக்குள் இருந்து அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களின் மரணம் குறித்து விசாரணை நடந்துவருகிறது.

கொடுங்கையூர் காவல் நிலையம்
கொடுங்கையூர் காவல் நிலையம்

கீழ்தளத்தில் உள்ள வீட்டில் இவர்கள் இருவரும் குடியிருந்துவந்துள்ளனர். மாடி வீடு பயன்படுத்தப்படாமல் உள்ளது. இருவரும் 40 வயதைக் கடந்தும் திருமணம் செய்யாமல் இருந்துள்ளனர். இவர்களைப் பற்றி பக்கத்தில் வசிப்பவர்களுக்குகூட எந்தத் தகவலும் தெரியவில்லை. வீட்டிலிருந்து தூர்நாற்றம் வீசிய பிறகுதான் இருவரும் இறந்த தகவல் வெளியில் தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் கடும் மனவருத்தத்திலும் மன அழுத்தத்திலும் இருந்ததாகத் தகவல் கிடைத்துள்ளது. இருவரின் உறவினர்கள் மற்றும் சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தில் விசாரித்தால் மட்டுமே கூடுதல் தகவல் கிடைக்கும்" என்றார்.

பூட்டிய வீட்டுக்குள் அண்ணன், தங்கை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு