Published:Updated:

`தொட்டிக்குள் இறங்கினால் சிக்கல்' என்றோம்..! -சென்னையில் தம்பியைக் காப்பாற்ற உயிரிழந்த அண்ணன்

சென்னையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதால் தம்பியைக் காப்பாற்றுவதற்காக அண்ணன் உயிர்விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அருண்குமார்
அருண்குமார்

சென்னை ராயப்பேட்டையில் செயல்பட்டு வருகிறது பிரபலமான தனியார் மால் ஒன்று. ` இங்குள்ள கீழ்தளத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும்' என ஐஸ்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பவரிடம் கூறியுள்ளனர். இதையடுத்து, ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த அருண்குமார், ரஞ்சித்குமார், யுவராஜ், அஜித், ஸ்ரீநாத் ஆகியோரை கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணிக்குத் தண்டபாணி அனுப்பி வைத்தார். இதில் அருண்குமாரும் ரஞ்சித்குமாரும் சகோதரர்கள்.

ராயப்பேட்டையில் உள்ள மால்
ராயப்பேட்டையில் உள்ள மால்

மொத்தம் 3 தொட்டிகளைச் சுத்தம் செய்யும் பணியில் 5 பேரும் அதிகாலை முதலே ஈடுபட்டனர். முதலில் 2 தொட்டிகளை ஏணி மூலம் உள்ளே இறங்கி சுத்தம் செய்தனர். 3-வது தொட்டியை மேலிருந்தே சுத்தம் செய்யலாம் என அவர்கள் முடிவு செய்தனர். அப்போது அங்கு வந்த மாலின் மேற்பார்வையாளர் ஒருவர், `உள்ளே இறங்கி சுத்தம் செய்யுங்கள், அதற்காகத்தான் காசு கொடுக்கிறோம்' என்று கூறியுள்ளார். அதற்கு ஊழியர்கள், `எந்தவித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் உள்ளே இறங்கினால் சிக்கல்' என்று கூறியுள்ளனர். ஆனால், அதை அவர் காதுகொடுத்து கேட்கவில்லை.

இதையடுத்து ரஞ்சித்குமார் ஏணி மூலம் மூன்றாவது தொட்டிக்குள் இறங்கினார். சுத்தம் செய்துகொண்டிருந்தபோது அவர் விஷவாயு தாக்கி மயங்கிவிழுந்தார். தொட்டிக்குள் தம்பி மயங்கிக் கிடப்பதைப் பார்த்த அண்ணன் அருண்குமார், அவரைக் காப்பாற்ற உள்ளே இறங்கினார். சக ஊழியர்களின் உதவியோடு ரஞ்சித்குமாரை அருண்குமார் வெளியில் கொண்டுவந்தார். ஆனால், அதற்குள் அருண்குமார் மயங்கிவிழுந்தார். இதனால் அருண்குமாரை மற்றவர்கள் மீட்டனர். மாலின் அருகே உள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அருண்குமாரைக் கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அருண்குமார் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

அருண்குமார்
அருண்குமார்

இதுகுறித்து தகவலறிந்ததும் அண்ணாசாலை போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். மேலும், பலியான அருண்குமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தம்பியைக் காப்பாற்ற அண்ணன் அருண்குமார் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அருண்குமாரின் உறவினர் கார்த்திக் நம்மிடம், ``அதிகாலையில் கழிவுநீரை சுத்தம் செய்வதற்காக 5 பேரை அழைத்துச் சென்றார் தண்டபாணி. எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் அங்கு கொடுக்கப்படவில்லை. ஒரு ஆள் உள்ளே செல்லும் அளவுக்குத்தான் வழி இருந்தது. சுத்தம் செய்துவிட்டு வெளியில் வந்தபோதுதான் வால்வு திறந்துவிடப்பட்டுள்ளது.

கார்த்திக்
கார்த்திக்

இதனால் விஷவாயு தொட்டி முழுவதும் பரவி ரஞ்சித்குமார் மயக்கமடைந்துள்ளார். அவரைக்காப்பாற்ற அருண்குமார் முயன்றபோது அவர் இறந்துவிட்டார். அருணுக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. அந்தக் குழந்தையின் எதிர்காலம் கேள்விகுறியாகியுள்ளது" என்றார் வேதனையுடன்.