Published:Updated:

தூத்துக்குடி: செல்போனில் அதிக நேரம் செலவிட்ட தங்கை?; வெட்டிக் கொன்ற அண்ணன்! - அதிர்ச்சி சம்பவம்

கொலை
கொலை

தூத்துக்குடியில் செல்போனில் அதிக நேரம் செலவிட்டு மூழ்கியதால் தங்கையை அண்ணனே கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரம் அருகிலுள்ள பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் சுடலைமுத்து. இவரது மனைவி பவானி. இவர்களுக்கு மாலைராஜா என்ற மகனும் கவிதா உள்ளிட்ட மூன்று மகள்களும் உள்ளனர். மாலைராஜா, கட்டடக்கூலி வேலைக்கு சென்று வருகிறார். கவிதா பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கவிதாவைத் தவிர மற்ற இரண்டு மகள்களுக்கு திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்வதற்காக தந்தை சுடலைமுத்து, மகள் கவிதாவுக்கு கடந்த ஆண்டு ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். ஆன்லைன் வகுப்பு நேரம் போக மீதமுள்ள நேரங்களில் செல்போனில் பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பார்த்துக் கொண்டிருந்தாராம்.

உயிரிழந்த கவிதா - கொலை செய்த மாலைராஜா
உயிரிழந்த கவிதா - கொலை செய்த மாலைராஜா

அதிக நேரம் செல்போனை பார்த்து வந்ததால், கவிதாவை மாலைராஜா அடிக்கடி கண்டிப்பாராம். இது சம்மந்தமாக அண்ணன், தங்கையிடையே அடிக்கடி சண்டை வருமாம். இருவரது சண்டையை பெற்றோர்களும், பக்கத்து வீட்டுக்காரர்களும் தடுத்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு வீட்டிற்கு வந்த போது வீட்டின் முதல் அறையில் உட்கார்ந்து கவிதா, செல்போனை பார்த்துக் கொண்டிருந்தாராம்.

அதைப்பார்த்து கவிதாவை, மாலைராஜா சத்தம் போட்டுள்ளார். மீண்டும் இருவருக்குமிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், கோபமடைந்த மாலைராஜா, அரிவாளால் கவிதாவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், கவிதாவின் வாய், கைகள் உள்ளிட்ட 10 இடங்களில் அரிவாள் வெட்டு பட்டு சிதைந்துள்ளது. கவிதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளார். உடனே, அங்கிருந்து மாலைராஜா தப்பியோடியுள்ளார். இதையடுத்து அப்பகுதியினர் கவிதாவை, மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வெட்டப்பட்ட இடம்
வெட்டப்பட்ட இடம்

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். முறப்பநாடு காவல் நிலைய போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ”அந்தப் பய மாலைராஜாவுக்கு எதுக்கெடுத்தாலும் பொசுக்கு பொசுக்குன்னு கோவம் வரும். வீட்டுல இருக்கும் போது செல்போன் பார்த்துச்சுன்னு அடிக்கடி சத்தம் போடுவான். சில சமயங்கள்ல அடிப்பான். நல்லாப் படிக்கக்கூடிய பொண்ணு. வீட்டுல எல்லா வேலைகளையும் அந்தப் பிள்ளைதான் பார்க்கும்.

நேத்து அண்ணன் தங்கச்சிக்கு சண்டை வந்துச்சு. அவன், தங்கச்சிய திட்டுற சத்தமும் கேட்டுச்சு. எப்பவும் போல திட்டுறான்னு எல்லாரும் கண்டுக்காம விட்டுட்டாங்க. கொஞ்ச நேரத்துல ’ஐயோ.. அம்மா..’ன்னு அலறல் சத்தம் தெரு முழுக்கக் கேட்டுச்சு. வீட்டுக்குள்ள போயி பார்த்தா, முகத்துல, கையில, தோள்பட்டையிலன்னு அரிவாளால கொத்திப் போட்டுந்தான். ரத்தவெள்ளத்துல பிள்ளை துடிதுடிச்சா. ஊரு மக்கள் கூட்டம் கூடினதும், அந்தப் பய மாலை ராஜா.. ஓடிட்டான். கூடப் பொறந்த தங்கச்சின்னுகூடப் பார்க்காம, இப்படி வெட்டிக் கொன்னுட்டானே பாவிப் பய” எனப் புலம்பினர் அப்பகுதி மக்கள்.

கவிதாவின் வீடு
கவிதாவின் வீடு

”எந்த நேரமும் செல்போன் பார்த்ததுனால, பல தடவை சொல்லியும் கேட்கலை. நேத்து ரொம்ப வாக்குவாதம் ஆயிடுச்சு.ஆத்திரத்துல வெட்டிட்டேன்” என போலீஸாரின் விசாரணையில் கூறியுள்ளார் மாலைராஜா. “கவிதாவில் உடலில் 10-க்கும் மேற்பட்ட இடத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார் மாலைராஜா. செல்போனைப் பார்த்தைக் கண்டித்து கேட்காததால் வெட்டினேன் எனக் கூறியுள்ளார். ஆனால், உண்மையில் அதுதான் காரணமா, வேறு ஏதும் காரணமா என விசாரணை செய்து வருகிறோம்” என்றனர் போலீஸார்.

அடுத்த கட்டுரைக்கு