Published:Updated:

``தம்பியின் பிரிவைத் தாங்க முடியாத அண்ணன்''- ஒரே நேரத்தில் 2 மகன்களை இழந்த சென்னை அரசு ஊழியர்!

தம்பி தற்கொலை செய்ததும் அந்தப் பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியாத அண்ணன், அந்த அறைக்குச் சென்றார். பின்னர், தம்பி தற்கொலை செய்த அதே மின்விசிறியில் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை செய்த அண்ணன், தம்பி
தற்கொலை செய்த அண்ணன், தம்பி

சென்னை காசிமேடு காசிமாநகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவர் சென்னைத் துறைமுகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரின் மனைவி ஜோஸ்வின்மேரி இந்தத் தம்பதியருக்கு அனிஷ் என்கிற இருதயராஜ் (29), ஆரோக்கிய ஆகாஷ் (24) என 2 மகன்கள். அனிஷ் பிடெக் படித்துவிட்டு பிரபலமான ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தார். இவரின் தம்பி ஆரோக்கிய ஆகாஷ் பிஇ படித்துள்ளார். அண்ணன் தம்பிகளாக இருந்தாலும் இருவரும் நெருங்கிய நண்பர்களாக வாழ்ந்துவந்தனர்.

ஆரோக்கிய ஆகாஷ்
ஆரோக்கிய ஆகாஷ்

இந்தநிலையில், ஆரோக்கியஆகாஷ், தன்னுடைய நண்பர் ஒருவருக்கு நேற்று வாட்ஸ்அப்பில் மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், `ஹாய் ஃப்ரெண்ஸ், நான் இந்த உலகத்தைவிட்டே செல்கிறேன். என் குடும்பத்தை நீதாண்டா பார்த்துக்கொள்ள வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். அந்த மெசேஜைப் பார்த்ததும் ஆரோக்கிய ஆகாஷின் செல்போனுக்கு அந்த நண்பர் போன் கால் செய்துள்ளார். ஆனால், அவரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. உடனடியாக அந்த நண்பர் ஆரோக்கிய ஆகாஷின் அண்ணன் அனிஷுக்கு போனில் தகவல் தெரிவித்ததோடு நண்பனின் வீட்டுக்கும் அவசரமாக வந்தார்.

அதற்குள் தகவலைக் கேள்விப்பட்டதும் ஆரோக்கிய ஆகாஷின் அறைக்கு வீட்டில் உள்ளவர்கள் சென்றனர். உள்பக்கமாக அந்த அறை பூட்டியிருந்தது. வெளியிலிருந்து தட்டிப்பார்த்தும் ஆரோக்கிய ஆகாஷ் கதவைத் திறக்கவில்லை. அதனால் கதவை உடைத்து உள்ளே சென்றவர்களுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. மின்விசிறியில் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார் ஆரோக்கிய ஆகாஷ். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அனிஷ்
அனிஷ்

அங்கு ஆரோக்கிய ஆகாஷ் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்தத் தகவலைக் கேள்விப்பட்டதும் அனிஷ் மனம் உடைந்தார். மருத்துவமனையிலேயே கதறித் துடித்தார். தம்பியின் முகத்தையே நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். பின்னர் அவர் அங்கிருந்து வீட்டுக்குச் சென்றார். ஆரோக்கிய ஆகாஷின் சடலம், பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. வீட்டுக்கு வந்த அனிஷ், தம்பி இறந்த அறைக்குச் சென்று கதவைப்பூட்டிக் கொண்டார். பின்னர், அவரும் அதே மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வீட்டுக்குச் சென்ற அனிஷை அவரின் குடும்பத்தினர் தேடினர். அப்போது மாடியில் தம்பியின் அறை மீண்டும் பூட்டப்பட்டிருந்ததைக் குடும்பத்தினர் கவனித்தனர். அங்கு சென்று கதவைத் தட்டினர். ஆனால், கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றபோது அனிஷும் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஒரே நாளில் பெற்ற 2 மகன்களும் தற்கொலை செய்துகொண்டதால் அலெக்சாண்டரின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

தற்கொலை
தற்கொலை
வீட்டுக்கு வந்த அனிஷ் தம்பி இறந்த அறைக்குச் சென்று கதவைப்பூட்டிக் கொண்டார். பின்னர் தம்பி தற்கொலை செய்த மின்விசிறியை சில நிமிடங்கள் வெறித்துப் பார்த்தார். பின்னர் அவரும் அதே மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த இரண்டு தற்கொலைச் சம்பவங்கள் குறித்து காசிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் இசக்கிபாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். விசாரணையில் தற்கொலைக்கான காரணம் தெரியவந்தது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸார், ``இன்ஜினீயரிங் படித்த ஆரோக்கிய ஆகாஷுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. அதனால் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மனவருத்தத்தில் இருந்த ஆரோக்கிய ஆகாஷ், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அந்த மனவருத்தத்தில் அவரின் அண்ணன் அனிஷும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இருவரின் சடலங்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது" என்றனர்.