Published:Updated:

திருட்டு வழக்கால் பறிபோன வேலை... கொடூரமாகக் கொல்லப்பட்ட சேலம் சிறை வார்டன்

வீ கே.ரமேஷ்
VIJAYAKUMAR M

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிறை வார்டன், ஜாமீனில் வெளியே வந்த நிலையில் பத்துப் பேர் கொண்ட கும்பலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் சேலம் மாவட்டத்தில் நடந்துள்ளது.

மாதேஸ்
மாதேஸ்

சேலம் மாவட்டம், சூரமங்கலத்தை அடுத்த அய்யம்பெருமாம்பட்டி மூலக்கடையைச் சேர்ந்தவர் மாதேஸ் (28). இவர் சேலம் மத்திய சிறைச்சாலையில் வார்டனாகப் பணிபுரிந்து வந்தார். சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த செல்வம், நரசோதிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சங்கர் கணேஷ் ஆகியோருக்குச் சொந்தமான 2 கார்களை முன்விரோதம் காரணமாக கடந்த ஆண்டு ஜெயில் வார்டன் மாதேஸூம் அவரது நண்பர்களும் சேர்ந்து தீ வைத்து எரித்ததாகத் தெரிகிறது. சூரமங்கலம் காவல்நிலையத்தில் மாதேஸ் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது.

`ஃப்ரைடு ரைஸில் சிதறிய ரத்தத்துளிகள்!'- ஃபாஸ்ட் புட் கிச்சனில் நடந்த கொலை

இதனிடையே, நாமக்கல் மாவட்டம் களங்காணியைச் சேர்ந்த ரங்கசாமி என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இரும்பாலை பிரிவு ரோட்டில் நின்றுகொண்டிருந்தார். அங்கு வந்த மாதேஸூம், அவரது நண்பர்களும் சேர்ந்து ரங்கசாமியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ஒரு பவுன் நகை மற்றும் ரூ.1200 ரொக்கப் பணமும் பறித்துக்கொண்டு சென்றார்கள். இது சம்பந்தமாக சூரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மாதேஸ் கைது செய்யப்பட்டார். பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாதேஸ் பணிபுரிந்த சேலம் மத்திய சிறைச்சாலையிலேயே அடைக்கப்பட்டார். இதனால் மாதேஸ் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சஸ்பெண்டு செய்யப்பட்டதோடு குண்டர் சட்டமும் போடப்பட்டது.

மாதேஸூக்கு திருமணமாகி வினோதினி என்ற மனைவியும், 11 மாத பெண் குழந்தையும் இருக்கிறார்கள். இந்நிலையில் மாதேஸ் சமீபத்தில் சிறையிலிருந்து வெளியே வந்து சேலம் புதுரோட்டில் உள்ள தன் மாமியார் வீட்டில் மனைவி குழந்தையோடு வசித்து வந்தார். அவர் சிவதாபுரத்தை அடுத்த ஆண்டிபட்டியில் தனியாருக்குச் சொந்தமான மீன் பண்ணையை குத்தகைக்கு எடுத்து அதைக் கவனித்து வந்தார். நேற்று மாதேஸூம் அவரது நண்பர் வெங்கடேஷூம் ஆண்டிபட்டி சுடுகாடு பகுதியில் இருந்தார்கள். அப்போது அங்கு 2 கார்களில் 10க்கும் மேற்பட்டவர்கள் அடங்கிய ஒரு கும்பல் மாதேஸை ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள்.

கொல்லப்பட்ட மாதேஸ்
கொல்லப்பட்ட மாதேஸ்
எம். விஜயகுமார்

மாதேஸூக்கு உடல் முழுவதும் பல இடங்களில் வெட்டு ஆழமாக விழுந்ததால் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். பிறகு அந்தக் கும்பல் உயிர் போய்விட்டதா என்று பார்த்து விட்டுக் கிளம்பிச் சென்றார்கள். இதைப் பார்த்த மாதேஸின் நண்பர் வெங்கடேஷ் பயந்து ஓடிச் சென்று பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் தகவல் கொடுத்தார். அதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாதேஸின் மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதார்கள். மாதேஸின் உடலை சூரமங்கலம் காவல்துறையினர் மீட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்குக் கொண்டு சென்றார்கள். கொலையில் ஈடுபட்ட அந்த மர்மக் கும்பல் யார் என்றும் எதற்காகக் கொலை செய்யப்பட்டார் என்றும் கண்டறிந்து 9 பேரைக் கைது செய்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.