Published:Updated:

‘நீ எங்கு மாட்டினாலும் சுட்டுத்தள்ளிடுவேன்!' - வில்லங்க வீடியோவால் சிக்கிய வேலூர் கணவன்

கைது செய்யப்பட்ட கபாலீஸ்வரன்
கைது செய்யப்பட்ட கபாலீஸ்வரன்

`நீ எங்கு மாட்டினாலும் சுட்டுத்தள்ளிடுவேன்’ என்று சிங்கப்பூரில் உள்ள தனது இரண்டாவது மனைவியிடம் ‘டம்மி’ துப்பாக்கியைக் காட்டி மிரட்டி வீடியோ பதிவிட்ட நபரை போலீஸார் கைது செய்தனர்.

ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக வீடியோ ஒன்று பகிரப்பட்டது. அந்த வீடியோவில், கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு ஆபாசமாக ‘டயலாக்’ பேசியபடி, ‘நீ எங்கு மாட்டினாலும் சுட்டுத்தள்ளிடுவேன்... இது பொம்மைத் துப்பாக்கி இல்லை. நிஜத் துப்பாக்கி, சுடவா. பாத்துக்கோ செத்திடுவ’ என ஒரு நபர் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்தார். தொடர்ந்து, அந்த வீடியோவில், ஒரு பெண் பேசும் காட்சியும் வருகிறது. அதில், ‘வணக்கம், எனது பெயர் மலர். சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு. இப்போது சிங்கப்பூரில் வேலை செய்கிறேன். திருமணமாகி ஒரு மகள் உள்ளார். அவள் குழந்தையாக இருந்தபோது, எனது கணவர் இறந்துவிட்டார். மகள் இப்போது படித்துக் கொண்டிருக்கிறாள்.

மிரட்டப்பட்ட சிங்கப்பூரில் உள்ள பெண்.
மிரட்டப்பட்ட சிங்கப்பூரில் உள்ள பெண்.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு, வேலூர் காட்பாடியைச் சேர்ந்த கபாலீஸ்வரன் (40) என்பவர் என்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு ள வற்புறுத்தினார். நான் திருமணத்துக்கு மறுத்தேன். பின்னர், கையில் என் பெயரை பச்சை குத்திக்கொண்டதோடு விஷம் குடித்துவிட்டுக் கட்டாயப்படுத்தி என்னைத் திருமணம் செய்துகொண்டார். மூன்று மாதங்கள்கூட அவருடன் சேர்ந்து வாழ முடியவில்லை. மகளுக்கும் எனக்கும் அவர் எதுவும் செய்யவில்லை. அதனால், நான் மலேசியா சென்றேன். அங்கு வேலை செய்து இரண்டு ஆண்டுகள் கழித்து வேலூர் வந்தேன். கபாலி நிறைய தவறுகளைச் செய்தார். பி.எஸ்.என்.எல் ஊழியராகப் பணியாற்றிய அவர், அடிதடி கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறார்.

அதுமட்டுமல்ல, தன்னை, `அ.தி.மு.க அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்' என்றுகூறி அமைச்சர்களுடன் எடுத்துக்கொண்ட போட்டோவைக் காட்டி மிரட்டி வந்தார். பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 40 பேரிடம் 2 கோடி ரூபாய் வரை பணம் வாங்கி மோசடி செய்திருக்கிறார். பெண்கள் சிலரைத் தவறான தொழிலில் ஈடுபடுத்தியிருக்கிறார். பாதுகாப்பு இல்லாததால் என் மகளை அழைத்துக்கொண்டு திருச்செங்கோடு பகுதியில் உள்ள எனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டேன். 8 மாதங்களாகியும் கபாலீஸ்வரன் வரவில்லை. அவரிடமிருக்கும் என் நகை, பணத்தை பெற்றுத் தரக்கோரி வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். அரசியல் செல்வாக்கு காரணமாக அவர் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை.

கபாலீஸ்வரன்
கபாலீஸ்வரன்

இதையடுத்து, அவருடன் சேர்ந்துவாழ விரும்பாத நான், பெற்றோரிடம் கடன் வாங்கி சிங்கப்பூரில் வேலைக்கு வந்துவிட்டேன். இந்த நிலையில் எனக்கும் எனது மகள் மற்றும் தந்தைக்கும் போன் செய்து அசிங்கமாகப் பேசி, கொலை மிரட்டல் விடுக்கிறார். ஃபேஸ்புக்கில் போலிக் கணக்கு தொடங்கி அதில், என்னுடைய போட்டோ மற்றும் மகளின் போட்டோ, செல்போன் நம்பரை பதிவிட்டு நாளொன்றுக்கு 5 ஆயிரம் ரூபாய் எனப் பதிவிட்டுள்ளார். இதனால், நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன். இந்த வீடியோவை பார்ப்பவர்கள் எனக்கு உதவி செய்யவேண்டும். விடுமுறை கிடைக்காததால் சிங்கப்பூரிலிருந்து என்னால் வரமுடியவில்லை’ என வேதனையை வெளிப்படுத்தியிருந்தார்.

இதனையடுத்து வேலூர் எஸ்.பி பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில், டி.எஸ்.பி பாலகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை போலீஸார், வேலூர் கொசப்பேட்டை பிஷப் டேவிட் நகரில் பதுங்கியிருந்த கபாலீஸ்வரனை மடக்கிப்பிடித்துக் கைது செய்தனர். அப்போதும், அவர் போலீஸாரிடம் வாக்குவாதம் செய்து மிரட்டல் விடுத்திருக்கிறார். போலீஸார் தங்கள் பாணியில் விசாரித்த பிறகே கபாலீஸ்வரன் அமைதியானார். அவரிடமிருந்து 6 செல்போன்கள், 2 கத்திகள் மற்றும் ஒரு துப்பாக்கியை போலீஸார் பறிமுதல் செய்தனர். 

நான் திருமணத்துக்கு மறுத்தேன். பின்னர், கையில் என் பெயரைப் பச்சை குத்திக்கொண்டதோடு விஷம் குடித்து கட்டாயப்படுத்தி என்னைத் திருமணம் செய்துகொண்டார் கபாலீஸ்வரன்
மலர்

அந்தத் துப்பாக்கி ‘டம்மி’ என்று போலீஸார் தெரிவிக்கிறார்கள். இதற்கிடையில், போலீஸ் காவலில் உள்ள கபாலீஸ்வரனின் மற்றொரு வீடியோ வெளியாகியிருக்கிறது. அதில், ‘பொதுமக்கள் என்னை மன்னிக்க வேண்டும். எனது மனைவியைக் குடும்பச் சூழ்நிலை காரணமாக பிரிந்து வாழ்கிறேன். மனைவியை வேலூருக்கு வரவழைப்பதற்காகத் தான் பொம்மை துப்பாக்கியைக் காட்டி மிரட்டினேன். பொதுமக்களுக்கு நான் சிரமத்தை ஏற்படுத்திவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள். நான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவன் இல்லை. ரவுடியும் இல்லை. போலீஸார் என்னைக் கைது செய்து தண்டனை கொடுத்துள்ளனர்’ என்றார் பீதியுடன்.

அடுத்த கட்டுரைக்கு