Published:Updated:

புதுக்கோட்டை: கடலில் பண்டல் பண்டலாக மிதந்த கஞ்சா பொட்டலங்கள்! - மீட்டு வந்து ஒப்படைத்த மீனவர்கள்

கடலில் பண்டல் பண்டலாக மிதந்த கஞ்சா பொட்டலங்கள்
கடலில் பண்டல் பண்டலாக மிதந்த கஞ்சா பொட்டலங்கள்

துரைராஜ் என்ற மீனவர் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, ஒரு சணல் மூட்டை கிடைத்திருக்கிறது. அதை எடுத்துக்கொண்டு கரை திரும்பினார். அதில், 35 கிலோ அளவிலான கஞ்சா பொட்டலங்கள் இருந்திருக்கின்றன.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை அடுத்த கோட்டைப்பட்டினம் அருகே தெற்கு புதுக்குடியைச் சேர்ந்தவர் பாலமுருகன். தன் மீனவ நண்பர்களுடன் அவருக்குச் சொந்தமான ஃபைபர் படகில் கடலுக்குள் மீன்பிடித்துக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது கடலின் மேற்பரப்பில், ஒரு சணல் மூட்டை மிதந்துவந்திருக்கிறது. அதைக் கண்ட மீனவர்கள் அதை எடுத்து, தெற்கு புதுக்குடி கடற்கரைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர். இது குறித்து, கடலோரப் பாதுகாப்புக்குழுவுக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கடலோர பாதுகாப்புக் குழும இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு சாக்கு மூட்டைகளை மீட்டு விசாரணை நடத்தினார்.

கஞ்சா மூட்டை
கஞ்சா மூட்டை

விசாரணையில், சணல் மூட்டையில் 35 கிலோ அளவுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. அவை அனைத்தையும் கைப்பற்றினர். இதேபோல், வடக்குப்புதுக்குடியைச் சேர்ந்த ஆரியசாமி மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, சணல் மூட்டை ஒன்று தென்படவே, அது பற்றி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார். அந்த மூட்டையில் இருந்த14 பண்டல்களில் 34 கிலோ கஞ்சா பொட்டலங்களைக் கைப்பற்றினர் போலீஸார். இதேபோல், துரைராஜ் என்ற மீனவர் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோதும் ஒரு சணல் மூட்டை கிடைத்திருக்கிறது.

அதை எடுத்துக்கொண்டு கரை திரும்பினார். அதில், 35 கிலோ அளவிலான கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. இப்படி இரண்டு நாள்களில் மட்டும் சுமார் 100 கிலோ மதிப்பிலான கஞ்சா பொட்டலங்கள் கடலிலிருந்து கிடைத்திருக்கின்றன. அடுத்தடுத்து கடலிலிருந்து கஞ்சா பொட்டலங்கள் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இது பற்றி போலீஸாரிடம் கேட்டபோது, `கடற்கரைப் பகுதியையொட்டித்தான் சிலர் கஞ்சா கடத்தலில் ஈடுபடுகின்றனர். கடந்த சில மாதங்களாகவே கஞ்சா விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்திவருகிறோம். அதிரடி ரெய்டு போன்றவற்றால் கஞ்சா கடத்தல் பெருமளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

கஞ்சா
கஞ்சா

தற்போது அடுத்தடுத்து கடலிலிருந்து மீனவர்கள் மூலம் மூட்டைகளில் கஞ்சா கிடைத்திருக்கிறது. கடத்தலில் ஈடுபடுபவர்களைப் பிடித்து வருகிறோம். இவற்றைக் கடத்த முயன்றவர்கள் போலீஸுக்கு பயந்து தூக்கி வீசிவிட்டுச் சென்றார்களா அல்லது கடத்த முயன்றபோது தவறி விழுந்திருக்கின்றனவா என்பது குறித்தும் தொடர் விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு