Published:Updated:

ஓடும் பேருந்தில் பெண்ணிடம் 5 பவுன் நகை திருட்டு; சாதுர்யமாக நகையை மீட்ட நடத்துனர் - நடந்தது என்ன?

பரமத்தி வேலூர் ( நா.ராஜமுருகன் )

அரசுப் பேருந்தில் சென்ற பெண் பயணி ஒருவரிடம் நூதன முறையில் 5 பவுன் தங்க நகையைத் திருடிய மூன்று பெண்களிடமிருந்து, பேருந்து நடத்துனர் சாதுர்யமாக நகையை மீட்ட சம்பவம், பயணிகளிடம் பாராட்டைப் பெற்றிருக்கிறது.

ஓடும் பேருந்தில் பெண்ணிடம் 5 பவுன் நகை திருட்டு; சாதுர்யமாக நகையை மீட்ட நடத்துனர் - நடந்தது என்ன?

அரசுப் பேருந்தில் சென்ற பெண் பயணி ஒருவரிடம் நூதன முறையில் 5 பவுன் தங்க நகையைத் திருடிய மூன்று பெண்களிடமிருந்து, பேருந்து நடத்துனர் சாதுர்யமாக நகையை மீட்ட சம்பவம், பயணிகளிடம் பாராட்டைப் பெற்றிருக்கிறது.

Published:Updated:
பரமத்தி வேலூர் ( நா.ராஜமுருகன் )

சேலத்திலிருந்து திண்டுக்கல்லுக்கு அரசுப் பேருந்து ஒன்றில் பெண் ஒருவர், தன் மகளுடன் நேற்று மதியம் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது, நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர், மோகனூர் சாலை அருகே பேருந்து வந்தபோது அந்தப் பெண் பயணி தனது பேக்கில் வைத்திருந்த 5 பவுன் நகைகளைக் காணவில்லை எனக் கூறி கதறி அழுதுள்ளார். இந்த நிலையில், அரசுப் பேருந்திலிருந்து மோகனூர் சாலையில் இறங்கிய மூன்று பெண்கள் மீது சந்தேகமடைந்த பேருந்து நடத்துனர், ஓட்டநரிடம் பேருந்தை நிறுத்துமாறு கூறிவிட்டு இறங்கி வேகமாக மோகனூர் சாலையில் நின்றுகொண்டிருந்த மூன்று பெண்களை நோக்கி ஓடிச் சென்றிருக்கிறார்.

இதைப் பார்த்த அந்தப் பெண்கள், கையிலிருந்த தங்க நகைகளைக் கீழே போட்டுவிட்டு ஒன்றும் தெரியாததுபோல் நின்றிருந்தார்கள். அவர்கள் கீழே போட்ட தங்க நகையை நடத்துனர் எடுத்துக் கொண்டுபோய் பேருந்தில் ஏறி, பொதுமக்களிடம் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் இந்த மூன்று பெண்களும் நகை திருடியது குறித்துக் கூறியுள்ளார். பின்னர், மீட்கப்பட்ட 5 பவுன் தங்க நகைகளை பேருந்தில் பயணம் செய்த அந்தப் பெண்ணிடம் பேருந்து நடத்துனர் ஒப்படைத்தார். அந்தப் பெண் பயணி அழுதுகொண்டே நகையை மீட்டுக் கொடுத்த நடத்துனரின் காலில் விழுந்து கண்ணீர்மல்க நன்றியை தெரிவித்தார்.

பரமத்தி வேலூர்
பரமத்தி வேலூர்
நா.ராஜமுருகன்

இந்த நிலையில், அந்தப் பகுதியிலிருந்த பொதுமக்கள் பெண்ணிடம் நகையை திருடிய மூன்று பெண்களையும் பரமத்திவேலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதைத் தொடர்ந்து, மூன்று பெண்களிடமும் போலீஸார் நடத்திய விசாரணையில், பேருந்தில் நாமக்கல்லில் ஏறி திண்டுக்கல் நோக்கிச் சென்ற அந்தப் பெண்ணின் அருகில் அமர்ந்து பயணம் செய்தபோது சில்லறைக் காசுகளை கீழே போட்டுவிட்டு `காசு கீழே விழுந்துவிட்டது. எடுத்து தாருங்கள்’ எனக் கூறிவிட்டு அவரை திசைதிருப்பி அவர் பேக்கில் வைத்திருந்த 5 பவுன் நகையை திருடியதாக போலீஸாரிடம் கூறியுள்ளனர்.

நடத்துனர் ஓடி வருவதைப் பார்த்ததும் நகைகளைத் திருடியது தெரிந்துவிட்டது எனத் தெரிந்து நகைகளைக் கீழே போட்டுவிட்டு ஓடாமல் அங்கேயே நின்றுகொண்டதாகவும் கூறியுள்ளனர். போலீஸார் நடத்திய விசாரணையில் அவர்கள் மூன்று பேரும் திருச்சி மாவட்டம் லால்குடி, மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ராணி, வைதேகி, ஆராதனா என்பது தெரியவந்தது. நகைகளைப் பறிகொடுத்தவர், குருந்தம்பாடி, டி.அய்யலூரைச் சேர்ந்த சாந்தாமணி என்பதும் மட்டும் தெரியவந்துள்ளது. அதே பேருந்தில் அவர் சென்றுவிட்டதால் அந்தப் பெண் பயணியின் முகவரியும், சரியான சமயத்தில் சாதுர்யமாகச் செயல்பட்டு நகைகளை மீட்டுக் கொடுத்த பேருந்து நடத்துனர் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை என போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து, அந்த மூன்று பெண்களிடமும் பரமத்திவேலூர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism