Published:Updated:

சென்னை: கந்துவட்டிக் கொடுமை; ரூ.15 லட்சம் கடனுக்கு ரூ. 44 லட்சம் கொடுத்த வியாபாரி தற்கொலை!

கந்துவட்டிக் கொடுமையால் தற்கொலை
கந்துவட்டிக் கொடுமையால் தற்கொலை

சென்னையில் கந்துவட்டிக் கொடுமையால் தன் கடைக்குள் வியாபாரி செல்வகுமார் என்பவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை கொரட்டூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 61-வது தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார் (43). இவரின் மனைவி சரஸ்வதி. பத்தாம் வகுப்புவரை படித்த செல்வகுமார், கொரட்டூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் `செல்வம் ஸ்டோர்ஸ்' என்ற பெயரில் மளிகை கடை நடத்தி வந்தார். கொரட்டூர் ரயில் நிலையத்துக்கான சுரங்கப் பாதை பணிகள் தொடங்கியபோது செல்வகுமாரின் கடையில் வியாபாரம் குறைந்தது. அதனால் பால் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார். அதற்காக கொரட்டூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த பரசுராமன் என்பவரிடம் 4 லட்சம் ரூபாயும், கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் என்பவரிடம் 11 லட்சம் ரூபாயும் கடனாக வாங்கியிருந்தார். ஆனாலும் சுரங்கபாதைப் பணிகள் பல ஆண்டுகளாக நடந்ததாலும் கொரோனா ஊரடங்கு காரணமாகவும் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது.

பிரகாஷ்
பிரகாஷ்

இதையடுத்து கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு தொல்லை கொடுத்தனர். அதனால் செல்வகுமார் மனவேதனையடைந்தார். சில தினங்களுக்கு முன் செல்வகுமார், கடையில் இருந்தபோது பரசுராமனின் மகன் பிரகாஷ் என்பவர் பணம் கேட்டிருக்கிறார். அப்போது செல்வகுமார், வாங்கிய கடன் 4 லட்சம் ரூபாய்க்கு இதுவரை 11 லட்சம் ரூபாய் வரை வட்டி செலுத்திவிட்டேன் என்று கூறியிருக்கிறார். அதைக் கேட்ட பிரகாஷ், வட்டியையும் அசலையும் கொடுக்கும்படி கூறினார். இல்லையென்றால் கடையை தன் பெயருக்கு எழுதிக் கொடுக்கும்படி கேட்டார். அதைப் போல தியாகராஜனும் பணத்தைக் கேட்டுத் தொல்லை கொடுத்தாகக் கூறப்படுகிறது. அவரிடமும் செல்வகுமார், தான்வாங்கிய 11 லட்சம் ரூபாய் கடனுக்கு 33 லட்சம் ரூபாய் வரை கொடுத்துவிட்டேன் என்று கூறினார். அதற்கு அவர் வட்டி, அசலைக் கொடுக்கவில்லை என்றால் வீட்டை எழுதித் தரும்படி தொல்லை கொடுத்தார். அதனால் இருவரிடமும் கடனை அடைத்துவிடுவதாகச் செல்வகுமார் கூறினார்.

ஆனால் கடனைக் கொடுக்க முடியாத வருத்தத்திலிருந்த செல்வகுமார், 20-ம் தேதி நேற்று வழக்கம்போல கடையைத் திறந்தார். பின்னர் கடையை உள்பக்கமாகப் பூட்டிக்கொண்ட செல்வகுமார், தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கொரட்டூர் போலீஸ் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் வழக்கு பதிவு செய்து செல்வகுமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் செல்வகுமாரின் தற்கொலை குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் செல்வகுமாருக்கு கடன் கொடுத்த பரசுராமன் உயிரிழந்த நிலையில் அவரின் மகன் பிரகாஷ் பணம் கேட்டு வந்திருக்கிறார்.

சென்னை: `கணவருடன் சந்தோஷமாக வாழ முடியவில்லை!’ - திருமணமான இரண்டே மாதங்களில் இளம்பெண் தற்கொலை
கைது செய்யப்பட்ட தியாகராஜன்
கைது செய்யப்பட்ட தியாகராஜன்

இதற்கிடையில் செல்வகுமாரின் மனைவி சரஸ்வதி கொரட்டூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``கடன் தொல்லையால் என்னுடைய கணவர் செல்வகுமார், மனமுடைந்து சரியாக சாப்பிடாமல் இருந்தார். பிரகாஷூம் தியாகராஜனும் வீட்டுக்கு வந்து கடனைக் கேட்டபோது, "உங்களிடம் எப்படி கடனை வாங்க வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும்" என மிரட்டிவிட்டுச் சென்றனர். மேலும் கடனும் வட்டியும் தலைக்கு மேல போயிடுச்சு. பிரகாஷ், தியாகராஜனால கடையில ஒரு நிமிஷம் கூட உட்கார முடியல. அவர்களுக்கு நான் செத்தால்தான் நிம்மதி என புலம்பிக் கொண்டே சென்றார். அது மாதிரி எந்தக் காரியத்தையும் செய்யாதீங்க. எல்லா பிரச்னையும் சீக்கிரத்திலேயே தீர்ந்துதிடும் என ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தேன். ஆனால் 20-ம் தேதி 11 மணியளவில் ஸ்டோர் ரூம்பில் உள்ள மின்விசிறி கொக்கியில் தூக்குப் போட்டு செல்வகுமார் இறந்து கிடப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. அங்குச் சென்று பார்த்தபோது அவர் இறந்த நிலையில் கிடந்தார். எனவே என் கணவரின் இறப்பு குறித்து விசாரணை செய்து பிரகாஷ், தியாகராஜன் மீது நடவடிக்கை வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

தற்கொலை செய்வதற்கு முன் செல்வகுமார் எழுதிய கடிதம் போலீஸாரிடம் சிக்கியது. அதில் ``என் சாவுக்கு பிரகாஷ், தியாகராஜன் ஆகியோர்தான் காரணம். பரசுராமனிடம் வாங்கிய 4 லட்சம் ரூபாய் கடனுக்கு 10 லட்சம் ரூபாயும் தியாகராஜனிடம் வாங்கிய 11 லட்சம் ரூபாய் கடனுக்கு 33 லட்சம் ரூபாயும் கொடுத்துவிட்டேன். மறுபடியும் பணம் கேட்பதால் மனநிம்மதியில்லை. டைம் கேட்டாலும் தராமல் கஷ்டப்படுத்துகிறார்கள். கல்லா பெட்டியில் 25000 ரூபாய் உள்ளது. இன்சூரன்ஸ், ஆதார் கார்டு பேக்கில் இருக்கிறது. அதோடு பச்சை நிற டைரியின் பின்பக்கத்தில் பின்நம்பர்களை எழுதி வைத்திருக்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து பிரகாஷையும் தியாகராஜனையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வியாபாரி ஒருவர் கந்துவட்டிக் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கொரட்டூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு