Published:Updated:

சென்னை: `புகாரளித்தும் நடவடிக்கை இல்லை!’ - உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் மீது தொழிலதிபர் புகார்

போலீஸ்
போலீஸ்

சென்னையில் பணியாற்றும் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் ஆகியோர் மீது தொழிலதிபர் ஜெயலானி என்பவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்திருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயலானி (38). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, `நான் மேற்கண்ட முகவரியில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் ஜவுளி வியாபாரம் செய்துவருகிறேன். எனக்கும், நான் கடை வைத்திருக்கும் இடத்திலுள்ள ஒருவருக்கும் இடையே வாடகைப் பிரச்னை இருந்துவருகிறது. அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம்
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம்

இந்தநிலையில், என்னுடைய வியாபாரத்தை முடக்கும் வகையில் 2.8.2021-ம் தேதி கடையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அது தொடர்பாக நான் மின்சார வாரியத்தில் புகாரளித்தேன். ஆனால் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்தச் சமயத்தில் கடையின் மின் மீட்டரைக் காணவில்லை. 3.8.2021-ம் தேதி மின் மீட்டர் மாயம் குறித்து காவல் துறையில் புகாரளித்தேன். திருமங்கலம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர்.

Vikatan

4.8.2021-ம் தேதி நான் கடையைத் திறக்க முடியாதபடி சிலர் கடையின் முன் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் கடையைத் திறக்க வேண்டும் என்று கூறியபோது எனக்குக் கொலை மிரட்டல் விடுத்தனர். அது தொடர்பாக திருமங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்தபோது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் உதவி கமிஷனரிடம் தகவலைத் தெரிவித்தேன். ஆனால் அவரும் கண்டுகொள்ளவில்லை. அப்போதுதான் கடையை வாடகைக்குவிட்டவருக்கு ஆதரவாக உதவி கமிஷனரும் இன்ஸ்பெக்டரும் செயல்படுவது தெரியவந்தது. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மாயமான மின் மீட்டர்
மாயமான மின் மீட்டர்

இது குறித்து ஜெயலானி கூறுகையில், ``வாடகைப் பிரச்னை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது என்னைக் கடைக்குள் செல்லவிடாமல் தடுத்துவருகின்றனர். கடைக்குள் லட்சக்கணக்கான மதிப்பில் துணிகள் இருக்கின்றன. தற்போது சட்டத்துக்குப் புறம்பாக கடையை காலிசெய்ய காவல்துறையினர் மூலம் பல வகைகளில் முயற்சிகள் நடக்கின்றன. அதனால்தான் கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்திருக்கிறேன்" என்றார்.

இது குறித்து சம்பந்தப்பட்ட திருமங்கலம் காவல்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கத் தொடர்பு கொண்டபோது அவர்கள் பதிலளிக்கவில்லை.

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகாரைப் பெற்ற உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, ``ஏற்கெனவே திருமங்கலம் காவல் சரகத்தில் பணியாற்றிய உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், சில காவலர்கள் மீது சி.பி.சி.ஐ.டி போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். தற்போது அதே காவல் சரகத்தில் பணியாற்றும் சில அதிகாரிகள் மீது புகார் வந்திருக்கிறது. எனவே, புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்படும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு