சென்னை சூளைமேடு, இளங்கோவடிகள் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் கட்டுமான நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிலையில் சுரேஷ்குமாரின் மகனுக்கு பெண் குழந்தை பிறந்தது. அதனால் சுரேஷ்குமாரின் குடும்பம் மகிழ்ச்சியில் திளைத்தது. மருத்துவமனைக்குச் சென்று பேத்தியைப் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்த சுரேஷ்குமார், தன்னுடைய நண்பர்கள், உறவினர்களுக்கு தகவலைத் தெரிவித்தார். அதன்பிறகு வீட்டில் தன்னுடைய அறைக்குச் சென்று சுரேஷ்குமார் தூங்கினார்.

இந்த நிலையில், சுரேஷ்குமாரின் வீட்டிலிருந்து இன்று (15.12.2022) காலை புகை வந்ததது. அதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், தீயணைப்பு நிலையத்துக்கும், சூளைமேடு காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், சுரேஷ்குமாரின் படுக்கையறைக்குச் சென்றனர். அங்கு அவர் கருகிய நிலையில் சடலமாக கிடந்தார். அந்த அறையில் மது பாட்டில்களும் சிகரெட் துண்டுகளும் கிடந்தன. இதையடுத்து சூளைமேடு போலீஸார், தொழிலதிபர் சுரேஷ்குமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்த சூளைமேடு போலீஸார், தொழிலதிபர் சுரேஷ்குமாரின் மரணத்துக்கு என்ன காரணம் என விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஏ.சி-யிலிருந்து மின்கசிவு ஏற்பட்டதே காரணம் என தெரியவந்திருக்கிறது. இந்த நிலையில் சுரேஷ்குமார் உயிரிழந்த தகவல் அவரின் குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தப்பட்டது. அதனால் ஒட்டுமொத்த குடும்பமும் சோகத்தில் மூழ்கியது.

இது குறித்து போலீஸார், ``பிரேத பரிசோதனை அறிக்கையில்தான் தொழிலதிபர் சுரேஷ்குமாரின் மரணத்துக்கான முழு காரணம் தெரியவரும். தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி ஏ.சி-யில் மின்கசிவு ஏற்பட்டு இந்த விபத்து நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறோம். சம்பவத்தன்று தொழிலதிபர் சுரேஷ்குமார் மட்டும் தனியாக வீட்டில் இருந்திருக்கிறார். அவரின் குடும்பத்தினர் மருத்துவமனையில் இருந்ததால் வீட்டில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.