தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவர் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பொன்னா நகர்ப் பகுதியில் வாடகை வீட்டில் வசித்துவந்தார். இவர் மனைவி உமாகோமதி, மகன் சிவபிரகாஷ். திண்டுக்கல் மாவட்டம், தங்கச்சியம்மாபட்டியிலுள்ள கனரா வங்கியின் கிளை மேலாளராக முத்துராமலிங்கம் பணிபுரிந்து கடந்த ஏப்ரல் மாதம் விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் இவருக்குக் கடன் தொல்லை இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. கடன் தொல்லை அதிகமானதால் மனமுடைந்த முத்துராமலிங்கம், அவர் மனைவி உமாகோமதி, மகன் சிவபிரகாஷ் ஆகிய மூன்று பேரும், ஜூன் 3-ம் தேதி வீட்டில் விஷம் குடித்தனர். இதில் நிகழ்விடத்திலேயே உமாகோமதி உயிரிழந்தார்.

உயிருக்குப் போராடிய முத்துராமலிங்கம், சிவபிரகாஷை மீட்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்துள்ளனர். ஒட்டன்சத்திரம் போலீஸார் உமாகோமதியின் உடலை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து விசாரணை நடத்திவந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்நிலையில் மூன்று நாள்களாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முத்துராமலிங்கம் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் அவர் மகன் சிவபிரகாஷ் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார். வங்கி மேலாளர், அவர் மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாரிடம் விசாரித்தோம். ``கடன் பிரச்னையால்தான் கோவில்பட்டியிலிருந்து பணியிடமாற்றம் பெற்றுக்கொண்டு முத்துராமலிங்கம் திண்டுக்கல் வந்திருக்கிறார். இங்கு வந்து ஓராண்டுதான் ஆகிறது. கடன் வாங்கி, கடன் கொடுத்து வந்திருக்கிறார். இதில் மொத்தமாக பெரிய தொகையை இழந்துள்ளதாகத் தெரிகிறது. அதேவேளையில் இவர் மகனும் காதல் விவகாரத்தில் சிக்கி யாரிடமும் பேசாமல், கொள்ளாமல் வீட்டிலேயே அடைந்துகிடந்திருக்கிறார். விஷம் குடித்த முத்துராமலிங்கமும், அவர் மகனும் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதனால் விசாரிக்க முடியவில்லை. அவர் மகனும் தற்போது சீரியஸாக இருப்பதாகக் கூறுகிறார்கள். அவர் ஓரளவுக்கு பேசக்கூடிய நிலைக்கு வந்துவிட்டால் எதற்காகத் தற்கொலை செய்துகொண்டனர் என்பது குறித்து உறுதியாகக் கூற முடியும்" என்றனர்.