Published:Updated:

சிவகங்கை: காரில் இருந்த 15 பெட்டிகள்! - இரவு ரோந்தில் சிக்கிய 34 கிலோ கஞ்சா

கஞ்சா பொட்டலம்
கஞ்சா பொட்டலம்

காரில் 15 பாக்ஸில் அடைக்கப்பட்ட சுமார் 34 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்ததையடுத்து, காரை சாக்கோட்டை காவல் நிலையத்துக்குக் கொண்டு வந்தனர்.

சிவகங்கை மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் கஞ்சா புழக்கம் அதிகரித்திருப்பதாகத் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, காவல்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை செய்து குற்றவாளிகளைக் கைதுசெய்தனர். கொரோனா காலகட்டத்தில் செலவுக்காக கஞ்சா விற்பனை செய்தும், பயங்கர ஆயுதங்களுடன் வசூல் வேட்டையில் ஈடுபட்டுக்கொண்டுமிருந்த பெண் தாதா தலைமையில் இயங்கிய கும்பலை திருப்புவனம், மானாமதுரை போலீஸ் தனிப்படை அமைத்து பிடித்தது. இதைத் தொடர்ந்து சிவகங்கை பொறுப்பு எஸ்.பி குற்றவாளிகளைப் பிடித்த காவல்துறையினருக்கு வாழ்த்துகள் தெரிவித்து கெளரவப்படுத்தினார்.

கஞ்சா பொட்டலம்
கஞ்சா பொட்டலம்

இந்தநிலையில், காரைக்குடி சாக்கோட்டை அருகேயுள்ள ஜெயங்கொண்டான் என்ற கிராமத்திலிருந்து, நாட்டுச் சேரி கிராமத்துக்குச் செல்லும் சாலையில் நேற்று நள்ளிரவு கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அந்த காரில் இருந்த நான்கு நபர்களும் தொடர்ந்து மற்றவர்களுக்கு இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக ரோந்துப் பணிக்கு வந்த சாக்கோட்டை போலீஸார் சந்தேகமடைந்து, அந்த நான்கு பேரையும் பிடித்து விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அப்போது அவர்கள் நால்வரு நள்ளிரவில் காரை நிறுத்தி, மது அருந்திக்கொண்டிருந்தது தெரியவந்தது.

மேலும், விசாரணையில் நான்கு நபரும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியிருக்கிறார்கள். காரை போலீஸார் சோதனையிட்ட போது அந்த நான்கு பேரும் போலீஸாரின் பிடியிலிருந்து தப்பி ஓடியிருக்கிறார்கள். காரில் 15 பாக்ஸ்களில் அடைக்கப்பட்ட சுமார் 34 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்ததையடுத்து, காரை சாக்கோட்டை காவல் நிலையத்துக்குக் கொண்டு வந்தனர். தப்பியோடிய நான்கு பேரையும் பிடிக்க போலீஸார் முயன்றுவருகின்றனர். இதற்கிடையே சம்பவ இடத்தை சிவகங்கை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்திஸ், இன்ஸ்பெக்டர் சுந்தரி ஆகியோர் நேரில் ஆய்வு விசாரணை நடத்திவருகின்றனர்.

கஞ்சா கொண்டு வந்த கார்
கஞ்சா கொண்டு வந்த கார்

இது குறித்து ஆய்வாளர் சுந்தரி கூறுகையில், ``இரவு ரோந்துப் பணியில் சந்தேகத்தின் அடிப்படையில் காரை சோதனை செய்தபோது அவர்கள் கஞ்சா கடத்தியது தெரிவந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடிவருகிறோம். அந்த நான்கு நபரில் ஒருவரை அடையாளம் கண்டுவிட்டோம். எனவே, நான்கு பேரையும் எளிதாகப் பிடித்துவிடுவோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு