Published:Updated:

காரைக்கால்: கஞ்சா வியாபாரியைப் பிடித்த காவலருக்குப் பணியிடமாற்றமா?! - ஆளுநருக்குப் பறந்த புகார்

கஞ்சா
கஞ்சா

கஞ்சா வியாபாரியைப் பிடித்த காவலர் ரமேஷ் என்பவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார் என்று ஆதாரங்களுடன் புதுவை துணைநிலை ஆளுநருக்கு காரைக்கால் மாவட்ட பா.ம.க புகார் அனுப்பியிருக்கிறது.

காரைக்காலை அடுத்த நிரவி  காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில்  போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, தமிழ்நாடு ஏனங்குடி பகுதியைச்  சேர்ந்த முத்துசாமி மகன் செல்வராஜ்  என்பவர்  கஞ்சா பொட்டலங்களுடன் பிடிபட்டார். அவர் வண்டியிலும், கைப்பையிலும் வைத்திருந்த கஞ்சா பொட்டலங்கள் காவலர்களாலும், காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வந்தவர்களாலும் புகைப்படம் எடுக்கப்பட்டது. அடுத்த சில மணி நேரத்தில் அரசியல்வாதிகள், உயரதிகாரிகள் தலையீட்டால் செல்வராஜ் எவ்வித வழக்குமின்றி அனுப்பிவைக்கப்பட்டார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. அதேநேரத்தில் கஞ்சா வியாபாரியைப் பிடித்த காவலர் ரமேஷ் என்பவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார் என்று ஆதாரங்களுடன் புதுவை துணைநிலை ஆளுநருக்கு காரைக்கால் மாவட்ட பா.ம.க புகார் அனுப்பியிருக்கிறது.

கஞ்சா
கஞ்சா

இது பற்றி பா.ம.க தரப்பில் பேசினோம். ``பிடிபட்ட கஞ்சா வியாபாரியின்  முதலாளி, காரைக்கால் மாவட்டத்தில்  மதுபான கடைகளுக்கு  ஆதரவாகச் செயல்படும்  அமைச்சரைச்  சந்தித்து, அதற்கான பிரதிபலன்களை  கொடுத்துவிட்டு, அவரது ஆதரவை நாடியிருக்கிறார். அமைச்சரின் உத்தரவின் பெயரில்  காரைக்கால்  காவல்துறை உயரதிகாரி ஒருவர் உடனடியாக   நிரவி காவல் நிலையத்துக்குச் சென்று, கஞ்சா கடத்திவந்த செல்வராஜ் மீது  எந்த வழக்கும் போடாமல்,  பல லட்ச ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்கலையும், கடத்தல் வாகனத்தையும்  செல்வராஜிடம் கொடுத்து  நிரவி காவல் நிலையத்திலிருந்து தமிழ்நாடு எல்லைவரை பாதுகாப்புடன் வழியனுப்பி வைத்திருக்கிறார். இந்தச் சம்பவம் நடைபெற்றபோது காவல் நிலையத்தின் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த கஞ்சா வியாபாரி செல்வராஜ் தொடர்பான காட்சிகளும் அகற்றப்பட்டிருக்கின்றன.

சில மாதங்களுக்கு முன்னர் காரைக்கால் கடற்கரை ஓரத்தில் அநாதையாகக் கிடந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கடந்த 16.10.2020 வெள்ளிக்கிழமை அன்றுகூட காரைக்கால் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இப்ராஹிம், விஜயகுமார் இருவர்  கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். சமீபகாலமாக காரைக்கால் மாவட்டத்திலுள்ள இளைஞர்கள் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாகி, தங்கள் வாழ்க்கையை இழந்துவரும் சூழலில், நிரவி காவல் நிலையத்தில் பிடிபட்ட முக்கியக் குற்றவாளியை, எந்த வழக்கும் பதியாமல், தங்களுக்குத் தேவையான பிரதிபலன்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த  தவற்றின் மூலம் காரைக்கால் மாவட்டத்துக்கும் காவல்துறைக்கும் அவப்பெயரை ஏற்படுத்திவரும் அதிகாரிகளையும்,  கஞ்சா கடத்தி வந்த செல்வராஜ் என்பவரையும் காவல்துறை உயர் அதிகாரிகள் நேரடியாக அழைத்து விசாரணை செய்து, அவர்கள் மீது போதைப்பொருள் தடுப்பு பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களைக் கைதுசெய்ய வேண்டும். கஞ்சா வியாபாரியைப் பிடித்துவந்த நேர்மையான காவலர் உடனடியாக நிரவி காவல் நிலையத்திலிருந்து  காரைக்கால் காவல் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.   

காரைக்கால் மாவட்டத்தை கஞ்சாவின் சீரழிவிலிருந்து காப்பாற்றுமாறு காரைக்கால் மாவட்ட  பாட்டாளி மக்கள் கட்சி  சார்பாக கேட்டுக்கொள்கிறோம்" என்றனர்.

sp office
sp office

இது குறித்து நிரவி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் தனசேகரனிடம் விளக்கம் கேட்டோம். ``எல்லாம் அக்கப்போர் சார். அப்படியொரு சம்பவமே  நடக்கலை. இங்கிருந்து எந்தக் காவலரும் மாற்றப்படலை" என்று மறுத்தார்.

அடுத்த கட்டுரைக்கு