Published:Updated:

ஆந்திரா டு தஞ்சை; செப்டிக் டேங்க்கில் கஞ்சா! - ஒரே நாளில் 3 பெண்கள் உட்பட12 பேர் கைது

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகள்
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகள்

அம்மாபேட்டையில் வீட்டு செப்டிக் டேங்க்கில் கஞ்சா மூட்டைகள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதை போலீஸார் கண்டுபிடித்து, அவற்றைப் பறிமுதல் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில், கஞ்சா விற்பனை அதிகரித்துவந்த நிலையில், அதைத் தடுப்பதற்காக தனிப்படை போலீஸ் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் 83 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பதுடன், மூன்று பெண்கள் உட்பட 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி, ஏழு இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து போலீஸார் அதிரடி நடவடிக்கையை எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் பறிமுதல் செய்துள்ள லாரி
போலீஸ் பறிமுதல் செய்துள்ள லாரி

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்றுவந்தது. இதைத் தடுக்க போலீஸ் நடவடிக்கை எடுத்தாலும், முற்றிலுமாக கஞ்சா விற்பனையைத் தடுக்க முடியவில்லை. தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா அமோகமாக விற்பனை செய்யப்படுகிறது. இளைஞர்களும் மாணவர்களும் கஞ்சா போதை பழக்கத்துக்கு அடிமையாகி, வாழ்க்கையைத் தொலைத்துவருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துவந்தனர்.

போலீஸ் என்னதான் கஞ்சா விற்பனையைத் தடுப்பதற்கான முயற்சி எடுத்தாலும், அடுத்த சில நாள்களில் மீண்டும் விற்பனை தொடங்கிவிடும். இது குறித்த தகவல் தஞ்சாவூர் எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய் கவனத்துக்கு வந்தது. `ஒரு இடத்துலகூட கஞ்சா விற்னை நடைபெறக் கூடாது. இதை உடனே தடுக்க வேண்டும்' என வல்லம் டி.எஸ்.பி சீதாராமன் மேற்பார்வையில், சப்இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் போலீஸ் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

கைதுசெய்யப்பட்டவர்
கைதுசெய்யப்பட்டவர்

சந்திரசேகரன் தலைமையிலான போலீஸார் தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் ஆந்திராவிலிருந்து ஒரு லாரி மூலம் தஞ்சைக்கு கஞ்சா கடத்திவருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து லாரியில் இருந்த 15 கிலோ கஞ்சாவையும், லாரியையும் போலீஸார் பறிமுதல் செய்ததுடன், அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்தனர்.

தஞ்சாவூர் அருகே உள்ள அம்மாபேட்டை பகுதியிலுள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கிவைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. உடனடியாக அந்த வீட்டில் சோதனை மேற்கொண்டதில், வீட்டு செப்டிக் டேங்க்கில் கஞ்சா மூட்டைகள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதை போலீஸார் கண்டுபிடித்ததுடன் அவற்றையும் பறிமுதல் செய்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்
கைதுசெய்யப்பட்டவர்

இதேபோல் தஞ்சை, கும்பகோணம் பகுதிகளிலும் வீட்டில் கஞ்சா பதுக்கிவைக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். மொத்தம் 83 கிலோ கஞ்சா, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி, கஞ்சா விற்பனை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட ஏழு டூ வீலர்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒன்பது ஆண்கள், மூன்று பெண்கள் உட்பட 12 பேர் கைதுசெய்யபட்டுள்ளனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் பேசினோம். ``கஞ்சா விற்பனையைத் தடுப்பதற்காக எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து தனிப்படை போலீஸார் மாவட்டம் முழுவதும் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். கஞ்சா விற்பனை செய்த 12 பேர் கொண்ட கும்பல் கைதுசெய்யப்பட்டது.

கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனங்கள்
கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனங்கள்

ஆறு பேர் தஞ்சை தாலுகா காவல் நிலையத்திலும், நான்கு பேர் கும்பகோணம் காவல் நிலையத்திலும், இரண்டு பேர் அம்மாபேட்டை காவல் நிலையத்திலும் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது. இந்தத் தேடுதல் வேட்டையில் இரண்டு பேர் தப்பிவிட்டனர் அவர்களையும் போலீஸார் தேடிவருகின்றனர்’’ என்றனர். ஒரே நாளில் கஞ்சா விற்பனை செய்த கும்பலை மடக்கிப் பிடித்த போலீஸ் தனிப்படையை உயரதிகாரிகள் பாராட்டியதாகத் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு