Published:Updated:

இன்ஜினீயரிங் கல்லூரி... ஐடி கம்பெனி... கஞ்சா நெட்வொர்க்... பாதை மாற்றிய போதைப் பயணம்!

பாதை மாற்றிய போதைப் பயணம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பாதை மாற்றிய போதைப் பயணம்!

பங்களா டைப்பில் தனியாக இருந்த அந்த வீட்டில் நுழைந்து பார்த்தால், கிலோ கணக்கில் கஞ்சா பார்சல்கள். கூடவே பத்து மி.லி அளவுள்ள கஞ்சா ஆயில் பாட்டில், 16 ஊசிகள் இருந்தன.

சென்னை சோளிங்கநல்லூர், வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதி அது. இரவுக் காவலர் பாலமுருகனுக்காகக் காத்திருந்தார் செம்மஞ்சேரி காவல் நிலைய தலைமைக் காவலர் சிங்காரவேலன். அப்போது பைக் ஒன்றில் இரண்டு இளைஞர்கள் அவரைக் கடந்து சென்றார்கள். சற்றுத் தள்ளி சாலையோர மரத்துக்குப் பின்னால் பைக்கை ஓரங்கட்டியவர்கள் சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு, அங்கிருந்த உணவு டெலிவரி நிறுவனத்தின் சீருடை அணிந்த ஒருவரிடம் பார்சலைக் கொடுத்தார்கள். ‘வழக்கமாக உணவு டெலிவரி நிறுவன நபரிடமிருந்துதான் பார்சலை வாங்குவார்கள்... இவர்கள் என்ன அவருக்கே சப்ளை செய்கிறார்கள்...’ என்று சந்தேகப்பட்ட தலைமைக் காவலர் அவர்களை வளைக்க... சென்னையின் கஞ்சா நெட்வொர்க் ஒன்று வகையாகச் சிக்கியிருக்கிறது.

தலைமைக் காவலர் அவர்களை வளைத்த சம்பவத்தை முதலில் பார்ப்போம். இந்தச் சம்பவத்தின்போது மஃப்டியிலிருந்தார் சிங்காரவேலன். அந்த இளைஞர்களின் அருகே சென்றவர், “யார் நீங்க... இங்கே என்ன செய்யறீங்க?” என்று கேட்டிருக்கிறார். தெனாவட்டாகப் பார்த்தவர்கள், “டிபன் பார்சல்... எதுக்காக கேட்குற... போய்யா அந்தாண்ட!” என்று திமிர் காட்டியிருக்கிறார்கள். விடாத சிங்காரவேலன், பார்சலைப் பறித்து கசக்கிப் பார்த்திருக்கிறார். அது கஞ்சா என்று காட்டிக்கொடுத்தது அவரது அனுபவ அறிவு. துளியும் தாமதிக்காதவர், இடுப்பில் சொருகியிருந்த கைவிலங்கை சடாரென எடுத்து உணவு டெலிவரி நிறுவன இளைஞரின் கைகளில் மின்னல் வேகத்தில் மாட்டினார். அப்போதுதான் அவர்களுக்கு இவர் போலீஸ் என்று உறைத்தது.

இன்ஜினீயரிங் கல்லூரி... ஐடி கம்பெனி... கஞ்சா நெட்வொர்க்... பாதை மாற்றிய போதைப் பயணம்!

“டேய்ய்ய்ய்... போலீஸுடா... ஓடுங்கடா...” என்று உணவு டெலிவரி நிறுவன இளைஞர் குரல் கொடுக்க... பைக் கிக்கரை உதைத்தார் ஓர் இளைஞர். ஆனால், அவ்வளவு சீக்கிரம் பைக் நகரவில்லை. அத்துடன் மரத்தின் வேரில் வழுக்கி விழுந்தது பைக். சரியாக மற்றொரு காவலர் பாலமுருகனும் வந்துசேர மூவரும் சுற்றிவளைக்கப்பட்டார்கள். மூவரும் கஞ்சா போதையில் இருந்ததால், அவர்களால் தப்பியோட முடியவில்லை.

காவல் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டார்கள் இளைஞர்கள். விசாரணையைத் தொடங்கினார் இன்ஸ்பெக்டர் விஜயகுமார். உணவு டெலிவரி நிறுவன சீருடை அணிந்தவரின் பெயர் விஜய். மற்றவர்கள் புகழ் மற்றும் அருண். மூவருமே பொறியியல் படித்தவர்கள். இவர்களில் அருணும் புகழும்தான் கஞ்சா டீலர்கள். இருவரையும் அழைத்துக்கொண்டு சோளிங்கநல்லூர் எம்.ஜி.ஆர் தெருவில் அவர்கள் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்று சோதனையிட்டது போலீஸ். ஒன்றும் சிக்கவில்லை. மீண்டும் வீட்டின் கதவைப் பூட்டியபோதுதான் சாவிக்கொத்தில் ஏகப்பட்ட சாவிகள் இருந்ததை கவனித்தார்கள் காவலர்கள். சந்தேகப் பொறிதட்ட, “எதுக்குடா இத்தனை சாவிங்க...” என்று கேட்டிருக்கிறார்கள். அதன் பிறகே பெருங்குடி டோல்கேட் பின்புறம் இருக்கும் ஒரு வீட்டின் சாவிகள் அவை என்பது தெரிந்தது. விஜய் தங்கியிருந்த வீடு அது.

விஜய், புகழ், அருண்
விஜய், புகழ், அருண்

பங்களா டைப்பில் தனியாக இருந்த அந்த வீட்டில் நுழைந்து பார்த்தால், கிலோ கணக்கில் கஞ்சா பார்சல்கள். கூடவே பத்து மி.லி அளவுள்ள கஞ்சா ஆயில் பாட்டில், 16 ஊசிகள் இருந்தன. காலியான கஞ்சா ஆயில் பாட்டில்களும் கிடந்தன. ஊசி மூலம் கஞ்சா ஆயிலை சிகரெட்டில் ஏற்றி, போதையில் மிதந்திருக்கிறார்கள் இவர்கள். 10 மி.லி ஆயிலின் விலை 1,500 ரூபாயாம்.

இவர்கள் மூவரின் பின்புலத்தையும் போலீஸார் நம்மிடம் விவரித்தார்கள். “அருணும் புகழும் 2015-ம் ஆண்டு சென்னையில் தனியார் பொறியியல் கல்லூரியில் ஒன்றாகப் படித்திருக்கிறார்கள். படிக்கும்போதே ஆந்திராவைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் மூலம் கஞ்சா போதைக்கு அடிமையாகிவிட்டார்கள். படிப்பில் கெட்டிக்காரரான அருண், படிப்பை முடித்ததும் சோளிங்கநல்லூரிலுள்ள ஐடி கம்பெனி ஒன்றில் டீம் லீடரானார். கைநிறைய சம்பளம் வாங்கினாலும், கஞ்சா போதை அருணின் வாழ்க்கையைத் தள்ளாட வைத்தது.

அருணும் புகழும் ஓரே வீட்டில்தான் தங்கியிருந்தார்கள். ஒருகட்டத்தில் இருவரும், ‘நாமே கஞ்சா பிசினஸ் செய்தால் என்ன?’ என்று யோசித்திருக்கிறார்கள். உடனே ஆந்திர மாணவர்கள் சிலர் மூலம் ஆந்திராவிலிருந்து கஞ்சா பார்சல்களை இறக்கினார்கள். தாங்கள் படித்த கல்லூரி மாணவர்கள், அவர்களின் நண்பர்கள், ஐடி நிறுவனப் பணியாளர்கள், பப்களைத் தேடிச் செல்லும் கூட்டம் எனப் புதிய நெட்வொர்க்கை அமைத்தது இவர்கள் கூட்டணி. புகழ், கஞ்சா டெலிவரியில் கைதேர்ந்தார். அப்போது இவர்களுடன் வந்து சேர்ந்தவர்தான் விஜய். அவர்தான் உணவு நிறுவன டெலிவரி நபர் என்கிற பெயரில் கஞ்சா டெலிவரி நபராக மாறினார்.

இடையே சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த புகழின் கல்லூரி நண்பர் நவோதித்தும் இந்தத் தொழிலில் சேர்ந்துகொண்டார். அவரது சொகுசு காரில் அடிக்கடி ஆந்திராவுக்குப் பயணித்தவர்கள் பழக்கூடை, அரிசி மூட்டை, டி.வி., விளையாட்டு பொம்மைகள், ஸ்டெப்னி டயர் என பல வழிகளில் கஞ்சாவை மறைத்து வைத்துக் கொண்டுவந்திருக்கிறார்கள். கொரோனா ஊரடங்கு நேரத்தில் பல வி.ஐ.பி-கள் தங்களது சொகுசு கார்களை இவர்களிடம் கொடுத்து கஞ்சா வாங்கி வரச் செய்திருக்கிறார்கள். இதனாலும் இவர்கள் செக்போஸ்ட் களில் சிக்கவில்லை.

இன்ஜினீயரிங் கல்லூரி... ஐடி கம்பெனி... கஞ்சா நெட்வொர்க்... பாதை மாற்றிய போதைப் பயணம்!

இவர்களிடம் தொடர்ச்சியாக கஞ்சா வாங்கிய சிட்லபாக்கத்தைச் சேர்ந்த சரண்ராம், வண்டலூரைச் சேர்ந்த ஆலன், விருகம்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடநாக மனோஜ் ஆகியோரையும் கைது செய்திருக்கிறோம். இவர்களில் சரண்ராம், ஊரடங்கு நாள்களில் தனது புல்லட் பைக்கிலேயே ஆந்திராவுக்குச் சென்று கஞ்சா வாங்கிவந்து தனியாக பிசினஸ் செய்திருக்கிறார். அவரிடமிருந்தும் மூன்று கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்திருக்கிறோம்.

சென்னையில் கஞ்சா விற்பனைக்காக இவர்கள் தனி வாட்ஸ்அப் குரூப், ஆன்லைன் பணப் பரிவர்த்தனையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பால், கேக், நட்ஸ் என கஞ்சாவுக்கு கோட் வேர்டெல்லாம் வைத்திருக்கிறார்கள். சங்கிலித் தொடர்போல இவர்களின் கஞ்சா விற்பனை கல்லூரி மாணவர்கள், சினிமா பிரபலங்கள், கூலித் தொழிலாளிகள் வரை சென்றது” என்ற போலீஸார் சில நிமிடங்கள் நிறுத்திவிட்டு, இவர்களின் குடும்பப் பின்னணி பற்றிப் பகிர்ந்துகொண்டார்கள். அதைக் கேட்ட நமக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“இவர்கள் பிடிபட்ட பிறகே இவர்களின் போதை உலகம் பற்றி பெற்றோர்களுக்குத் தெரிந்திருக்கிறது. தங்கள் பிள்ளைகள் சென்னையில் கெளரவமான வேலையில் இருப்பதாக மனநிறைவுடன் இருந்தவர்கள், விஷயத்தைக் கேட்டதும் கதறி அழுதார்கள். அருண், புகழ், நிவோதித் ஆகியோரின் குடும்பங்கள் வசதியானவை. அருணின் சொந்த ஊர் செஞ்சி. புகழ், திருப்பத்தூரைச் சேர்ந்தவர். புகழின் தந்தை தலைமை ஆசிரியர். தன் மகன் கஞ்சா போதைக்கு அடிமை என்கிற விஷயத்தை அவரால் நம்பவே முடியவில்லை. “நூத்துக்கணக்கான மாணவர்களை நல்வழிபடுத்துற நான், என் மகன் விஷயத்துல கவனிக்காம விட்டுட்டேனே...” என்று தலையில் அடித்துக்கொண்டு கதறி அழுதவரைத் தேற்ற முடியாமல் தவித்திருக்கிறார்கள் காவலர்கள். நிவோதித்தின் தாய், விமான சேவை நிறுவனத்தின் மேலாளர். தந்தை, தனியார் நிறுவன

ஹெச்.ஆர். இருவருமே பணம் சம்பாதிப்பதில் காட்டிய அக்கறையை தங்கள் மகனின் வளர்ப்பில் காட்டவில்லை. அண்ணாநகரில் பங்களாபோல வீடு இருந்தும் நிவோதித் அங்கு தங்குவதில்லை. நட்சத்திர ஹோட்டல்களிலும் தனி வீடுகளிலுமே தங்கியிருந்தார். இதை அவரின் பெற்றோரும் கண்டிக்கவில்லை” என்றார்கள்.

கல்லூரியில் தொடங்கிய போதைப் பழக்கம், நன்கு படித்த மாணவர்களையே போதைக்கு அடிமையாக்கியதுடன் அவர்களை ‘போதை’ வியாபாரிகளாகவும் மாற்றியிருக்கிறது. விட்டிருந்தால், இன்னும் சில காலத்தில் அவர்கள் போதை மாஃபியா கும்பலாகவும் மாறியிருப்பார்கள். கல்லூரி நிர்வாகம் தொடங்கி பெற்றோர் வரை அனைவருக்கும் இந்தச் சமூகக் குற்றத்தில் பொறுப்பு இருக்கிறது!