Published:Updated:

ஆந்திரா டு தேனி: கூரியர் மூலம் கடத்தப்பட்ட 22 கிலோ கஞ்சா! - சிக்கியது எப்படி?

கஞ்சா
News
கஞ்சா

தேனி மாவட்டத்தில் பெரிய அளவில் கஞ்சா கடத்துபவர்கள், கஞ்சாவைப் பதுக்கிவைத்து விற்பனை செய்பவர்களை விட்டுவிட்டு பெயரளவில் சில்லறை வியாபாரிகள் சிலர்மீது மட்டும் போலீஸார் வழக்கு பதிவு செய்துவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

அண்டை மாநிலமான ஆந்திராவிலிருந்து கடத்திவரப்படும் கஞ்சா, தேனி மாவட்டம் கம்பம் வழியாக கேரளாவுக்குக் கடத்தப்படுவது வாடிக்கையாக இருக்கிறது. இவ்வாறு கடத்தப்பட்டுவரும் கஞ்சா, தேனி மாவட்டத்தில் அதிகமாக விற்கப்படுகிறது. குறிப்பாக ஆந்திராவிலிருந்து டூ வீலர்கள், ஆட்டோ, காய்கறி உள்ளிட்ட சரக்கு லாரிகள், பொதுப்போக்குவரத்து வாகனங்களில் கஞ்சா கடத்திவரப்பட்டுவந்தது.

ஆந்திராவிலிருந்து வரும் வாகனங்கள் தேனி எல்லைக்குள் நுழையும்போது கடத்தல்காரர்கள் சோதனைச்சாவடிகளில் பணியிலுள்ள போலீஸார்கள் சிலரை `கவனித்து’விடுவதால் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல் வாகனங்கள் அனுப்பப்படுகின்றன எனப் புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து பெரிய அளவில் கஞ்சா கடத்துபவர்கள், பதுக்கிவைத்து விற்பனை செய்பவர்களை விட்டுவிட்டுப் பெயரளவில் சில்லறை வியாபாரிகள் சிலர்மீது மட்டும் வழக்கு பதிவு செய்துவந்ததாகவும் குற்றசாட்டு எழுந்தது. இதனால் ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்துவது தாராளமாக நடந்துவந்தது.

கஞ்சா விற்பனை
கஞ்சா விற்பனை

இந்நிலையில் ஆந்திராவிலிருந்து தேனி மாவட்டத்துக்கு கூரியர் பார்சல் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், தேனி மாவட்ட எஸ்.பி பிரவீன் உமேஷ் டோங்ரே உத்தரவின்பேரில் எஸ்.ஐ விஜயானந்த் தலைமையில் நான்கு பேர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தத் தனிப்படை தேனி மாவட்டம் முழுவதும் கூரியர் நிறுவனங்களைக் கண்காணித்து ஆய்வு மேற்கொண்டுவந்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதில் தேனி திட்டச்சாலையிலுள்ள தனியார் கூரியர் நிறுவனத்தில் கம்பம் உலகத்தேவர் தெருவைச் சேர்ந்த ஒருவருக்கு விசாகப்பட்டினத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ள பார்சலை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அந்தப் பார்சலில், இரண்டு அட்டைப் பெட்டிகளில் 22 கிலோ எடையில் 10 கஞ்சாப் பொட்டலங்கள் இருந்தன. அதைப் பறிமுதல் செய்த தனிப்படையினர் பார்சலில் இருந்த செல்போன் எண்ணைவைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தேனி எஸ்.பி
தேனி எஸ்.பி

கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனி எஸ்.பி அலுவலகத்தில் திண்டுக்கல் டி.ஐ.ஜி விஜயகுமாரி தலைமையில், தேனி எஸ்.பி பிரவின் உமேஷ் டோங்ரே முன்னிலையில் கூரியர் பார்சல் மூலம் சட்டவிரோத போதைப்பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேனி மாவட்டத்திலுள்ள பார்சல் மற்றும் கூரியர் நிறுவன மேலாளர்கள், உரிமையாளர்களுக்கு அறிவுரைகள் மற்றும் விழிப்புணர்வு கருத்துகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.