Published:Updated:

நெல்லை: பெட்ரோல் ஊற்றி பற்றவைத்த தச்சுத் தொழிலாளி மரணம்! - கட்டிய சீட்டுப்பணம் கிடைக்காததால் சோகம்

தீக்குளித்து தற்கொலை செய்த தொழிலாளி
தீக்குளித்து தற்கொலை செய்த தொழிலாளி

கஷ்டப்பட்டு உழைத்து சீட்டுக் கட்டிவந்த தச்சுத் தொழிலாளிக்கு, முதிர்வு காலத்துக்குப் பின்னரும் பணம் கிடைக்கவில்லை. அதனால் ஏமாற்றமும் வேதனையும் அடைந்த அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் இது தொடர்பான நெஞ்சைப் பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள சிவந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். தச்சுத் தொழிலாளியான இவர் மிகுந்த சிரமத்துடன் குடும்பத்தை நடத்தி வந்தார். சுய தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்த பாலசுப்பிரமணியன் அதற்காக பணம் சேகரிக்கத் தொடங்கினார்.

இரண்டு வருடங்களுக்கு முன்.... நெல்லை கந்துவட்டி தீக்குளிப்பு..! இன்றைய நிலை என்ன?

அவருக்கு அறிமுகமான மரியசெல்வம் என்பவர், தான் ஏலச்சீட்டு நடத்தி வருவதாகவும் அதில் சேர்ந்தால் லாபம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். அதை நம்பிய அவர் மரியசெல்வத்திடம் ஒரு லட்சம் ரூபாய்க்கான சீட்டில் சேர்ந்து பணம் கட்டி வந்துள்ளார்.

கஷ்டப்பட்டு உழைத்து, தவறாமல் சீட்டுப் பணத்தைக் கட்டியுள்ளார். கொரோனா காலத்துக்கு முன்பே சீட்டு முதிர்வடைந்து விட்டது. அதனால் தனக்கு ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பாலசுப்பிரமணியன் இருந்துள்ளார்.

மரியசெல்வம் வீட்டு முன்பு பாலசுப்பிரமணியம்
மரியசெல்வம் வீட்டு முன்பு பாலசுப்பிரமணியம்

ஆனால், சீட்டு நடத்தி வந்த மரியசெல்வம் முதிர்வுக்குப் பின்னரும் சீட்டுப் பணத்தைக் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார். மிகுந்த பொருளாதார நெருக்கடியில் இருந்த பாலசுப்பிரமணியன் தொடர்ந்து பணத்தைக் கேட்டுவந்தபோதிலும் அவருக்கு பணம் கிடைக்கவில்லை.

கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலை இல்லாததால் பலரிடம் கடன் வாங்கியிருந்த பாலசுப்பிரமணியனிடம் பலரும் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்த நிலையில், அவர் கட்டியிருந்த சீட்டுப் பணம் மட்டும் கைக்குக் கிடைக்கவில்லை. அதனால் தான் ஏமாற்றப்பட்டு விட்டதாக நினைத்து மிகுந்த சோகத்துடன் இருந்துள்ளார்.

Vikatan

இந்த நிலையில், பணத்தேவை காரணமாக மரியசெல்வம் வீட்டுக்குச் சென்ற பாலசுப்பிரமணியன், இன்று பணம் கொடுக்காவிட்டால் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்வதைத் தவிர வழியில்லை எனத் தெரிவித்துள்ளார். கையுடன் எடுத்துச் சென்றிருந்த பெட்ரோல் நிரப்பிய பாட்டிலையும் அவர் காட்டியுள்ளார்.

சீட்டு நடத்திய மரியசெல்வம் எதையும் கண்டுகொள்ளவோ பணம் கொடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பாலசுப்பிரமணியத்திடம் பேசக் கூட முன்வரவில்லை. அதனால் ஆத்திரமும் ஏமாற்றமும் அடைந்த அவர் கையில் இருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீயிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

பாலசுப்பிரமணியன் தீக்குளித்த பதைபதைக்க வைக்கும் காட்சி
பாலசுப்பிரமணியன் தீக்குளித்த பதைபதைக்க வைக்கும் காட்சி

உடல் முழுவதும் எரிந்ததால் பலத்த தீக்காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயமடைந்த பாலசுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி நெல்லை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

பாலசுப்பிரமணியன் தீக்குளித்தபோது அருகில் இருந்த வீட்டில் பதிவான சிசிடிவி காட்சிகள் இப்போது வெளியாகி இருக்கிறது. அதில் மரியசெல்வம் வீட்டின் வாசலின் நின்று கொண்டு பணம் கேட்கும் காட்சிகள் உள்ளன. கையில் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலுடன் நிற்கும் அவர் பேசும்போது மரியசெல்வம் வெளியே வருகிறார்.

பாலசுப்ப்பிரமணியனை கண்டுகொள்ளாத மரியசெல்வம்
பாலசுப்ப்பிரமணியனை கண்டுகொள்ளாத மரியசெல்வம்

மரியசெல்வம் எதையும் கண்டுகொள்ளாமல் வீட்டிலிருந்து வெள்யே வருவதும் போவதுமாக இருக்கிறார். உடலில் பெட்ரோலை ஊற்றியபோதும், மரியசெல்வம் தன்னுடைய பைக்கை பாதுகாப்பாக எடுத்து விடுகிறாரே தவிர பாட்டிலை தட்டிவிட முயலவில்லை. அவர் உடலில் தீப்பற்றியபோது கூட காப்பாற்ற முயற்சி செய்யாமல் வேடிக்கை பார்க்கும் காட்சிகள் வெளியாகி விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த விக்கிரமசிங்கபுரம் போலீஸார், காலசுப்ப்பிரமணியன் தீக்குளிக்கக் காரணமாக இருந்த மரியசெல்வத்தை கைதுசெய்து விசாரித்து வருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு