Published:Updated:

`வெளியில் சொல்ல வேண்டாம் என்றார்!' - கராத்தே மாஸ்டர் மீது பாலியல் புகார் அளித்த மகளை தாக்கிய தந்தை

நீலகிரி மாவட்டம் கூடலூரில் மாணவிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த கராத்தே பயிற்சியாளரை போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். புகார் கொடுத்த மாணவி மற்றும் அவரின் தாயாரை தாக்கிய மாணவியின் தந்தை உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

karate teacher
karate teacher ( Arun.K )

நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் சாபு ஆபிரகாம். 55 வயதான இவர் கராத்தே பயிற்சியாளராக இருந்துவருகிறார். கூடலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி மற்றும் தனியாகப் பயிற்சி மையம் ஒன்றை வைத்து கராத்தே பயிற்சி அளித்து வருகிறார். இந்த நிலையில், கூடலூர் விமலகிரி பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி ஒருவர், கராத்தே ஆசிரியர் சாபு ஆபிரகாம் தனக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக புகார் அளித்தார். மாணவியின் பாலியல் புகாரின் அடிப்படையில் கராத்தே பயிற்சியாளர் சாபு ஆபிரகாமிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

Gudalure police station
Gudalure police station

அப்போது, புகார் அளித்த மாணவி 9-ம் வகுப்பு வரை பள்ளியிலும் தற்போது பயிற்சி மையத்திலும் இவரிடம் கராத்தே தற்காப்புப் பயிற்சியைக் கற்று வந்தார், என்பதை உறுதி செய்தனர். மேலும், கராத்தே பயிற்சியின்போது பயிற்சியாளர் சாபு ஆபிரகாம் பாலியல் தொந்தரவு கொடுத்ததும் உறுதி செய்தனர். இந்த நிலையில் கராத்தே பயிற்சியாளர் மீது கொடுத்த பாலியல் புகாரை வாபஸ் வாங்கக்கோரி மாணவியின் தந்தை மற்றும் உறவினர்கள், மாணவியையும் அவரின் தாயாரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த மாணவி ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கூடலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸார் மாணவிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த கராத்தே பயிற்சியாளர் சாபு ஆபிரகாமை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும், பாலியல் புகார் அளித்த மாணவியைத் தாக்கியதாக அவரின் தந்தை, இரண்டு சித்தப்பாக்கள் உட்பட 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

karate teacher
karate teacher

இது குறித்து மாணவியின் உறவினர்கள் கூறுகையில், "பள்ளி நிர்வாகம் மற்றும் தேவாலய கமிட்டியிடம் புகார் அளித்துள்ளார். இரண்டு இடங்களிலும் தீர்வு கிடைக்காத நிலையில், நடந்த சம்பவம் குறித்து வெளியில் சொல்ல வேண்டாம் என மாணவியின் தந்தை கூறியுள்ளார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் இடையே கடும் பிரச்னை ஏற்பட்டது. அப்போது மாணவியின் தந்தை மற்றும் அவரின் சகோதரர்கள் சேர்ந்து மாணயையும் அவரின் தாயாரையும் தாக்கியுள்ளனர்" என்றனர்.