Published:Updated:

`அவளின் கனவு நிறைவேறாமலேயே போய்விட்டது!'- பேனரால் உயிரிழந்த ஐ.டி நிறுவன ஊழியரின் தந்தை கதறல்

`என் மகளின் மரணமே கடைசியாக இருக்கட்டும்' என்று பேனரால் உயிரிழந்த ஐ.டி. நிறுவன ஊழியரின் தந்தை ரவி கண்ணீர்மல்க கூறினார்.

Subasri
Subasri

தாம்பரத்தை அடுத்த குரோம்பேட்டை, நெமிலிச்சேரி, பவானிநகரைச் சேர்ந்தவர் ரவி. இவர் தனியார் நிறுவன ஊழியர். இவரின் ஒரே மகள் சுபஸ்ரீ (23). பி.டெக் படித்த இவர், பெருங்குடி, கந்தன்சாவடியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றிவந்தார். நேற்று மாலை பணி முடிந்து வீட்டுக்கு டூ வீலரில் வந்து கொண்டிருந்தார்.

அந்தநேரத்தில், பள்ளிக்கரணை ரேடியல் சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க. பிரமுகர் ஜெயகோபால் இல்லத் திருமண வரவேற்பு பேனர் சரிந்து விழுந்தது. அந்தச் சமயத்தில் பைக்கில் வந்த சுபஸ்ரீ மீது பேனர் விழுந்துள்ளது. இதனால், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அந்தவழியாக வந்த தண்ணீர் லாரியின் டயரில் சுபஸ்ரீ சிக்கினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர், உயிருக்குப் போராடினார். உடனடியாக அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சுபஸ்ரீயை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவர் இறந்துவிட்டார்.

Subasri
Subasri

இதுகுறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து லாரியை ஓட்டிவந்த பீகாரைச் சேர்ந்த மனோஜை (25) கைது செய்தனர். அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டதாகக் கூறி பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் மாநகராட்சியின் உதவி செயற்பொறியாளர் புகார் கொடுத்தார். அதன்பேரில் அ.தி.மு.க. பிரமுகர் ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``பேனரால் உயிரிழந்த சுபஸ்ரீ, கனடா செல்வதற்காகத் தேர்வு எழுதியிருந்தார். விரைவில் அவர் வெளிநாடு செல்லவும் திட்டமிட்டிருந்தார். ஆனால், அவரின் ஆசை நிறைவேறவில்லை. பிரேதப் பரிசோதனை முடிந்து சுபஸ்ரீயின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்ட விவகாரத்தில் அ.தி.மு.க. பிரமுகர் ஜெயகோபால் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், ``சுபஸ்ரீ மெதுவாகத்தான் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். தலையில் ஹெல்மெட்டும் போட்டிருந்தார். அப்போது காற்று வேகமாக வீசியதில் சாலையின் தடுப்புச் சுவரில் இருந்த பேனர் அவர் சென்ற டூவீலரின் மீது விழுந்தது. இதனால் சுபஸ்ரீ கீழே விழுந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த லாரி, சுபஸ்ரீ மீது மோதியது. லாரி டிரைவர் பிரேக் அடித்திருந்தால் சுபஸ்ரீ பிழைத்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக பேனர் வைக்கப்படுகிறது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இந்தத் திருமண விழாவுக்கு வந்து மணமக்களை வாழ்த்தினார். இந்தச் சம்பவத்தில் நீதிமன்றத்தின் உத்தரவு மீறப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்" என்கின்றனர் கொதிப்புடன்.

அ.தி.மு.க பேனர்
அ.தி.மு.க பேனர்
`நீதிமன்ற உத்தரவில் அலட்சியம்!'- சென்னையில் இளம்பெண் உயிரைப் பறித்த பேனர்

சுபஸ்ரீ மரணத்தையடுத்து பேனரை அச்சடித்த அச்சகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்தச் சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று வழக்கை விசாரித்தது. அப்போது `தமிழகத்தில் எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் விதிகளை மீறி பேனர்கள் வைப்பது தொடர்கதையாக உள்ளது. உயிரிழப்புக்கு 2 லட்சம் ரூபாய் கருணைத் தொகை கொடுத்துவிட்டால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் எனக் கருதுகின்றனர். மாநகராட்சி அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் இன்று நேரில் ஆஜராக வேண்டும்' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அ.தி.மு.க. பிரமுகர் ஜெயகோபால், காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளராக பதவி வகித்துவருகிறார். இவர் முன்னாள் கவுன்சிலர். இவரின் மகனின் திருமணத்துக்கு வரும் கட்சியினரை வரவேற்கத்தான் பள்ளிக்கரணை ரேடியல் சாலையின் தடுப்புச் சுவர் முழுவதும் கட்சிக் கொடியையும் பேனர்களையும் வைத்துள்ளார். ஆளுங்கட்சி என்பதால் பேனர் வைப்பதற்கு முறையான அனுமதியைப் பெறவில்லை. சுபஸ்ரீ மரணத்துக்குப்பிறகு உடனடியாக அனைத்து பேனர்களும் அகற்றப்பட்டுவிட்டன.

 சுபஸ்ரீயின் உயிரைப்பறித்த பேனர்.
சுபஸ்ரீயின் உயிரைப்பறித்த பேனர்.

சுபஸ்ரீயின் தந்தை ரவி, செய்தியாளர்களிடம் கூறுகையில், ``பி.டெக் படித்து முடித்துள்ள என் மகள், வெளிநாடு செல்ல வேண்டும் என்ற ஆசையில் இருந்தார். ஆனால், பேனர் விழுந்ததில் அவர் இறந்துவிட்டார். என்னுடைய ஒரே மகளை இழந்து குடும்பமே தவிக்கிறது. பேனர் உயிரிழப்புக்கு என் மகளின் மரணமே கடைசியாக இருக்கட்டும்" என்றார் கண்ணீருடன்.