Published:Updated:

கொரோனா: `செவிலியர் உடலைப் புதைக்கக் கூடாது!’ - ராணிப்பேட்டை தி.மு.க பிரமுகர் மீது வழக்கு

தி.மு.க பிரமுகர் கிருஷ்ணமூர்த்தி
தி.மு.க பிரமுகர் கிருஷ்ணமூர்த்தி

கொரோனாவால் உயிரிழந்த செவிலியரின் உடலைப் புதைக்க எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க பிரமுகர் உட்பட 6 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ராணிப்பேட்டை நவல்பூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆற்காடு அரசு மருத்துவமனையில் செவிலியராகச் சேவையாற்றி வந்தார். இந்தநிலையில், கொரோனா வார்டில் பணியிலிருந்த அவரின் உடல்நிலை கடந்த 1-ம் தேதி திடீரென மோசமானது. கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, உடனடியாக அவர் வேலூரில் உள்ள சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி 2-ம் தேதி மரணமடைந்தார்.

செவிலியர் அர்ச்சனா
செவிலியர் அர்ச்சனா

மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அவரின் உடலை அடக்கம்செய்ய ராணிப்பேட்டை நவல்பூரில் உள்ள சி.எஸ்.ஐ தூய மரியாள் கல்லறைத் தோட்டத்துக்கு சுகாதாரப் பணியாளர்கள் நேற்று கொண்டு சென்றனர். 12 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டி கிருமிநாசினி தெளித்து அவரின் உடலை அடக்கம் செய்யும் நேரத்தில், அப்பகுதியைச் சேர்ந்த சில பிரமுகர்கள் அங்கு திரண்டு சடலத்தைப் புதைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். போலீஸாரும் அதிகாரிகளும் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக எடுத்துச் சொல்லியும் அவர்கள் தகராறில் ஈடுபட்டதுடன் போராட்டத்திலும் குதித்தனர்.

கொரோனா அச்சம்: சென்னையில் 5 மணி நேரம் பிளாட்பாரத்தில் கிடந்த முதியவர் சடலம்!

பின்னர், காவல்துறையினரின் கடுமையான எச்சரிக்கையைத் தொடர்ந்து அந்தப் போராட்டக் கும்பல் அங்கிருந்து கலைந்து சென்றது. அதன் பின்னரே, செவிலியரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், செவிலியரின் உடலைப் புதைக்க விடாமல் தடுத்த தி.மு.க பிரமுகரான குட்டி என்கிற கிருஷ்ணமூர்த்தி உட்பட 6 பேர் மீது ராணிப்பேட்டை போலீஸார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

செவிலியரின் உடல்
செவிலியரின் உடல்

குட்டி என்கிற கிருஷ்ணமூர்த்தி என்பவர் ராணிப்பேட்டை நகரமன்ற முன்னாள் தலைவராகவும், தி.மு.க-வில் நகரச் செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார். செவிலியரின் சடலத்தைப் புதைக்கவிடாமல் தடுத்து ஆபாசமாகப் பேசியது, அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்தது என்பன உட்பட 5 பிரிவுகளின்கீழ் தி.மு.க பிரமுகர் தலைமையிலான அந்தக் கும்பல் மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது. இதை முன்கூட்டியே தெரிந்துகொண்ட தி.மு.க பிரமுகர் கைது நடவடிக்கைக்குப் பயந்து தலைமறைவாகிவிட்டதாக ராணிப்பேட்டை போலீஸார் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு