Published:Updated:

திருப்போரூர்: `நிலத்தகராறு; துப்பாக்கிச்சூடு!’ - தி.மு.க எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு

தி.மு.க எம்.எல்.ஏ இதயவர்மன்
தி.மு.க எம்.எல்.ஏ இதயவர்மன்

``தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மன், அவரின் தந்தை லட்சுமிபதி துப்பாக்கியைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர். சட்டமன்ற உறுப்பினர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவரைக் கைது செய்வோம்.”

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக இருப்பவர், தி.மு.க-வைச் சேர்ந்த இதயவர்மன். அதே பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர், குமார். அம்மாவட்டத்தில் உள்ள செங்காடு கிராமத்தில் குமார் சில பிளாட்டுகளை விற்பனை செய்து வந்துள்ளார். ஆனால், அவரது பிளாட்டுக்கு செல்லும் பாதையில் சிலர் பிரச்னைகள் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதைச் சரி செய்ய அவர் முயன்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், இதயவர்மன், குமார் ஆகியோருக்கு இடையே பிரச்னை நிலவியதாகக் கூறப்படுகிறது. பொதுமக்களும் இந்தப் பாதை தொடர்பான பிரச்னையில் ஈடுப்பட்டதால் அதிகாரிகள் ஏற்கெனவே இதுதொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிகள்
துப்பாக்கிகள்
Twitter

இந்த நிலையில், பிரச்னைக்குரிய நிலப்பகுதியில் கால்வாய் அமைப்பது தொடர்பாகக் குமார் தரப்புக்கும் தி.மு.க சட்டமன்ற உறுப்பினரான இதயவர்மன், அவருடைய தந்தை லட்சுமிபதி, ஊர் பொதுமக்கள் ஆகியோருக்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டு வாக்குவாதம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வாக்குவாதம் பின்னர் மோதலாக மாறியுள்ளது. குமாரின் தரப்பு இதயவர்மனின் தரப்பினரைத் தாக்கியதாகவும் இதயவர்மனின் தந்தை லட்சுமிபதி தன்னிடமிருந்த துப்பாக்கியால் குமாரின் தரப்பினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், அப்பகுதி வழியாகச் சென்ற ஸ்ரீனிவாசன் என்பவர் மீது குண்டுபாய்ந்து பலத்த காயமடைந்துள்ளார். இந்த கோஷ்டிமோதல் சம்பவம், துப்பாக்கிச்சூடு ஆகியவை அப்பகுதியில் அதிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

`கன்னத்தில் அடித்தார், பதிலுக்கு நானும் அறைந்தேன்' -பெண் எம்எல்ஏ, ஒ.செ மோதலால் வெளிவந்த பண விவகாரம்

இரு தரப்பினரும் இந்தச் சம்பவம் தொடர்பாகப் புகார் அளித்துள்ளனர். காயமடைந்த ஸ்ரீனிவாசன் என்பவரும் எம்.எல்.ஏ மீது புகார் அளித்துள்ளார். இதையடுத்து, சம்பவம் தொடர்பாகப் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் பேசும்போது, ``திருப்போரூரில் நடந்த கோஷ்டி மோதல் தொடர்பாக நான்கு டி.எஸ்.பி-க்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 2 பேரை இதுவரை கைது செய்துள்ளோம். தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மன், அவரின் தந்தை லட்சுமிபதி ஆகியோர் துப்பாக்கியைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர். சட்டமன்ற உறுப்பினர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவரைக் கைது செய்வோம்” என்று தெரிவித்தார்.

Representational Image
Representational Image

இதயவர்மன் தந்தை மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குமார் தரப்பினர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள், குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களைக் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த அனைவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கட்டுக்கட்டாக 2000 ரூபாய் பணத்துடன் சிக்கிய திமுக எம்எல்ஏ?- சுற்றிவளைத்து பிடித்த நாங்குநேரி மக்கள்

இந்தநிலையில், சென்னை வேளச்சேரியை அடுத்த மேடவாக்கத்தில் இதயவர்மன் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு