Published:Updated:

சென்னை: `ஒரு வங்கியில் திருட்டு; இன்னொரு வங்கியில் பேக் மீட்பு' - பணத்துடன் எஸ்கேப் ஆன இளைஞர்

வங்கியில் வாடிக்கையாளர்போல நிற்கும் இளைஞர்
வங்கியில் வாடிக்கையாளர்போல நிற்கும் இளைஞர்

சென்னை ஆவடியில் ஒரு வங்கியில் பேக்கைத் திருடிவிட்டு, அடுத்த வங்கியில் அந்த பேக்கை மட்டும் வைத்திருக்கிறார் ஓர் இளைஞர். அந்த பேக்கை மீட்டபோது அதிலிருந்த பணம் திருட்டுப் போயிருந்தது.

சென்னை ஆவடி, காந்திநகரைச் சேர்ந்தவர் காந்தம்மாள் (58). இவர் அந்தப் பகுதியின் ஆவின் பால் முகவராக இருக்கிறார். மேலும், ஆவடி புதிய ராணுவ சாலையிலுள்ள வங்கியிலும் தற்காலிகப் பணியாளராகப் பணியாற்றிவருகிறார். வழக்கம்போல திங்கள்கிழமை வங்கிக்கு வந்த காந்தம்மாள், தன்னுடைய பேக்கில் பால் கலெக்‌ஷன் தொகை 95,000 ரூபாயை வைத்திருந்தார். பேக்கைத் தன்னுடைய இருக்கையில் வைத்துவிட்டு, வங்கி வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது வங்கியில் கூட்டம் அலைமோதியது.

காந்தம்மாள்
காந்தம்மாள்

இந்தநிலையில் வேறு ஒரு வேலைக்காகத் தன் இருக்கையிலிருந்து எழுந்து சென்ற காந்தம்மாள், பின்னர் தன்னுடைய இடத்துக்கு வந்தார். அப்போது அவரின் இருக்கையில் வைத்திருந்த பேக்கைக் காணவில்லை. அதனால் அதிர்ச்சியடைந்த காந்தம்மாள், வங்கியிலுள்ளவர்களிடம் விவரத்தைக் கூறினார். உடனடியாக வங்கியிலுள்ள சிசிடிவி கேமராவை வங்கி ஊழியர்கள் ஆய்வு செய்தனர். அப்போது வங்கியில் வாடிக்கையாளர்போல வரிசையில் காத்திருந்த இளைஞர் ஒருவர், காந்தம்மாளின் பேக்கைத் திருடிக்கொண்டு வெளியில் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

இந்தநிலையில் காந்தமாளுக்கு அவரின் பேரன் போன் செய்திருக்கிறார். அப்போது போனை எடுத்த நபர், இந்த போனும் ஒரு பேக்கும் எங்கள் வங்கியில் இருப்பதாக, வேறு ஒரு வங்கியின் பெயரைக் கூறியிருக்கிறார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காந்தம்மாளின் பேரன், பைக்கில் வங்கிக்கு வந்தார். பாட்டியிடம் விவரத்தைக் கேட்டபோதுதான் பேக் திருட்டுப்போன தகவல் தெரியவந்தது. இதையடுத்து போனில் பேசியவர் கூறிய விவரத்தின்படி அந்த வங்கிக்குச் சென்ற காந்தம்மாளும் அவரின் பேரனும் பேக்கை மீட்டனர். அதிலிருந்த பணம் மட்டும் திருட்டுப்போயிருந்தது.

சிசிடிவியில் சிக்கிய இளைஞர்
சிசிடிவியில் சிக்கிய இளைஞர்
Vikatan

மற்றபடி பேக்கிலிருந்த செல்போன், மதியச் சாப்பாடு ஆகியவை அப்படியே இருந்தன. இதையடுத்து அந்த வங்கியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். அப்போது காந்தம்மாள் வேலை பார்த்த வங்கியில் பேக்கைத் திருடிய இளைஞர், அதை அருகிலுள்ள இன்னொரு வங்கியில் வைத்துவிட்டுச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதையடுத்து காந்தம்மாள், ஆவடி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸாரும் சிசிடிவி கேமரா பதிவுகள் அடிப்படையில் பணத்தைத் திருடிய இளைஞரைத் தேடிவருகின்றனர். எதற்காக ஒரு வங்கியில் திருடிய பேக்கை இன்னொரு வங்கியில் இளைஞர் வைத்தார் என்ற கேள்வி, போலீஸாருக்கும் காந்தம்மாளுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு