கோவை காந்திபுரம் பகுதியில் மருத்துவர் ராமசந்திரன் என்பவருக்குச் சொந்தமாக எலன் மருத்துவமனை இயங்கிவந்தது. இதை, சென்னையைச் சேர்ந்த மருத்துவர் உமா சங்கர் என்பவருக்குக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாதம் ரூ.15 லட்சம் வாடகை மற்றும் ஜி.எஸ்.டி கட்டணம் அடிப்படையில் 2027-ம் ஆண்டு வரை வாடகைக்குவிட்டிருந்தார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
எலன் மருத்துவமனை தற்போது `சென்னை மருத்துவமனை’ என்கிற பெயரில் இயங்கிவருகிறது.
கொரோனா முதல் அலை காலகட்டத்தில் ராமசந்திரன் மற்றும் உமாசங்கர் இடையே பிரச்னை வெடித்ததாகச் சொல்லப்படுகிறது. உமாசங்கர் வாடகைத் தொகையை செலுத்தாமல், மருத்துவமனையை வேறு ஒருவருக்கு உள்வாடகைக்கு விட முயன்று தனக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படுத்துவதாக ராமசந்திரன் கோவை போலீஸில் புகார் அளித்தார்.

அந்த விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே, வாடகை கேட்டதால் உமாசங்கர் ரெளடிகளை வைத்து மருத்துவமனையை சேதப்படுத்தியதாக ராமசந்திரன் காவல் நிலையத்தில் மேலும் ஒரு புகார் அளித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதனடிப்படையில் உமாசங்கர், அவர் மேலாளர் மருதவாணன் உள்ளிட்டோரை போலீஸ் கைதுசெய்தது. பிறகு ஜாமீனில் வெளிவந்த உமாசங்கர் ரத்தினபுரி காவல் நிலையத்தில் தினசரி கையெழுத்திட்டு வந்தார். கடந்த ஆண்டு கையெழுத்திட நடந்து வந்துகொண்டிருக்கும்போது, உமாசங்கர் கார் மோதி உயிரிழந்தார்.

அந்த மரணத்தில் ஏராளமான மர்மங்கள் எழுந்தன. “ராமச்சந்திரன் தரப்பில் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. மருத்துவமனையை எங்களிடமிருந்து அபகரிக்க அரசியல் மற்றும் காவல்துறையுடன் இப்படிச் செய்கின்றனர்” என்று உமாசங்கர் தரப்பில் கூறப்பட்டது.
முக்கியமாக, அப்போது ஆளுங்கட்சியாக இருந்த அமைச்சர் ஒருவரின் சகோதரர் கண்ணசைவில் இந்த வழக்கு நடப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர். ஆட்சி மாறியதும் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. இதில் மருத்துவமனையைக் கைப்பற்ற ராமச்சந்திரன் ஆட்களை வைத்து மருத்துவமனையைத் தாக்கியது தெரியவந்தது.

இதையடுத்து மருத்துவர் ராமச்சந்திரன், காமராஜ், முருகேஷ், பழனிசாமி, மூர்த்தி உள்ளிட்ட ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். விரைவில் இந்த வழக்கில் தவறுக்கு உடந்தையாக இருந்த அரசியல் மற்றும் காவல்துறை புள்ளிகள் சிக்க வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.