Published:Updated:

மூன்று மாதக் காத்திருப்பு! - நெல்லை முன்னாள் மேயர் கொலையில் தி.மு.க பிரமுகர் கைது

தமிழகத்தை உலுக்கிய நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட மூன்று பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தி.மு.க பெண் பிரமுகர் சீனியம்மாள் அவரது கணவர் சன்னாசி ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

 நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி
நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி

நெல்லை மாநகராட்சியில் கடந்த 1996 முதல் 2011-ம் ஆண்டு வரை தி,மு.க சார்பாக மேயராகப் பொறுப்பு வகித்த உமா மகேஸ்வரி, தனது கணவர் முருகசங்கரனுடன் புறநகர்ப் பகுதியில் குடியிருந்து வந்தார். கடந்த ஜூலை 23-ம் தேதி வீட்டில் இருந்த உமா மகேஸ்வரி, முருகசங்கரன், பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் கொடூரமாகக் குத்திக் கொல்லப்பட்டனர்.

கணவர் முருகசங்கரனுடன் உமா மகேஸ்வரி
கணவர் முருகசங்கரனுடன் உமா மகேஸ்வரி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. எந்தத் துப்பும் இல்லாத அளவுக்கு மிகவும் துல்லியமாகத் திட்டமிட்டு இந்தக் கொலைச் சம்பவம் நடந்திருந்தது. அதனால் குற்றவாளியைக் கைது செய்வதில் சிரமம் ஏற்பட்டது. அத்துடன், ஆதாயத்துக்காக இந்தக் கொலை நடந்திருக்குமோ என்றும் போலீஸார் சந்தேகித்தனர்.

போலீஸின் 24 மணி நேர கண்காணிப்பில் சீனியம்மாள்!- உமா மகேஸ்வரி கொலையில் அடுத்த நடவடிக்கை என்ன?

கொலைச் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் காரணம் இருக்கக்கூடும் என்கிற சந்தேகம் வலுவாக எழுந்ததால், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீஸுக்கு மாற்றப்பட்டது. அதன்பின்னர் கொலை நடந்த வீட்டின் அருகிலிருந்த கடை, தேவாலயம் உள்ளிட்டவற்றில் இருந்த சிசிடிவி பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தார்கள். அதில், தி.மு.க கொடிகட்டிய கார் ஒன்று அந்தப் பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில், கொலை நடந்த நேரத்தில் அந்தப் பகுதியில் சென்று வந்தது தெரியவந்தது.

சி.பி.சி.ஐ.டி அலுவலகம்
சி.பி.சி.ஐ.டி அலுவலகம்
எல்.ராஜேந்திரன்

அதன் பின்னர் அந்தப் பகுதியில் உள்ள செல்போன் டவரில் பதிவாகியிருந்த எண்களைச் சோதனையிட்டதில், சந்தேகத்துக்குரிய காரின் உரிமையாளரின் செல்போனில் இருந்து நீண்டநேரம் பேசப்பட்டிருப்பது தெரியவந்தது. அதனடிப்படையில் தி.மு.க ஆதிதிராவிட நலக்குழுச் செயலாளரான சீனியம்மாளின் மகன் கார்த்திக் ராஜாவைக் கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஆரம்பத்திலேயே சீனியம்மாள் மீது போலீஸாருக்குச் சந்தேகம் இருந்தது. தேர்தலில் சீட் வாங்கிக் கொடுப்பதற்காக சீனியம்மாள் மூலம் ஒருவரிடமிருந்து 50 லட்சத்தைப் பெற்றுக்கொண்ட உமா மகேஸ்வரி, சீட்டையும் வாங்கிக் கொடுக்காததுடன், பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. அதனால் அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், கார்த்திக் ராஜா கைது செய்யப்பட்டார்.

தி.மு.க நிர்வாகி சீனியம்மாள்
தி.மு.க நிர்வாகி சீனியம்மாள்

தனது தாயின் அரசியல் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உமா மகேஸ்வரி இருந்ததால் அவர் மீது ஏற்பட்ட கோபத்தில் கொலையைச் செய்ததாகவும் அப்போது தடுக்க முயன்ற அவரது கணவர் முருகசங்கரனைக் கொன்றதாகவும் போலீஸாரிடம் கார்த்திக் ராஜா தெரிவித்தார். இந்தக் கொலையைச் செய்த பின்னர் வீட்டிலிருந்து வெளியேற முயன்றபோது பணிப்பெண் வந்துவிட்டதால் அவரையும் கொன்றதாகத் தெரிவித்திருந்தார்.

உமா மகேஸ்வரி கொலையின் பின்னணியில் மேலும் சிலருக்குத் தொடர்பு இருக்கும் என போலீஸார் நினைத்தார்கள். ஆனால், அதற்கான சாட்சியங்கள் கிடைக்காததால் போலீஸார் காத்திருந்தனர். மூன்று மாதங்கள் பொறுமையாக இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரித்து வரும் நிலையில், சீனியம்மாள், அவரது கணவர் சன்னாசி ஆகியோர் கொலைக்குத் தூண்டுதலாக இருந்தது தெரியவந்துள்ளது.

சீனியம்மாளின் மகன் கார்த்திக் ராஜா
சீனியம்மாளின் மகன் கார்த்திக் ராஜா

சிறையில் இருப்பதால் மனதளவில் குழப்பமடைந்துள்ள கார்த்திக் ராஜாவிடம் சக கைதிகள் மூலம் போலீஸார் உண்மைகளைக் கண்டறியும் முயற்சியில் இறங்கினார்கள். அதனால் அவருக்கு உறுதுணையாக இருக்கும் கைதிகளிடம் அவர் மனம்விட்டுப் பேசத் தொடங்கியிருக்கிறார். அப்போது, தனது தாயும் தந்தையும் தன்னிடம் பல முறை உமா மகேஸ்வரி குறித்து புகார் தெரிவித்தது தொடர்பாகவும், அவர்களின் வலியுறுத்தல் காரணமாகவே கொலையைச் செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மேயர் உமா மகேஸ்வரியைக் கொலை செய்யத் திட்டம் வகுத்தது தொடர்பான ஆதாரங்கள் சிலவற்றையும் சிறையில் உள்ள கூட்டாளிகளிடம் கார்த்திக் ராஜா தெரிவித்துள்ளார். அதற்குத் தேவையான ஆதாரங்களை அனைத்தையும் கைப்பற்றிய பின்னர் தி.மு.க பிரமுகரான சீனியம்மாள், அவரது கணவர் சன்னாசி ஆகியோரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் இன்று கைது செய்தார்கள்.

சி.பி.சி.ஐ.டி அலுவலகம்
சி.பி.சி.ஐ.டி அலுவலகம்

கொலைச் சம்பவம் நடந்த மூன்று மாதங்களுக்குப் பின்னர் காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவரிடமும் நெல்லையில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் கூடுதல் தகவல்கள் கிடைத்ததாக சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் தெரிவித்தனர். தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் மேயர் கொலை வழக்கில் சொந்தக் கட்சி நிர்வாகியே கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.