Published:Updated:

காசி வழக்கு: சிபிசிஐடி விசாரணையில் சிக்கும் நண்பர்கள்! -கோட்டைவிட்டதா போலீஸ்?

சிபிசிஐடி போலீஸ் விசாரணையில் காசி
சிபிசிஐடி போலீஸ் விசாரணையில் காசி

காசி உட்பட 3 பேர் மட்டுமே குற்றவாளிகள் எனவும், காசி மட்டுமே பெண்களை வன்கொடுமை செய்ததாகவும், மற்ற இருவரும் வீடியோ வெளியிட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், சிபிசிஐடி விசாரணையில் திடீர் திருப்பமாக காசியின் மற்றொரு நண்பர் தினேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூக வலைதளங்கள் மூலம் பெண்களுக்குக் காதல் வலை வீசி அவர்களுடன் நெருக்கமாக இருப்பதும். அந்த சமயத்தில் எடுக்கும் வீடியோக்களை வைத்துக்கொண்டு பெண்களை மிரட்டி பணம் பறிப்பதும். பணம் கொடுக்க மறுக்கும் பெண்களின் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு மோசடி செய்த வழக்கில் நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்ற சுஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட காசி மீது சிறுமி உட்பட 5 பெண்கள் புகார் கொடுத்துள்ளனர். மேலும், ஒரு கந்துவட்டி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. காசி மீது குண்டர்ச் சட்டம் பாய்ந்த நிலையில் இன்னும் புகார்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

காசியை போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தியபோது அவருக்கு உதவியதாக மேலும் 2 நண்பர்களை அவர் அடையாளம் காட்டியுள்ளார். அதில் ஒருவரான டேசன் ஜினோ கைது செய்யப்பட்டார். மற்றொருவரான கெளதம் வெளிநாட்டில் இருப்பதால் அவர் ஊருக்கு வரும்போது கைது செய்ய போலீஸார் திட்டமிட்டிருந்தனர். மேலும் அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. காசி வழக்கை விசாரித்த போலீஸார் காசி மற்றும் 2 நண்பர்கள் மட்டுமே பெண்களை ஏமாற்றி மோசடி செய்துள்ளதாகவும். அதில் காசி மட்டுமே பெண்களுடன் நெருக்கமாக இருந்ததாகவும் தெரிவித்தனர். மற்ற இரண்டு நண்பர்களும் காசி பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவைக் குறிப்பிட்டு பணம் கேட்டு மிரட்டுவதுடன், வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்ததாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட காசியின் நண்பன் தினேஷ்
கைது செய்யப்பட்ட காசியின் நண்பன் தினேஷ்

இந்தநிலையில் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பெண்களையும் காசி ஏமாற்றியதால் அவரது இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி.ஸ்ரீநாத் பரிந்துரை செய்தார். இதையடுத்து காசி வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி எஸ்.பி. அனில்குமார் தலைமையில் போலீஸார் இந்த வழக்கில் விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிசிஐடி போலீஸார் கடந்த சில நாள்களுக்கு முன்பு காசி மற்றும் அவரது நண்பர் டேசன் ஜினோ ஆகியோரை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின்போது மேலும் சில நண்பர்கள் குறித்து காசி தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில் காசியின் வீடு இருக்கும் நாகர்கோவில் கணேசபுரம் தெருவைச் சேர்ந்த தினேஷ் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். காசி பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து அவர்களிடம் பணம் பறிப்பார். பணம் கொடுக்க மறுக்கும் பெண்களின் வீடியோக்களை தினேஷுக்கு அனுப்பி அவர்களை மிரட்டும்படி காசி கூறுவாராம். தினேஷ் அந்த வீடியோக்களைப் பயன்படுத்தி காசியால் ஏமாற்றப்பட்ட பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளாராம்.

கைது செய்யப்பட்ட காசி என்ற சுஜி
கைது செய்யப்பட்ட காசி என்ற சுஜி

மேலும், அந்தப் பெண்களிடம் பணம் பறிக்கும் செயலிலும் ஈடுபட்டிருக்கிறார் தினேஷ். தினேஷின் தந்தை நாகர்கோவில் பகுதியில் பேக்கரி நிறுவனங்கள் நடத்திவருகிறார். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் காசி உட்பட 3 பேர் மட்டுமே குற்றவாளிகள் எனவும், காசி மட்டுமே பெண்களை வன்கொடுமை செய்தான், மற்ற இருவரும் இணையதளத்தில் வீடியோ வெளியிட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், சிபிசிஐடி விசாரணையில் திடீர் திருப்பமாக காசியின் மற்றொரு நண்பர் தினேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சில நண்பர்கள் சிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளதால் காசி வழக்கு மீண்டும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு