Published:Updated:

காசி வழக்கு: மெமரிகார்டு, ஹார்ட் டிஸ்க் ஆவணங்கள் அழிப்பு! சிபிசிஐடி வளையத்தில் தந்தை

சுஜி என்கிற காசி
சுஜி என்கிற காசி

காசி, பெண்களுடன் நெருக்கமாக இருந்த படங்கள் இருந்த ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை சேதப்படுத்தி தடயங்கள் அளிக்கப்பட்டுள்ளன. காசியின் தவறுகளுக்கு உடந்தையாக இருந்ததால் சிபிசிஐடி அவர் தந்தையைக் கைது செய்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காசி என்ற சுஜி. இவர் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் தொடங்கி அதன் மூலம் பெண்களிடம் நட்பாகப் பழகியுள்ளார். பின்னர், அவர்களைக் காதலிப்பதாக நடித்து அவர்களோடு தனியாக இருப்பதும், அதை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிப்பது தொடர் கதையாக இருந்தது. பல ஆண்டுகளாக நடந்த இந்த மோசடி குறித்து பெண்கள் புகார் அளிக்க முன்வராமல் இருந்தனர். இதனால் காசியின் ஆட்டம் தொடர்ந்தது. இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவரை காதலித்து நெருக்கமாக இருந்ததுடன் அவரிடம் பணம் கேட்டு காசி மிரட்டியிருக்கிறார். பணம் கொடுக்காததால் பெண் மருத்துவரின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் காசி. இது குறித்து பெண் மருத்துவர் நாகர்கோவில் எஸ்.பி.யிடம் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து காசி கைது செய்யப்பட்டார். காசி கைது செய்யப்பட்ட பிறகு, சிறுமி உட்பட மேலும் 4 பெண்கள் காசிமீது புகார் அளித்தனர். அதுமட்டுமல்லாது காசியின் நண்பரான வடசேரி பகுதியைச் சேர்ந்த டிராவிட் என்ற இளைஞர் கந்துவட்டி புகார் அளித்தார். காசியிடம் 2 லட்சம் ரூபாய் வட்டிக்கு வாங்கியதாகவும். அந்தப் பணத்துக்கு கந்து வட்டி வசூலித்ததுடன், பணத்துக்கு ஈடாகத் தனது 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஹார்லி டேவிட்சன் பைக்கை அபகரித்ததாக அந்தப் புகாரில் கூறியிருந்தார். இதையடுத்து காசி மீது கந்துவட்டி வழக்கு பாய்ந்தது. மேலும், காசி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

காசியின் தந்தை தங்கபாண்டியன்
காசியின் தந்தை தங்கபாண்டியன்

சென்னை, பெங்களூர் உள்ளிட்ட இடங்களைச் சேர்ந்த பெண்களை காசி ஏமாற்றியதால் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் எனக் குமரி மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாத் பரிந்துரை செய்தார். இதையடுத்து சிபிசிஐடிக்கு காசி வழக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீஸார் காசியின் அனைத்து வழக்குகளையும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் காசியின் நண்பன் டேசன் ஜினோ ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டிருந்தார். மற்றொரு நண்பரான கெளதம் வெளிநாட்டில் இருப்பதால் அவரைக் கைது செய்வதற்காக விமான நிலையங்களுக்கு லுக்அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி விசாரணையில் காசியின் வீடு இருக்கும் கணேசபுரம் தெருவைச் சேர்ந்த தினேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். காசியால் ஏமாற்றப்படும் பெண்களை மிரட்டி தினேஷும் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் காசியின் தந்தை தங்கபாண்டியனை சிபிசிஐடி போலீஸார் இன்று கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, ``காசியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட மெமரி கார்டுகள், மொபைல் போன், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை சைபர் கிரைம் உதவியுடன் ஆய்வு செய்யப்பட்டது. காசி பெண்களுடன் நெருக்கமாக இருந்த படங்கள் இருந்த ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை சேதப்படுத்தி தடயங்கள் அழிக்கப்பட்டுள்ளன. மேலும், காசியின் லேப் டாப்பை தங்கபாண்டியன் தனது கோழிப்பண்ணையில் மறைத்து வைத்து ஆவணங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

காசி என்ற சுஜி
காசி என்ற சுஜி

அதுமட்டுமல்லாது டிராவிட்டுக்கு வட்டிக்கு பணம் கொடுத்த சமயத்தில் ஹார்லி டேவிட்சன் பைக் மற்றும் நிரப்பப்படாத காசோலையைப் பெற்றுக்கொண்டு பணம் கொடுத்துள்ளார். டிராவிட் வட்டியுடன் கடனை திருப்பி செலுத்தியும் பைக் மற்றும் காசோலையை ஒப்படைக்காமல் இருந்துள்ளனர். இதற்கு காசியின் தந்தை தங்கபாண்டியன் உதவியுள்ளார். காசியின் தவறுகளுக்கு துணைபோனதால் தங்கபாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு