Published:Updated:

சாத்தான்குளம்: விரிவடையும் மகேந்திரனின் வழக்கு விசாரணை- விழிபிதுங்கும் போலீஸார்!

மகேந்திரனின் தாயார், சகோதரியிடம் விசாரணை
மகேந்திரனின் தாயார், சகோதரியிடம் விசாரணை

சாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டைக் கொலைக்கு முன்பாக அதே சர்ச்சைக்குரிய போலீஸாரின் தாக்குதலில் உயிரிழந்த மகேந்திரனின் வழக்கு தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள். இதனால், சம்பந்தப்பட்ட போலீஸார் கலக்கம் அடைந்துள்ளனராம்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட தெற்குபேய்க்குளம், ஆசீர்வாதபுரத்தைச் சேர்ந்தவர் வடிவு. இவரின் கணவர் சுந்தரம், 2009-ம் ஆண்டு உடல் நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் துரை, மகேந்திரன் ஆகிய இரண்டு மகன்கள், மகள் சந்தனமாரி ஆகிய மூவருடன் வாழ்ந்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தன் மகளுக்கும் மூத்த மகன் துரைக்கும் திருமணம் முடித்து வைத்தார். மகள், தூத்துக்குடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மூத்த மகன் துரை, தாய் வீட்டுக்கு அருகிலேயே மனைவி, 3 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

டி.எஸ்.பி  அனில்குமார்
டி.எஸ்.பி அனில்குமார்

இந்நிலையில், கடந்த மே 18-ம் தேதி எஸ்.வெங்கடேஸ்வரபுரம் ஊராட்சியின் 6-வது வார்டு உறுப்பினர் ஜெயக்குமார் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கில் வடிவுவின் மூத்தமகன் துரையும் சம்பந்தப்பட்டிருக்கிறார் எனக்கூறி அவரை போலீஸார் தேடிச் சென்றுள்ளனர். அப்போது வீட்டில், துரை இல்லாததால் கட்டட வேலைக்காக நெல்லை மாவட்டம் பாப்பாங்குளத்தில் தன் சித்தி சந்திராவின் வீட்டில் தங்கியிருந்த மகேந்திரனைக் கடந்த மே 23-ம் தேதி நள்ளிரவில் உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் தலைமையிலான போலீஸார், சாத்தான்குளம் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ஒருநாள் விசாரணைக்குப் பிறகு 24-ம் தேதி இரவில் மகேந்திரனை விடுவித்தனர். வீட்டிற்கு வந்த மகேந்திரன், உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதைத்தொடர்ந்து ஜூன் 11-ம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அவரின் சகோதரி சந்தனமாரி உதவியுடன் மகேந்திரன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், ஜூன் 13-ம் தேதி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் மகேந்திரன் உயிரிழந்தார். மகேந்திரன் உயிரிழந்த பிறகும் போலீஸார் மிரட்டியதால், அவரது உடல் பிரேதப்பரிசோதனை செய்யப்படாமல் அவரது சமுதாய முறைப்படி எரியூட்டப்பட்டது. இந்தச் சூழலில் 19-ம் தேதி சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் விஸ்வரூபம் எடுத்தது. உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.

விசாரணை
விசாரணை

இவ்வழக்கில் சி.பி.சி.ஐ.டி, சி.பி.ஐ விசாரணைகளும் அடுத்தடுத்து உறுதி செய்யப்பட்டன. இதையறிந்த மகேந்திரனின் தாயார் வடிவு, `சாத்தான்குளத்தில் போலீஸாரால் தந்தை, மகன் அடித்து துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது போலவே என்னுடைய மகனும் துன்புறுத்தப்பட்டு உயிரிழந்துள்ளார். எனவே, என் மகனுடைய இறப்பு சம்பவத்தையும் நீதிமன்றம் விசாரித்து நீதி வழங்க வேண்டும்’ எனக் கோரி தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வழியாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

சாத்தான்குளம்: மகேந்திரன் வழக்கு; விசாரணையைத் தொடங்கிய சி.பி.சி.ஐ.டி! கலக்கத்தில் போலீஸார்

அதன் அடிப்படையில் மாவட்ட நீதிமன்றம் இலவச சட்ட ஆலோசகர் ஒருவரை வடிவு அம்மாளுக்கு நியமித்து உத்தரவிட்டிருந்தது. இந்தச் சூழலில் வடிவு அம்மாளுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் ராமசாமி, ஜெயச்சந்திரன் ஆஜராவதற்கு முன்வந்துள்ளனர். இவ்வழக்கை தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இதையடுத்து, இவ்வழக்கு தொடர்பான ஆவணங்களை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஜெயக்குமாரிடம் சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி அனில்குமார் பெற்றுக்கொண்டார்.

மகேந்திரன் & அவரின் தாயர் வடிவு
மகேந்திரன் & அவரின் தாயர் வடிவு

தொடர்ந்து, தூத்துக்குடி கே.வி.கே நகரில் உள்ள மகேந்திரனின் சகோதரி சந்தனமாரி வீட்டில் சந்தனமாரி, அவர் தாயார் வடிவு ஆகியோரிடம் டி.எஸ்.பி அனில்குமார் தலைமையிலான குழுவினர் இரண்டு நாள்களாக சுமார் 7 மணிநேரம் விசாரணை மேற்கொண்டனர்.``போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து வந்தபோது நடக்கக்கூட முடியாமத்தான் வந்தான்.

ஒரு வாரம் வீட்ல படுத்தபடுக்கையாவே இருந்தான். லத்தி அடியில் தலையில பலமா அடிப்பட்டதுனால மூளைக்குப் போகுற நரம்புல ரத்தம் உறைஞ்சுருக்குன்னு டாக்டர்கள் சொன்னாங்க. ஆஸ்பத்திரியில சேர்த்த மூணாவது நாளே இறந்துட்டான். மகன் இறந்த தகவல் தெரிஞ்சதும் திரும்பவும் அந்த எஸ்.ஐ ரகுகணேஷ், வீட்டுக்கு வந்து மிரட்டிட்டுப் போனார். மகேந்திரன் மேல இதுவரைக்கும் எந்த கேஸும் இல்ல. விசாரிக்கணும்னு கூட்டிட்டுப் போயி இப்படி அடிச்சுக் கொன்னுட்டாங்க” எனக் கதறி அழுதபடியே, மகேந்திரனின் தாயாரும் சகோதரியும் டி.எஸ்.பி அனில்குமாரிடம் நடந்ததைக் கூறியுள்ளனர்.

வழக்கறிஞர்களுடன் மகேந்திரனின் தாயார், சகோதரி
வழக்கறிஞர்களுடன் மகேந்திரனின் தாயார், சகோதரி

அத்துடன், மகேந்திரனின் மெடிக்கல் ரிப்போர்ட், ஸ்கேன் ரிப்போர்ட்களையும் எடுத்துக் காட்டியுள்ளனர். தொடர்ந்து மகேந்திரனின் சொந்த ஊரான ஆசீர்வாதபுரம் ஊர்மக்கள், தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் எனப் பலதரப்பினரிடமும் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். ஏற்கெனவே, சி.பி.சி.ஐ.டி மற்றும் சி.பி.ஐ விசாரணையால் விழிபிதுங்கியுள்ள சம்பந்தப்பட்ட போலீஸார்கள், மகேந்திரனின் வழக்கும் தூசி தட்டப்பட்டுள்ளதால் மேலும் கலக்கம் அடைந்துள்ளார்களாம்.

அடுத்த கட்டுரைக்கு