Published:Updated:

`சீல் பிரிக்கப்பட்ட OMR சீட்; 2 மேஜிக் பேனா!' -சிபிசிஐடி அதிகாரிகளை மிரளவைத்த 4 முரண்பாடுகள்

டிஎன்பிஎஸ்சி அலுவலகம்
டிஎன்பிஎஸ்சி அலுவலகம்

குரூப் 4 முறைகேட்டில் சிபிசிஐடி தாக்கல் செய்துள்ள எப்.ஐ.ஆர் நகல்கள் வெளியாகியுள்ளன. டிஎன்பிஎஸ்சி செயலாளர் பாலசுப்பிரமணியன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மாநில அரசுக்கு எதிரான குற்றமாக 14 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டுள்ளனர். முறைகேடு செய்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள், மோசடிக்கு உடந்தையாக இருந்தவர்கள், இடைத்தரகர்கள் எனப் பலர் இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். முகப்பேரைச் சேர்ந்த இடைத்தரகர் ஜெயக்குமார், காவலர் சித்தாண்டி, பூபதி, முத்துக்குமார், அரசு ஊழியர்கள் ஓம்காந்தன், மாணிக்கவேல், திருக்குமரன் உட்பட 50 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதில், ஓம்காந்தன், ஜெயக்குமார் ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் அளித்த தகவல்கள் வாக்குமூலமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எழும்பூர்  நீதிமன்றத்துக்கு வந்த ஜெயக்குமார்
எழும்பூர் நீதிமன்றத்துக்கு வந்த ஜெயக்குமார்

இதற்கிடையே, குரூப் 4 முறைகேட்டில் சிபிசிஐடி தாக்கல் செய்துள்ள எப்.ஐ.ஆர் நகல்கள் வெளியாகியுள்ளன. டிஎன்பிஎஸ்சி செயலாளர் பாலசுப்பிரமணியன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மாநில அரசுக்கு எதிரான குற்றமாக 14 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அந்த எப்.ஐ.ஆரில், ``ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் சென்டர்களில் தேர்வு எழுதியவர்கள் தேர்வானதில் முரண்பாடு இருப்பதாகச் செய்திகள் வெளியானதை அடிப்படையாகக் கொண்டு டிஎன்பிஎஸ்சி இதுதொடர்பாக முதல்கட்ட விசாரணை நடத்தினார்கள்.

முறைகேடு செய்தி வெளிவந்தபிறகு சம்பந்தப்பட்ட 9 தேர்வு மையங்களில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நேரடியாக வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள கருவூலங்களிலும் அதிகாரிகள் ஆய்வு செய்திருக்கிறார்கள். அந்த ஆய்வில் வினாத்தாள் எண்ணிக்கையில் முரண்பாடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், வினாத்தாள் வைக்கப்பட்டிருந்த கவரில் சீல் எடுக்கப்பட்டதாக இருந்தது. எனவே, வினாத்தாளை முன்கூட்டியே எடுத்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வு
டிஎன்பிஎஸ்சி தேர்வு

தேர்வு மையங்களிலிருந்து அனுப்பப்படும் ஓஎம்ஆர் ஷீட் வினாத்தாள்கள் ஒரு கவரில் வைத்து அனுப்பப்படும். ஆனால், ராமேஸ்வரம், கீழக்கரைப் பகுதி தேர்வு மையங்களிலிருந்து அனுப்பப்பட்ட ஓஎம்ஆர் ஷீட் கவர் தைக்கப்பட்ட விதம் வேறு மாதிரியாக இருக்கிறது. அதேபோல் தேர்வு மையத்தில் வைக்கப்படும் சீல் பிரிக்கப்பட்டு வேறு மாதிரியான சீல் அந்த கவர்களில் வைக்கப்பட்டுள்ளன. இவ்வளவு விஷயங்கள் முரண்பாடாக உள்ளன. இதன்பிறகு விடைத்தாள்களில் முரண்பாடு இருந்த ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரைப் பகுதிகளைச் சேர்ந்த 99 தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

விசாரணையில் முத்துக்குமரன் என்பவர் அளித்த தகவலின்படியே அழியக்கூடிய பேனா மூலமாக இந்த முறைகேடு நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. முத்துக்குமரனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முறைகேடு செய்வதற்காக அவர் இடைத்தரகர் ஜெயக்குமாரை அணுகியுள்ளார். அவர் மூலம் மேலும் இரண்டு இடைத்தரகர்களிடம் முத்துக்குமரன் தொடர்புகொண்டு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் மேலும் சில இடைத்தரகர்களும் இதில் ஈடுபட்டது கண்டுபிக்கப்பட்டது. இந்த இடைத்தரகர்கள்தான் தேர்வர்களை ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரையில் உள்ள குறிப்பிட்ட சென்டர்களைத் தேர்வு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் இவர்கள் தேர்வு நடைபெறுவதற்கு முந்தைய நாள் ஒரு பேனாவும், தேர்வின் போது ஒரு பேனாவையும் தேர்வர்களுக்குக் கொடுத்துள்ளனர். இதில் ஒரு பேனா குறிப்பாக ஓஎம்ஆர் ஷீட்டின் மேல் பகுதி விவரங்களை நிரப்புவதற்காகவே கொடுக்கப்பட்டுள்ளன. இன்னொரு பேனாவோ, ஓஎம்ஆர் ஷீட்டில் விடைகளைக் குறிப்பதற்காகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதேபோல் விடைத்தாளில் ஒரே வினாவுக்கு இரண்டு விடைகள் குறிக்கப்பட்டதும் ஆய்வில் தெரியவந்தன. இதைத் தேர்வர் முத்துக்குமரனும் ஒப்புக்கொண்டுள்ளார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு