Published:Updated:

``எல்லாம் அப்பாவுக்குதான் தெரியும்!” - சி.பி.சி.ஐ.டி விசாரணையில் கதறிய இர்ஃபான்

தர்மபுரி மருத்துவக் கல்லூரியில் ஆள்மாறாட்டம் செய்து சேர்ந்த இர்ஃபான் என்பவரை தேனி சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை செய்தனர்.

Irfan
Irfan

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த குற்றத்துக்காக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவரான தர்மபுரி மருத்துவக் கல்லூரியில் ஆள்மாறாட்டம் செய்து சேர்ந்த இர்ஃபான் என்பவரை தேனி சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை செய்தனர்.

Irfan
Irfan
நீட் ஆள்மாறாட்ட வழக்கு- இர்ஃபானுக்கு ஒருநாள் போலீஸ் காவல்; 4 பேருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு!

முன்னதாக, தர்மபுரி மருத்துவக் கல்லூரியில் படித்துவந்த இர்ஃபான், நீட் ஆள்மாறாட்ட விவகாரம் வெளியே தெரிந்தவுடன் தலைமறைவானார். அவர், மொரீசியஸ் நாட்டுக்குத் தப்பிச் சென்றதாகவும் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து இர்ஃபானின் தந்தை முகமது சஃபி கைது செய்யப்பட்டார். வாணியம்பாடியில் போலி மருத்துவராக சஃபி உலாவந்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில், கடந்த 1-ம் தேதி சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார் இர்ஃபான்.

Theni Court
Theni Court

அவரை அக்டோபர் 9-ம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றக் காவல் முடிந்து கடந்த 10-ம் தேதி ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் இர்ஃபான். அதைத்தொடர்ந்து, தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர், அக்டோபர் 15-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் தேனி சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் இருந்த இர்ஃபானிடம் விசாரணை செய்ய, தேனி சி.பி.சி.ஐ.டி தரப்பில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் விசாரணைக்கு ஐந்து நாள்கள் தேவை எனவும் குறிப்பிடப்பட்டது. அம்மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இர்ஃபானை விசாரிக்க ஒரு நாள் மட்டுமே சி.பி.சி.ஐ.டி-க்கு அனுமதியளித்தார். அதைத்தொடர்ந்து மதியம் 3.15 மணிக்கு தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்துக்கு அழைத்துவரப்பட்ட இர்ஃபானிடம், விசாரணை நடைபெற்றது.

Irfan
Irfan

சுமார் 6.30 மணியளவில் விசாரணை முடிந்து மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர், சிறையில் அடைக்கப்பட்டார்.

மூன்றரை மணி நேரம் மட்டுமே நடந்த விசாரணையில் என்ன நடந்தது என சி.பி.சி.ஐ.டி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ``தனக்கு எதுவும் தெரியாது. எல்லாம் அப்பாவுக்குதான் தெரியும் எனக் கூறி அழுதார். வேற ஒன்றும் சொல்லவில்லை” என்றார்.

Irfan
Irfan

நீட் ஏஜென்ட் ரஷித்தை உதித்சூர்யாவுக்கும், அவரின் தந்தை வெங்கடேசனுக்கு அறிமுகப்படுத்தியது இர்ஃபானின் தந்தை முகமது சஃபிதான் என்பது குறிப்பிடத்தக்கது.