Published:Updated:

சாத்தான்குளம்: மகேந்திரன் வழக்கு விசாரணையில் தீவிரம் காட்டும் சி.பி.சி.ஐ.டி போலீஸார்!

விசாரணைக்கு ஆஜராக வந்த நண்பர்கள், உறவினர்கள்
விசாரணைக்கு ஆஜராக வந்த நண்பர்கள், உறவினர்கள்

சாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டைக் கொலைக்கு முன்பாக அதே சர்ச்சைக்குரிய போலீஸாரின் தாக்குதலில் உயிரிழந்த மகேந்திரனின் வழக்கு தொடர்பாக உறவினர்கள், நண்பர்களிடம் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாத்தான்குளத்தில் போலீஸாரின் தாக்குதலால் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தை மதுரை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. தொடர்ந்து இவ்வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு பின்னர், சி.பி.ஐ ஏ.டி.எஸ்.பி சுக்லா தலைமையிலான 7 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த இரட்டைக்கொலை வழக்கு தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவத்துக்கு 20 நாள்களுக்கு முன்பாக சாத்தன்குளம் அருகிலுள்ள ஆசீர்வாதபுரத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு அதே போலீஸாரால் தாக்கப்பட்டார்.

மகேந்திரன் - தயார் வடிவு
மகேந்திரன் - தயார் வடிவு

ஒருநாள் முழுவதும் காவல்நிலையத்தில் துன்புறுத்தப்பட்ட மகேந்திரன், மறுநாள் வீட்டுக்குச் சென்றதில் இருந்து உடல்நலக்குறைவால் பாதிக்கபட்டவர், 10 நாள்களில் உயிரிழந்தார். போலீஸாரின் மிரட்டலால் இச்சம்பவம் அப்படியே அமுங்கிப்போனது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணை விஸ்வரூபம் எடுத்த நிலையில், மகேந்திரனின் தாயார் வடிவு, தன் மகன் உயிரிழப்புக்கும் அதே சர்ச்சைக்குரிய போலீஸார்தான் காரணம். மகனின் இறப்புக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் எனத் தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வழியாக மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இம்மனு மீதான விசாரணையில், `இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டுள்ளது’ என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி அனில்குமார் தலைமையிலான குழுவினர், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஜெயக்குமாரிடம் இவ்வழக்கு தொடர்பான ஆவணங்களைப் பெற்று விசாரணையைத் தொடங்கி, நடத்தி வருகின்றனர். மகேந்திரனின் தாயார் வடிவு, சகோதரி சந்தனமாரி ஆகியோரிடம் தூத்துக்குடியிலுள்ள சந்தனமாரியின் வீட்டில் 2 நாள்களாக விசாரணை நடைபெற்றது. மகேந்திரனின் சொந்த ஊரான ஆசீர்வாதபுரத்திலுள்ள ஊர் மக்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இன்று மகேந்திரனின் மைத்துனர்கள் ராஜா, கண்ணன் மற்றும் மகேந்திரனின் நண்பர்கள் மணி, மாடசாமி ஆகியோரிடம் தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் டி.எஸ்.பி அனில்குமார் விசாரணை நடத்தினார்.

தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி அலுவலகம்
தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி அலுவலகம்

விசாரணையில், ``பேய்க்குளம் அருகிலுள்ள வெங்கடேஸ்வராபுரம் ஊராட்சியின் 6-வது வார்டு உறுப்பினர் ஜெயக்குமார், கடந்த மே 18-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கில் வடிவு அம்மாளின் மூத்த மகன் துரையும் சம்பந்தப்பட்டிருக்கிறார் எனக் கூறி அவரை சாத்தான்குளம் போலீஸார் தேடிக்கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார்கள். அங்கு அவர் இல்லாததால், அவரது தம்பி மகேந்திரனைத் தேடினர்.

கட்டட வேலைக்காக நெல்லை மாவட்டம் பாப்பாங்குளத்தில் அவரது சித்தி வீட்டில் தங்கியிருந்த மகேந்திரனை கடந்த ஜூன் 23-ம் தேதி இரவில் சாத்தான்குளம் போலீஸார் அடித்து இழுத்து வண்டியில் ஏற்றி வந்துள்ளனர். மறுநாள்தான் (24-ம் தேதி) விடுவிக்கப்பட்டார். போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து வந்தபோது நடக்கக்கூட முடியாமத்தான் வந்தான் மகேந்திரன். வீட்டுக்கு வந்த பிறகு உடல் நலக்குறைவால் ரொம்ப அவதிப்பட்டான். தலைச்சுற்றல், மயக்கம் இருந்ததால், ஜூன் 11-ம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மகேந்திரனை அனுமதித்தோம். ஆனால், ஜூன் 13-ம்தேதி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் மகேந்திரன் உயிரிழந்தார். உயிரிழந்த பிறகும் போலீஸார் குடும்பத்தினரையும் எங்களையும் மிரட்டினார்கள். இதனால், அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்படாமலேயே அவரது சமுதாய முறைப்படி எரியூட்டப்பட்டது. ஒரு வாரம் வீட்ல படுத்த படுக்கையாவே இருந்தான். லத்தி அடியில் தலையில பலமா அடிப்பட்டதுனால மூளைக்குப் போகுற நரம்புல ரத்தம் உறைஞ்சுருக்குன்னு டாக்டர்கள் சொன்னாங்க. ஆஸ்பத்திரியில சேர்த்த மூணாவது நாளே இறந்துட்டான்.

மகேந்திரனின் நண்பர்கள், உறவினர்கள்
மகேந்திரனின் நண்பர்கள், உறவினர்கள்

அவன் இறந்த தகவல் தெரிஞ்சதும் திரும்பவும் அந்த எஸ்.ஐ ரகுகணேஷ், வீட்டுக்கு வந்து மிரட்டிட்டுப் போனார். மகேந்திரன் மேல இதுவரைக்கும் எந்த வழக்குமே கிடையாது” எனக் கூறியுள்ளனர் அவரின் நண்பர்கள். மகேந்திரனை கைது செய்த நெல்லை மாவட்டம் பாப்பாங்குளத்தில் நாளை விசாரணை நடத்த உள்ளனர். இவ்வழக்கு விசாரணையில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் தீவிரம் காட்டி வருவதால், சாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள போலீஸார், இவ்வழக்கிலும் சம்பந்தப்பட்டிருப்பதால் மேலும் கலக்கம் அடைந்துள்ளனராம்.

அடுத்த கட்டுரைக்கு