Published:Updated:

சாத்தான்குளம்: மகேந்திரன் வழக்கு; விசாரணையைத் தொடங்கிய சி.பி.சி.ஐ.டி! கலக்கத்தில் போலீஸார்

சாத்தான்குளம்
சாத்தான்குளம்

சாத்தான்குளம் சம்பவத்திற்கு முன்பாகவே கொலைவழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, அதே சர்ச்சைக்குரிய எஸ்.ஐ-க்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்ததாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக ஆவணங்களைப் பெற்று, விசரணையை துவக்கியுள்ளனர் சி.பி.சி.ஐ.டி போலீஸார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் போலீஸாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த தந்தை, மகன் கொலை வழக்கை சி.பி.ஐ ஏ.டி எஸ்.பி விஜய்குமார் சுக்லா தலைமையிலான குழு, தற்போது விசாரித்து வருகிறது. இச்சம்பவம் நடைபெறுவதற்கு சுமார் 20 நாள்களுக்கு முன்பே பேய்குளம் அருகிலுள்ள ஆசீர்வாதபுரத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரை, ஜெயக்குமார் என்பவரது கொலை வழக்கு தொடர்பாக விசாரணை செய்வதற்காக அதே சாத்தான்குளம் காவல்நிலையத்தைச் சேர்ந்த எஸ்.ஐ-க்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் ஆகியோர் அழைத்துச் சென்றுள்ளனர்.

உயிரிழந்த மகேந்திரன் - அவர் தாயார் வடிவு
உயிரிழந்த மகேந்திரன் - அவர் தாயார் வடிவு

ஒருநாள் முழுவதும் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டு மறுநாள் விடுவிக்கப்பட்டார். போலீஸார் தாக்கியதில் அடுத்த சில நாள்களில் மகேந்திரன் உயிரிழந்தார். போலீஸாரின் மிரட்டலால் இச்சம்பவம் வெளியில் தெரியவில்லை. இதுகுறித்து, `ஜூனியர்விகடன்’ இதழில் எழுதியிருந்தோம்.

சாத்தான்குளம் சம்பவம் விஸ்வரூபம் எடுத்த பிறகே இச்சம்பவம் வெளியில் தெரிய ஆரம்பித்தது. மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மகேந்திரனின் தாயார் வடிவு, இதுகுறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இம்மனு மீது நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. `இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது’ என அரசு தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் கூறினார். இந்நிலையில், இன்று சி.பி.சி.ஐ.டி டி,எஸ்.பி அனில்குமார் இவ்வழக்கு தொடர்பான ஆவணங்களை மாவட்ட எஸ்.பி ஜெயக்குமாரிடமிருந்து பெற்றுக் கொண்டார். மகேந்திரனின் தாயார் வடிவு, ``என் மகன் மகேந்திரன் எந்த வழக்கிலும் சிக்காதவர்.

சர்ச்சைக்குரிய போலீஸார்
சர்ச்சைக்குரிய போலீஸார்

ஒரு கொலை வழக்கு விசாரணைக்காக, என் மூத்த மகன் துரையைத் தேடிவந்த அந்த எஸ்.ஐ-க்கள், அவன் வீட்டில் இல்லாததால், இளைய மகன் மகேந்திரனை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். ஒருநாள் விசாரணைக்குப் பிறகுதான் வீட்டிற்கு அனுப்பினார்கள். வீட்டுக்கு வரும்போதே காயங்களுடன்தான் வந்தான். அவன் நிலைமையைப் பார்த்து அரசு மருத்துவமனையில சிகிச்சைக்கு அனுமதிச்சோம். ஆனா, இறந்துபோயிட்டான். சி.பி.சி.ஐ.டி விசாரணையால் என் மகனின் இறப்புக்கு நீதி கிடைக்கும்னு நம்புறேன்” என்றார்.

சாத்தான்குளம் இரட்டைக்கொலை... இறுகும் விசாரணை... அடுத்த ‘அரெஸ்ட்’ பட்டியல் ரெடி!

ஏற்கெனவே சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 10 போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். சி.பி.ஐ அதிகாரிகளின் விசாரணையால் விழி பிதுங்கியுள்ளனர். இந்நிலையில்,``சாத்தான்குளம் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட போலீஸார் மீது புகார்கள் அளிக்கப்பட்டால், தூத்துக்குடி ஏ.டி.எஸ்,பி செல்வன் தலைமையில் விசாரிக்கப்படும்” என மாவட்ட எஸ்.பி ஜெயக்குமாரும் கூறியுள்ளார்.

சாத்தான்குளம் காவல் நிலையம்
சாத்தான்குளம் காவல் நிலையம்

இதற்கிடையில், வேறொரு வழக்கில் கைதாகி அதே போலீஸார் தாக்கியதில் காயமடைந்த ராஜாசிங் என்பவரின் புகாரின் அடிப்படையில், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் ஆகியோர் மீது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐக்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் ஆகியோர் மீது தொடரும் புகார்களாலும் வழக்குகளாலும் கலக்கம் அடைந்துள்ளார்களாம்.

அடுத்த கட்டுரைக்கு