Published:Updated:

சென்னை: சாட்டையைச் சுழற்றிய நீதிமன்றம்... சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜரான டிஜிபி!

டிஜிபி அலுவலகம்
டிஜிபி அலுவலகம்

தமிழக காவல்துறையில் இளம்பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் சிக்கிய டிஜிபி-யிடம் சிபிசிஐடி போலீஸார் இன்று விசாரணை நடத்தினர்.

முதல்வர் பாதுகாப்புப் பணிக்காகச் சென்ற டிஜிபி ஒருவர், இளம் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை தன்னுடைய காரில் ஏற்றிக்கொண்டு சென்றிருக்கிறார். பின்னர் காருக்குள் வைத்து டிஜிபி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் ஐ.பி.எஸ் அதிகாரி உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோரிடம் புகாரளித்தார். அதன்பேரில் சிபிசிஐடி போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். இளம்பெண் ஐ.பி.எஸ் அதிகாரி, டிஜிபி மீது புகார் அளிக்க சென்னைக்கு வந்தபோது செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி கண்ணன் தலைமையில் போலீஸார் அவரை வழிமறித்த விவரத்தையும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். அதனால் எஃப்.ஐ.ஆரில் செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் மற்றும் அவருடன் சென்ற போலீஸாரின் பெயர்களும் இடம்பிடித்திருந்தன.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

மேலும் இளம்பெண் ஐ.பி.எஸ் அதிகாரியின் மாமனாருக்கு போன் செய்து டிஜிபி-க்கு ஆதரவாக கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த எஸ்.பி ஒருவரும் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். அந்தத் தகவலும் எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தநிலையில் இந்த வழக்கைத் தாமாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்றம் எடுத்து விசாரித்தது. அப்போது இந்த வழக்கின் விசாரணையை நீதிமன்றம் நேரிடையாகக் கண்காணிக்கும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில் செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் இடமாற்றம் செய்யப்பட்டார். அடுத்த சில மணி நேரத்திலேயே அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதும் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் சிக்கிய டிஜிபி மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில் பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகளில் சிலர் டிஜிபி-யைச் சந்தித்து பேசினர். சிபிசிஐடி போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துவிட்டு முதற்கட்ட விசாரணையத் தொடங்கியிருந்தனர். இந்தச் சமயத்தில்தான் இந்த வழக்கு விசாரணை நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்க வந்த பெண் அதிகாரியைத் தடுத்தார் என செங்கல்பட்டு எஸ்.பி-யை மட்டும் பணியிடை நீக்கம் செய்த நிலையில், குற்றச்சாட்டுக்கு உள்ளான டிஜிபி-யை சஸ்பெண்ட் செய்யாதது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், விசாரணை அறிக்கையை மார்ச் 16-ல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி சிபிசிஐடி போலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

இந்தநிலையில் சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு ஆஜராகும்படி டிஜிபி-க்கு சம்மன் அனுப்பினர். அதன்படி இன்று எழும்பூரிலுள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு டிஜிபி வந்தார். அவரிடம் விசாரணை அதிகாரியான முத்தரசி விசாரணை நடத்தினார். அப்போது பெண் ஐ.பி.எஸ் அதிகாரியின் புகார் தொடர்பாக டிஜிபியிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர் அளித்த பதில்களை போலீஸார் பதிவுசெய்துகொண்டனர். விசாரணைக்குப் பிறகு டிஜிபி புறப்பட்டுச் சென்றார். இதையடுத்து பெண் ஐ.பி.எஸ் அதிகாரி குற்றம்சாட்டிய எஸ்.பி-க்கள் மற்றும் காவல்துறையினரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தவுள்ளனர். அதன் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும் என சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு