Published:Updated:

சென்னை: தொழிலதிபரைக் கடத்தி சித்ரவதை! -போலீஸ் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர்மீது வழக்கு பதிவு

போலீஸ்
போலீஸ்

சென்னை தொழிலதிபரைக் கடத்தி சித்ரவதை செய்ததோடு, அவரின் பெயரிலிருந்த சொத்துகளை எழுதி வாங்கிய குற்றச்சாட்டில் போலீஸ் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

சென்னை அயப்பாக்கம். 5-வது தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ். தொழிலதிபர். இவர் தேனாம்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேசன், அப்போதைய திருமங்கலம் உதவி கமிஷனர் சிவகுமார், இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் உட்பட 10 பேர் மீது டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோருக்கு சில மாதங்களுக்கு முன்பு ஒரு புகாரை அனுப்பியிருந்தார். இந்தப் புகார் தொடர்பாக விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் சி.பி.சி.ஐ.டி உதவி கமிஷனர் கண்ணன் தலைமையிலான போலீஸார் விசாரித்தனர்.

டிஜிபி அலுவலகம்
டிஜிபி அலுவலகம்

விசாரணை அறிக்கையை டி.ஜி.பி-யிடம் சி.பி.சி.ஐ.டி போலீஸார் சமர்ப்பித்தனர். டி.ஜி.பி-யின் உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள்மீது ஆள்கடத்தல் கொலை மிரட்டல் சொதுகளை அபகரித்தல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அடுத்தகட்டமாக துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vikatan

இது குறித்து சி.பி.சி.ஐ.டி போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``புகாரளித்த ராஜேஷுக்கும் குற்றம் சுமத்தப்பட்ட வெங்கடேசனுக்கும் தொழில், பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாகப் பிரச்னை இருந்துவந்தது. வெங்கடேசன் தரப்பு கொடுத்த புகாரின்அடிப்படையில், அப்போதைய திருமங்கலம் உதவி கமிஷனர் சிவகுமார், இன்ஸ்பெக்டர் சரவணன், சப்இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் உட்பட சிலர் ராஜேஷ், அவரின் குடும்பத்தினரைச் சட்டவிரோதமாக பண்ணை வீட்டில் அடைத்துவைத்து சித்ரவதை செய்திருக்கின்றனர். பின்னர் ராஜேஷின் பெயரில் இருந்த சொத்துகளை மிரட்டி எழுதி வாங்கியிருக்கின்றனர்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம்
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம்

சொத்துகள் கைமாறிய விவரங்கள், கடத்தப்பட்டபோது பதிவான சிசிடிவி கேமரா பதிவுகள், செல்போன் அழைப்புகள் உள்ளிட்டவற்றை ஆதாரமாக டி.ஜி.பி-க்கு ராஜேஷ் அனுப்பிவைத்தார். அதன்பிறகுதான் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரித்தபோது ராஜேஷ் கூறிய புகாரில் முகாந்திரம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையைச் சேர்ந்தவர்கள் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறோம். சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளோம். இந்தச் சம்பவத்தில் ராஜேஷின் வருங்கால மனைவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் குற்றச்சாட்டப்பட்டிருக்கிறது. ராஜேஷு, அவரின் குடும்பத்தினரும் சென்னையைவிட்டு கொங்கு மண்டலத்துக்குக் குடிபெயர்ந்திருக்கின்றனர்" என்றார்.

தமிழக காவல்துறையினர் குற்றசாட்டுகளில் சிக்குவது தொடர்கதையாகிவருகிறது.

அடுத்த கட்டுரைக்கு